name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், ஜனவரி 15, 2020

வரலாறு பேசுகிறது (17) பாவலரேறு பெருஞ்சித்திரனார் !

மறைந்த தமிழறிஞர்கள் பற்றிய தொடர் !


பெருஞ்சித்திரனார் !


தோற்றம்:

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் 1933 –ஆம் ஆண்டு சூன் திங்கள் 11ஆம் நாள் சேலம் மாவட்டம் சமுத்திரம் என்னும் ஊரில் பிறந்தார். தந்தை பெயர் துரைசாமி. தாயார் குஞ்சம்மாள். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் இராசமாணிக்கம் ! மாணவப் பருவத்தில், இவர் தனது தந்தை பெயரில் பாதியும், தனது பெயரில் பாதியும் இணைத்து துரை-மாணிக்கம் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார் !

தொடக்கக் கல்வி:

பெருஞ்சித்திரனாரின் தொடக்கக் கல்வி சேலத்திலும் பின்பு ஆற்றூரிலும் (ஆத்தூர்) அமைந்தது. இவர் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போது சேலம் நடேசனாரும், தமிழ் மறவர் பொன்னம்பலனாரும் ஆசிரியர்களாக விளங்கி தமிழறிவும் தமிழுணர்வும் புகட்டினர் !

கையெழுத்து ஏடுகள்:

பெருஞ்சித்திரனார் பள்ளியில் பயிலும் காலத்தில் தமிழை மிகுந்த ஈடுபாட்டுடன் கற்றவர். “குழந்தைஎன்னும் பெயரில் கையெழுத்து ஏடு தொடங்கி நடத்தியவர். பின்புஅருணமணிஎன்னும் புனைப் பெயரில்மலர்க்காடுஎன்னும் கையெழுத்து ஏட்டையும் தொடங்கி நடத்தியவர். பள்ளிப் பருவத்திலேயேமல்லிகை”, பூக்காரிஎன்னும் பாவியங்களை இயற்றிய பெருமைக்குரியவர் !

பாவாணரின் மாணவர்:

1950- ஆம் ஆண்டு தனது உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்த பெருஞ்சித்திரனார் சேலம் நகராண்மைக் கழகக் கல்லூரியில் சேர்ந்து பயின்றார். அங்கு, அப்பொழுது பணிபுரிந்து வந்த பாவாணர் அவர்களிடம், தமிழ் பயின்று தனது அறிவை மெருகேற்றிக் கொள்ளும் வாய்ப்பு, பெருஞ்சித்திரனாருக்குக் கிடைத்தது !

பாரதிதாசனுடன் சந்திப்பு:

கல்லூரியில் பயிலும் காலத்தில் பாரதிதாசன் பாடல்களில் மிகுந்த ஈடுபாட்டுடன் விளங்கினார். ஒருமுறை தமதுமல்லிகை”, “பூக்காரிபாவியங்களை எடுத்துக் கொண்டு புதுச்சேரி சென்று பாரதிதாசனைச் சந்தித்தார். அவர் தம் அச்சகத்திலேயேகொய்யாக்கனிஎன்னும் பெயரில் பெருஞ்சித்திரனாரின் பாவியங்களை அச்சிட்டுத் தந்தார். பாரதிதாசனையே கவரும் அளவுக்கு அவரது பாவியங்கள் அத்துணை வளமாகவும் உயர்வாகவும் இருந்திருக்கின்றன !

திருமணம்:

பெருஞ்சித்திரனார், சேலத்தில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கமலம் என்னும் மங்கையை மணந்து கொண்டார். கமலம் என்ற பெயர் பின்புதாமரைஎன அழகாக மலர்ந்து அவருக்குப் பல்லாற்றானும் வாழ்வில் துணையாக இருந்தது என்பது உலகறிந்த உண்மை !

அஞ்சல் துறைப் பணி:

பெருஞ்சித்திரனார் புதுவையில் அஞ்சல் துறையில் முதன்முதலில் பணியில் இணைந்தார். ஐந்து ஆண்டுகள் புதுவையில் அவரது வாழ்க்கை அமைந்தது. 1959 –ஆம் ஆண்டு அவருக்குப் பனியிட மாற்றல் கிடைத்து கடலூருக்கு வந்து சேர்ந்தார் !

தென்மொழி இதழ்:

இச்சூழலில் பாவாணர் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அகரமுதலித் துறையில் பணியேற்றிருந்தார். பாவாணரின் விருப்பப்படி, தென்மொழி என்னும் இதழைப் பெருஞ்சித்திரனார் 1959 ஆம் ஆண்டு தொடங்கி நடத்தினார். நடுவணரசுப் பணியில் அவர் இருந்தமையால் தன் இயற்பெயரான துரை-மாணிக்கம் என்பதை விடுத்து, “பெருஞ்சித்திரன்என்னும் புனைப் பெயரில் அதில் எழுதி வந்தார் !

தனித் தமிழ் ஏடு:

தென்மொழியின் தொடக்க ஏட்டில் சிறப்பாசிரியர்பாவாணர்எனவும், பொறுப்பாசிரியர்பெருஞ்சித்திரன்எனவும் பெயர்கள் தாங்கி இதழ் வெளியானது. தனித் தமிழில் வெளிவந்த இந்த இதழைத் தமிழ் ஆசிரியர்களும் கல்லூரி மாணவர்களும் விரும்பி வாங்கிப் படித்தனர். மறைமலை அடிகள் பரிதிமாற் கலைஞர் ஆகியோரால் தொடங்கி வைக்கப் பெற்ற தனித் தமிழ் இயக்கம், பாவாணரால் விசிறி விடப்பெற்று, அதனால் எழுந்த கனலை தென்மொழி இதழ் ஆங்காங்கே பரவிக் கிடந்த தமிழ் உணர்வாளர்களிடயே எடுத்துச் சென்று சேர்ப்பித்தது ! தனித் தமிழின் தேவை பற்றித் தமிழகமெங்கும் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின !

இந்தி எதிர்ப்பு:

இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி தமிழ் நாட்டில் தீயாகப் பரவத் தொடங்கிய காலத்தில், அதற்கு வலுவூட்டும் வகையில் பெருஞ்சித்திரனாரின் பாடல்கள் தென்மொழியில் வெளியாகின. அவரது எழுத்திலும் பேச்சிலும் இந்தி எதிர்ப்புக் கனல் பற்றி எரியத் தொடங்கியது. அவரது உரையைக் கேட்போரும் படிப்போரும் இந்தி எதிர்ப்பு வெள்ளத்தில் நீச்சலடிக்கத் தொடங்கினர் !

அரசுப் பணி ஒருவல்:

தமது இந்தி எதிர்ப்பு மற்றும் தனித் தமிழ்  இயக்கப் பணிகளுக்கு, அரசுப் பணி தடையாக இருப்பதை உணர்ந்தார்.  முழுநேரமும் மொழிப் பணியாற்ற அவர் விரும்பினார். எனவே அஞ்சல் துறையில் அவர் ஏற்றிருந்த அரசுப் பணியை ஒருவல்  (இராஜிநாமா) செய்துவிட்டு, தமிழுக்காகவே தம்மை ஒப்படைத்துக் கொண்டார் !

சிறை வாழ்வு:

அவர் எழுதிய பாடல்களும், ஆற்றிய உரைகளும்  இந்தி எதிர்ப்பு உணர்வைத் தூண்டிவிடுவதாக அரசால் குற்றம் சாட்டப் பெற்று, பெருஞ்சித்திரனார் வேலூர் சிறையில் அடைக்கப்பெற்றார். சிறையில் இருந்தபோதுஐயைஎன்னும் தனித் தமிழ்ப் பாவியத்தின் முதல் தொகுதியை எழுதினார் ! இவ்வாறு இருபது முறை சிறைத் தண்டனைக்கு ஆளான பெருஞ்சித்திரனார், வீரம் மிக்க ஒரு தமிழ்ப் போராளி !

தமிழ்ச் சிட்டு இதழ்;

வேலூர் சிறையில் இருந்து வெளிவந்த பின்தமிழ்ச் சிட்டுஇதழைத் தொடங்கினார். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விரும்பும் வண்ணம் இதழை வடிவமைத்து நடத்தி வந்தார். தமிழ் உணர்வுடன் பாடல்கள் இயற்றி வெளியிட்டு பள்ளி மாணவார்களின் கருத்தைக் கவர்ந்தார் !

பாவலர் ஏறு பட்டம்:

மொழியுணர்வு ததும்பும் பாடல்களை நிரம்ப எழுதித் தென்மொழியிலும் தமிழ்ச் சிட்டிலும் வெளியிட்டு  வந்தமையால். பாவாணர் அவர்கள் பெருஞ்சித்திரனாருக்குபாவலரேறுஎன்னும் பட்டத்தைச் சூட்டிப் பெருமைப்படுத்தினார் !

பாவலரேறின்  குடும்பம்:

முதுபெரும் புலவர் இறைக்குருவனார், இறை.பொற்கொடி, சொல்லாய்வறிஞர் ப.அருளி, பெண்ணியப் போராளி தழல்.தேன்மொழி, பேராசிரியர் மா.பூங்குன்றன், தமிழ்த் தேசியப் போராளி மா.பொழிலன், வழக்குரைஞர் அங்கயற்கண்ணி ஆகியோர் பெருஞ்சித்திரனார் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் !

படைப்புகள்:

(01)அறுபருவத் திருக்கூத்து, (02) ஆரியப் பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள், (03) இட்ட சாவம் முட்டியது, (04) இனம் ஒன்றுபடவேண்டும் என்பது எதற்கு ?, (05) உலகியல் நூறு, (06) எண்சுவை எண்பது, (07) நூறாசிரியம், (08) நெருப்பாற்றில் எதிர் நீச்சல், (09) மகபுகு வஞ்சி உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களைப் பெருஞ்சித்திரனார் படைத்துள்ளார் ! பெயரைக் கேட்கையிலேயே தமிழுணர்வைக் கிளறிவிடும் தன்மையுள்ள அவரது படைப்புகள், ஓவ்வொரு தமிழனும் படித்துப் பயனடையவேண்டிய காப்பியங்கள் !

மறைவு:

காலமெல்லாம் தமிழ், தமிழ் என்று கூவிக் கூவி தமிழினத்திற்கு விடியலைத் தேடித் தர உழைத்த தமிழ்ச் சேவல், 1995 –ஆம் ஆண்டு, சூன் திங்கள் 11 ஆம் நாள் தமது 62 ஆம் அகவையில் நீண்ட துயிலில் ஆழ்ந்து போயிற்று !

முடிவுரை:

உனக்கு மட்டும் நீ உழைத்தால் உலகம் உன்னை நினைக்குமா ? தனக்கு மட்டும் வாழ்ந்து செத்த தனியன் வாழ்வை மதிக்குமா” ? என்பது பாவலரேறின் பாடல் வரிகள் ! இத்தகைய புரட்சிப் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரரான பாவலரேறு மறைந்த பின்பு, மக்களிடையே தமிழுணர்வைத் தட்டி எழுப்பும் பாடல்களும் முளைக்கவில்லை; பாவலர்களும் பிறக்க வில்லை !

தமிழன்னை தன் தவப் புதல்வனை இழந்தாள். தமிழகம் தன் ஒளிவிளக்கை இழந்தது ! நாம் இருள் உலகில் தவிக்கிறோம் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2051:சுறவம் (தை)02]
{16-01-2020}
-----------------------------------------------------------------------------------------------------------
    
 தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற 
கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------