name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வெள்ளி, டிசம்பர் 13, 2019

வரலாறு பேசுகிறது (06) கருப்பக்கிளர் சு.அ.இராமசாமிப் புலவர் !

மறைந்த தமிழறிஞர்களைப் பற்றிய தொடர் !

கருப்பக்கிளர்சு..இராமசாமிப் புலவர் !


தோற்றம்:

நாகை மாவட்டம், வேதாரணியம் வட்டம், ஆயக்காரன்புலம் 3-ஆம் சேத்தியின் ஒரு பகுதியான மலையான் குத்தகையில் 1907 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் நாள் வேளாண்குடி மரபில் பிறந்தவர் தமிழறிஞர் சு..இராமசாமிப் புலவர். இவருடைய தந்தையார் சதாசிவ தேவர். தாயார் இரத்தினம் அம்மாள் !

இராமசாமியின் தந்தை மலையான் குத்தகை சதாசிவ தேவர் என்பதால் இவரது தலைப்பெழுத்துகள்.என்று அமைய வேண்டும். ஆனால்சுப்பிரமணிய அருள்திரு இராமசாமிப் புலவர்என்னும் தனது பெயரைச் சுருக்கி சு..இராமசாமி என்று பெயர் வைத்துக் கொண்டதாக ஒரு குறிப்பு முனைவர். மு.இளங்கோவன் அவர்களின் வலைப்பூவில் காணப்படுகிறது !

கல்வி:

சு.. இராமசாமி அவர்கள் ஆயக்காரன்புலம் 2 ஆம் சேத்தியில் இருந்த நடுநிலைப் பள்ளியொன்றில் ஏழாம் வகுப்பு வரைப் பயின்றார். மேற்கல்வியியைத் தொடரும் பொருட்டு தில்லைக்குச் (சிதம்பரத்திற்கு) சென்றார். ஆனால் உடல்நலக் குறைவால் படிப்பைத் தொடர முடியவில்லை; அஃதன்றி அவரது செவிப்புலனும் பாதிப்பு அடைந்தது !

தமிழ்ப்புலமை:

புலவர் அவர்கள் பள்ளிப்படிப்பை நிறைவு செய்யவில்லை;  கல்லூரிக்குள் காலடி எடுத்து வைக்கவில்லை. ஆனாலும், தமது இடையறா முயற்சினால், தமிழ் இலக்கியங்களைப் பல்வேறு தமிழாசிரியர்களிடம் கேட்டு ஐயந்திரிபறக் கற்கலானார். அவரது ஊக்கம் அவரை உயர்நிலைக்குக் கொண்டு சென்றது. தமிழில் பெரும் புலமை பெற்றார் !

புலவர் குழுப் பணி:

சு..இராமசாமிப் புலவர் அவர்களுக்கு முறையான படிப்பு குறைந்த அளவே இருந்தாலும், பிற தமிழறிஞர்களிடம் அணுகிப் பாடங் கேட்டதன் வாயிலாக, தமிழில் ஈடிணையற்ற புலமை பெற்றார். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் ஆட்சியாளர் திருமிகு. .சுப்பையாப்பிள்ளை அவர்களின் அறிமுகம் கிடைத்த பின், அக்கழகத்தின் புலவர் குழுவில் ஒருவராகப் பணியாற்றியதோடு, அவரது ஆதரவோடு பல நூல்களை எழுதியும், பதிப்பித்தும் பெரும் புகழ் பெற்றார் !

நூல் வெளியீட்டுப் பணி:

சென்னை, பல்லவபுரத்தில் இருந்த மறைமலை அடிகளின் நூலகத்தில் தங்கி புத்தகப் பதிப்புப் பணிகளைச் செய்ய வாய்ப்பு அமைந்ததால், குடும்பத்தைப் பிரிந்து சென்னையிலேயே தங்கி நூல் வெளியீட்டுப் பணிகளைக் கவனிக்கலானார் பிழை திருத்தும் பணியில் தேர்ச்சி பெற்று விளங்கினார் !

நூற்பதிப்புக் கழகத்தின் பாராட்டு:

இவரது தமிழ்ப் பணிகளைப் பாராட்டி, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், தனது  1008 –ஆவது நூல் வெளியீட்டு விழாவில் புலவருக்கு நினைவுப் பேழை வழங்கிப் பெருமைப்படுத்தியது !

படைப்புகள்:

இனியன்என்ற புனைப் பெயரிலும் புலவர் அவர்கள் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். படைப்பு, வரலாறு, தொகுப்பு, உரை, உரைநடை என்று பல திறத்தனவாகப் புலவரின் படைப்புகள் உள்ளன !

திருமண வாழ்வு:

சு..இராமசாமிப் புலவர் அவர்கள் மன்னார்குடி வட்டம் கோட்டூரை அடுத்த கருப்பக்கிளர் என்னும் ஊரினைச் சேர்ந்த மங்கையைத் திருமணம் செய்துகொண்டு, அவ்வூரிலேயே தொடர்ந்து வாழலானார். கோட்டூரிலிருந்து ஏறத்தாழ 6 கி.மீ தொலைவில் உள்ள சிற்றூர் கருப்பக்கிளர்.  இவ்வூரின் வடபுறமாய் பனையூரும், கிழக்கே இராயநல்லூர், விளக்குடி என்னும் ஊர்களும், தென்கிழக்கே திருக்களர் என்னும் ஊரும்,  தென் திசையில் மாங்குடியும், தென் மேற்குத் திசையில் வாட்டார் என்னும் ஊரும், அமைந்துள்ளன !

கான்முளை:

இவருக்கு (01) தமிழ்மணி, (02) மயிலேறும் பெருமாள், (03) முருகேசன் என்னும் மூன்று ஆண்மக்களும் (01) மங்கையர்க்கரசி (02) சிந்தாமணி என்னும் இரு பெண் மக்களும் பிறந்தனர் !

எழுதிய நூல்கள்:

சு..இராமசாமிப் புலவர் அவர்கள் எழுதிய நூல்களின் எண்ணிக்கை மொத்தம் 220. ஆகும்  இவற்றுள் அவரால் வெளியிடப்பெற்ற நூல்கள் மட்டுமே 14 இருக்கின்றன. கவிதைக் கலம்பகம், குன்றை வெண்பா அந்தாதி, கட்டளைக்கலித்துறை அந்தாதி போன்று 17 கவிதை நூல்களை இவர் எழுதியுள்ளார். இவர் எழுதி திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினர் வெளியிட்டதமிழ்ப் புலவர் வரிசைஎன்னும் நூல் மட்டும் 31 பகுதிகள் ஆகும்.

இலக்கியச் சிறுகதைகள் 10 பகுதிகள், தனிப்பாடல் திரட்டு 5 பகுதிகள், தமிழ்நாட்டு வள்ளல்கள் 2 பகுதிகள், சூடாமணி உரை 2 பகுதிகள், கதை இன்பம் 12 பகுதிகள், சிறப்புப் பெயர் அகராதி 1 தொகுதி  உள்பட இவர் எழுதிக் குவித்த நூல்கள்  ஏராளம் ! ஏராளம் !

சிற்றூரில் விளைந்த செம்மணி:

எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, போக்குவரவு வசதிகள் ஏதும் இல்லாத சிற்றூரான கருப்பக்கிளரில் வாழ்ந்து, வளர்ந்து, 220 தமிழ் நூல்களை எழுதியுள்ள இராமசாமிப் புலவரின் ஆற்றல் பெரும் வியப்பை அளிக்கிறது !  நகர்ப்பகுதியின் வசதிகள்  ஏதுமற்ற  சிற்றூரில் இருந்துகொண்டு இத்துணை நூல்களை ஒருவர் எழுதி இருக்கிறார் என்றால், அதை மனம் நம்ப மறுக்கிறது; இருந்தாலும் அதுதான் உண்மை என்கிறபோது எழுகின்ற மகிழ்ச்சிக்கு அளவே இல்லை !

குடத்திலிட்ட விளக்கு:

இராமசாமிப் புலவருக்குப் போதிய படிப்புத் தகுதி  இன்மையால், அவர் கல்லூரிப் பேராசியர் பணியில் அமர முடியவில்லை ! கல்லூரியில் அவரது கால்கள் நடமாடி இருந்தால், ஊடக வெளிச்சம் அவரை உயர்த்திப் பிடித்து உலகிற்கு  அடையாளம் காட்டி இருக்கும். 220 நூல்களை எழுதிய மாமனிதர் இறுதிவரைக் குடத்திலிட்ட விளக்காகவே வாழ்ந்து மறைந்து போனார் ! சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடுகள் மட்டுமே இன்று வரை அவரை நினைவுபடுத்தும் அடையாளப் படிமைகளாகத் திகழ்ந்து வருகின்றன !

மறைவு:

உழைப்பால் உயர்ந்து, தன் சொந்த முயற்சியில், பல தமிழ் நூல்களை எழுதிக் குவித்துச் சாதனை நாயகனாகத் திகழ்ந்த  கருப்பக்கிளர் சு..இராமசாமிப் புலவர் அவர்கள் 1983 அம் ஆண்டு, மார்ச்சு மாதம், 24 ஆம் நாள், தமது 76 ஆம் அகவையில் காலமானார் ! அவருக்கு ஒரு நினைவுப் படிமை கூட இல்லை என்பதை நினைக்கும் போது தமிழனின் நன்றி மறப்புச் செயல்   நம்மைத் துன்பப்படுத்துகிறது !

பள்ளிகளே அரிதாக இருந்த அக்காலத்தில், எத்துணை எத்துணை அறிஞர்களும் புலவர்களும் தோன்றி அன்னைத் தமிழுக்கு அரும்பணி ஆற்றி இருக்கிறார்கள் ! இன்று இடறி விழுந்தால் பள்ளிக் கூடத்தில் தான் விழ வேண்டும் என்ற அளவுக்குப் பள்ளிகள்  பல்கிப் பெருகி இருக்கின்றன; ஆனால் தமிழுக்கு அணி சேர்க்கும் இலக்கியங்களையும் காப்பியங்களையும் படைக்கும் அறிஞர்கள் தான் அற்றுப் போய்விட்டார்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி..2050:நளி (கார்த்திகை) 27]
{13-12-2019}

------------------------------------------------------------------------------------------------------------

      தமிழ்ப்பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------