ஆழ்வார்களின் அழகு தமிழ்ப் பாடல்களை அள்ளித் தரும் பெட்டகம் !
திருமாலைப் பற்றிப் பாடப்பெற்ற
பாடல்களின் தொகுப்பே நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். இந்து
மதத்தின் ஒரு பிரிவான வைணவ சமயத்தின் தமிழ் மறையாக இந்நூல் கொண்டாடப்படுகிறது
!
பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார்,
நம்மாழ்வார், மதுரகவியாழ்வார், குலசேகர ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள் நாச்சியார், தொண்டரடிப் பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், திருமங்கை ஆழ்வார், ஆகிய பன்னிரு ஆழ்வார்களால் பாடப்பெற்றது
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம். இவர்கள் கி.பி. 6, 7, 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர்கள் !
கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த
நாதமுனிகள் என்பவர் பன்னிரு ஆழ்வார்கள் தனித் தனியாகப் பாடிய பாடல்கள் அனைத்தையும்
ஒன்றாகத் தொகுத்து, அதற்கு ”ஆழ்வார்கள் அருளிச் செயல்கள்” என்று பெயர் சூட்டினார்.
பின்னர் வந்த மணவாள மாமுனிகள், திருவரங்கத்து அமுதனார் அருளிய இராமாநுசர்
நூற்று அந்தாதியையும் இதனுடன் சேர்த்து, “நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம்”
எனப் பெயர் சூட்டி அழைத்தார் !
“திவ்விய”
என்றால் ‘மேலான’ என்று பொருள்.
“பிரபந்தம்” என்றால் ‘பாடல்
தொகுதி”. நாலாயிரம் பாடல்கள் கொண்ட நூல் தொகுதி என்பதால்
“நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்” என்று அழைத்தார்
மணவாளர். வடமொழி மேலாண்மை தமிழ் நாட்டில் மிகுந்திருந்த காலத்தில்
இந்நூல் தொகுக்கப் பெற்றதால், நூலின் பெயரிலும் வடமொழி புகுந்துவிட்டது
!
இந்த நூல், “ஆன்ற தமிழ் மறை”, “ஐந்தாவது
வேதம்”, “திராவிட வேதம்”, “திராவிடப் பிரபந்தம்”
என்றெல்லாம் வண்ணிக்கப்படுகிறது. தமிழ் பேசும்
வைணவர்கள் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம்
பேசும் வைணவர்களாலும் இன்றும் அன்றாடம் படிக்கப்பட்டு வருகிறது என்பது இதன் சிறப்பு
!
இந்நூல்,
------------------------------------------------------------------------------------------------
முதலாயிரம்...........................................................947 பாடல்கள்
பெரிய திருமொழி..............................................1134 பாடல்கள்
திருவாய்மொழி...................................................1102 பாடல்கள்
இயற்பா...................................................................817
பாடல்கள்
-------------------------------------------------------------------------------------------------
என நான்கு பிரிவுகளாகப்
பிரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பாடல்கள் அனைத்தும் திருமாலையும்,
அவரது தோற்றரவுகளையும் (அவதாரங்களையும்)
குறித்து அமைந்துள்ளன. பெரும்பாலான பாடல்கள்
108 திருத் தலங்களில் (திவ்விய தேசங்களில்)
பாடப்பட்டுள்ளன !
இந்தத் தொகுப்பில்
ஏறத்தாழ 1100 பாடல்கள் நம்மாழ்வாரால் பாடப்பட்டுள்ளன.
ஆழ்வார் பாடல்களின் மொத்த எண்ணிக்கை 3892 ஆகும். இராமாநுசர் நூற்று அந்தாதி 108 பாடல்களையும் சேர்த்து
மொத்தப் பாடல்கள் 4000 ஆகும் ! இவற்றுள்
பெரும்பாலான பாடல்கள் பண்ணுடன் அமைந்த இசைப் பாடல்கள் ஆகும் !
ஆண்டாள் நாச்சியார்
பாடிய திருப்பாவை
30 பாடல்களுடன் அவர் பாடிய நாச்சியார் திருமொழிப் பாடல்கள்
143 –ம் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தினுள் அடங்கும் ! தொண்டரடிப்பொடி
ஆழ்வார் பாடிய,
--------------------------------------------------------------------------------------------------------
பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்,
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்....
---------------------------------------------------------------------------------------------------------
என்ற பாடல் இறையுணர்வுடன்
தமிழும் கொஞ்சி விளையாடும் புகழ்பெற்ற பாடலாகும் !
---------------------------------------------------------------------------------------------------------
வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல்மீ தணவும் சோலை, குயிலினம் கூவும் சோலை..
----------------------------------------------------------------------------------------------------------
தொண்டரடிப்பொடி ஆழ்வாரின்
இன்னொரு பாடல், இயற்கையை வண்ணிக்கும் அழகைப் பாருங்கள்
!!
----------------------------------------------------------------------------------------------------------
பல்லாண்டு
பல்லாண்டு பல்லா யிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட
திண்தோள் மணிவண்ணா
உன் செவ்வடி திருக்காப்பு
!
----------------------------------------------------------------------------------------------------------
திருமாலை எத்துணை அழகாக “மணிவண்ணன்” என்று அழைக்கிறார் பெரியாழ்வார். இந்த அழகான தமிழ்ப் பெயரைப் புறந்தள்ளி, “கிருஷ்ணன்”,
“சேஷாசலம்”, ”பத்மநாபன்” என்றெல்லாம் குழந்தைகளுக்கு வடமொழிப் பெயர் சூட்டுகிறோமே!
--------------------------------------------------------------------------------------------------------
மார்கழித்
திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்
போதுவீர், போதுமினோ நேரிழையீர் !
--------------------------------------------------------------------------------------------------------
ஆகா ! என்ன அருமையான பாடல் வரிகள் ! ஆண்டாள் நாச்சியாரின் திருப்பாவை
தமிழ்த் தடாகத்தில் நம்மை நீராட்டிக் குளிர்விக்கிறது !
தமிழ்ச் சுவை தேடித் திரிகின்ற
தும்பிகள், பறந்து சென்று தேன்துளிகளைப் பருக வேண்டிய மலர்கள்
நிரம்பவே பூத்துச் சிரிக்கின்றன ஆழ்வார்கள் அருளிச் செய்த நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில்
! நூலின் பெயரில் உள்ள வடமொழியைப் பார்த்து மனம் சுளிக்காமல்,
உள்ளே சென்று தமிழ்த் தேனைத் துய்த்து மகிழ்வீர் !
--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050, நளி (கார்த்திகை)15]
{1-12-2019}
------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளிய்டப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------