name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

திங்கள், ஜனவரி 20, 2020

தமிழ் (28) மொழிச் சிதைவுக்கு இடம் தரலாகாது ! (02)

பேச்சு மொழிபேசுவதற்கு மட்டுமேஅதை எழுத்தில் கொண்டு வரக் கூடாது !



ஒவ்வொரு மொழிக்கும் ஒரு திட்டவட்டமான அடிப்படைக் கட்டமைப்புக் கூறு (BASIC STRUCTURE) உள்ளது. அந்தக் கட்டமைப்புக் கூறு பின்பற்றப்படும் வரை அந்த மொழியின் பண்புகள் மாறாமலிருக்கும். எப்பொழுது அந்தக் கட்டமைப்புக் கூறு சிதைக்கப்படுகிறதோ, அப்பொழுது அந்த மொழியின் பண்புகளைக் கூறு போட்டுக் கொண்டு பிறிதொருமொழி உண்டாகிவிடுகிறது !

இந்தக் கட்டமைக்குப் பெயர் தான் இலக்கணம். நாம் பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் இலக்கணம் உள்ளது. மரம் என்பது இடுகுறிப் பெயர். மலர் என்பது காரணப் பெயர். பெயர்ச் சொல், வினைச்சொல், உரிச் சொல், இடைச்சொல் என இலக்கணத்தின் அடிப்படை விரிவானது. இலக்கண வரம்புக்கு உட்பட்டு இலங்குவது மட்டுமே சொல். வரம்புக்கு உட்படாமல் பிதுங்கி வழிவனவற்றைச் சொற்களெனக் கருதக்கூடாது !

சொற்களே ஒரு மொழியை அடையாளம் காட்டுவன. மொழியை அடையாளம் காட்ட இயலாத எந்தச் எழுத்துத் தொகுதியும்சொல்என்னும் பண்பை இழந்துவிடுகிறது. கடற்கரைக்குச் செல்கிறாயா என்று ஒரு சிறுவனிடம் கேட்டால், அதற்கு அவனுக்குப் பொருள் புரிகிறது. ”ஆம்என்கிறான். “பீச்சாங்கரிக்கிப் போறியாஎன்றால் அவனுக்கு பொருள் புரிவதில்லை ! பொருளுடன் அமைந்த சொற்களே ஒரு மொழிக்கு வளம் சேர்ப்பன !

ஒவ்வொரு மொழியிலும் எழுத்து மொழியிலிருந்து பேச்சு மொழி சற்று வேறுபட்டிருத்தல் இயல்பே ! இதற்கான காரணங்களை ஆய்வு செய்வதற்கான இடமும் நேரமும்  இஃதன்று ! பேச்சு மொழி, பேசுவதற்கு மட்டுமே; அதை எழுத்தில் கொண்டு வரக் கூடாது. எழுத்துமொழி எழுதுவற்கு மட்டுமன்றிப் பேசுவதற்கும் பயன்படுகிறது !

சென்னையில் வாழையடி வாழையாக  வாழ்ந்து வரும் சில மக்களுடன் பேசிப் பாருங்கள். ”நாஸ்டா துண்ணுட்டியா ?” “இட்டுகிணு போறியா?”  ,”தூத்தேறி ! கஸ்மாலம்”, ” ஊட்ல சொல்லிகிணு வந்த்ட்டியா?” “வலிச்சிகிணு வாரியா?” ”பீச்சாங்கரிக்கு போவுமா?”, “மூண்ணாளா ஒரே ஜல்ப்புப்பா  கலிப்பா கீது  என்பன போன்ற பேச்சு மொழிகளை நீங்கள் கேட்க முடியும்.! இந்தச் சொற்களெல்லாம் எந்தத் தமிழ்  அகரமுதலியில் இருக்கின்றன என்று உங்களால் சொல்ல முடியுமா ?

சேலம் பக்கம் சென்று பாருங்கள். ”அவனோட ஒரே  ராவடியாப் போச்சு” , “என்னமா  ரவுசுப் பண்றான்”, ”அங்கே ஒரே கலீஜாருக்கும்”, என்னும் பேச்சு மொழிகளைக் கேட்க முடியும். இந்தச் சொற்கள் எந்தத் தமிழ் அகரமுதலியில் இருக்கின்றன ?

திருச்சிக்குப் போய்ப் பாருங்கள். காய்க் கடைக்காரர், “ஏம்மா ! காயி கீயி வாங்கலியா?” என்று கேட்பதைக் காணமுடியும். “காயி, கீயிஎன்ற சொற்கள் எந்த அகரமுதலியில் இருக்கின்றன ?

மதுரைப் பக்கம், இடக்கரான ஒரு சொல், இயல்பாக வாயில் புகுந்து புறப்படுகிறது. அதுதான்வக்காலி”. இந்தச் சொல் எந்த அகரமுதலியில் இருக்கிறது ?

இப்படி ஒவ்வொரு வட்டாரத்திலும், தமிழிலான பேச்சு வழக்கு சற்று மாறுபட்ட வடிவத்தில் இருப்பதைக் காண முடியும். மக்களின் பேச்சு வழக்கு அவ்வாறு இருக்கிறது என்பதற்காக அதை நான் அப்படியே எழுத்தில் வடிக்கிறேன் என்பது என்ன ஞாயம் ?

ஒரு கற்பனை செய்து பாருங்கள் ! பள்ளிப் பாடப் புத்தகங்கள் பேச்சு மொழியில்; அனைத்து செய்தித் தாள்களும் பேச்சு மொழியில்; கிழமையிதழ், திங்களிதழ், சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், பாடல் தொகுதிகள், இலக்கியங்கள், தொன்மங்கள் (புராணங்கள்), மறவனப்புகள் (இதிகாசங்கள்), அரசுக் கடிதங்கள், அரசு ஆணைகள் ஆகிய அனைத்தும் பேச்சு மொழியில் இருக்குமேயானால் தமிழின் நிலை என்னவாக இருக்கும் ?

நாட்டுப்புறப் பாடல்கள் என்பவை வழிவழியாக மக்களிடையே வாழ்ந்து வருபவை. அவை பேச்சு மொழியில் தான் இருக்கும். அவை மீது உங்களுக்கு ஈர்ப்பு இருக்குமேயானால், அவற்றைக் குறுந்தட்டில் பதிவு செய்து வைத்துக் கொண்டு கேட்டு மகிழுங்கள். அவை அழியாமல் நிலைப்படுத்த எண்மப் பதிவு (DIGITIZATION)  செய்து காத்திடுங்கள். அதற்கு மாறாக அவற்றைப் பேச்சு மொழியிலேயே எழுத்தாக்கம் ( எழுத்து வடிவில் பதிப்பித்தல்) செய்கிறேன் என்பது தவறு !

பேச்சு மொழியை எழுத்து வடிவில் கொணர்வது தமிழை ஊனப்படுத்தும்; சிதைத்துவிடும்; காலப் போக்கில் அழித்து விடும். எனவே, பேச்சு மொழியை எழுத்தில் வடிப்பது என்னும் எண்ணம் கொண்டிருப்போர் அருள்கூர்ந்து அநதத் தவறைச் செய்யாதீர்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் !


------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2051:சுறவம்(தை)05]
{19-01-2020}

--------------------------------------------------------------------------------------------------------------------------------
       
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------