அருட்பேரொளியின் அமுதத் திருமொழிகள் !
அருட்பேரொளி, இராமலிங்க அடிகள் என்னும் வள்ளல் பெருமான் நமக்கு அளித்துள்ள பெரும் புதையல்
திருவருட்பா ஆகும். இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு தான்
திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது !
-----------------------------------------------------------------------------------------------------------
இராமலிங்க
அடிகளார் பின்பற்றி வந்த கொள்கைகளைப் பாரீர் !
------------------------------------------------------------------------------------------------------------
- கடவுள் ஒருவரே. அவர் ஒளி வடிவானவர் ! (அருட்பெருஞ்சோதி
- சிறு தெய்வ வழிபாடு கூடாது. அவற்றின் பெயரால் உயிர்களைப் பலியிடுதல் கூடாது !
- எந்த உயிரையும் கொல்லக் கூடாது !
- எல்லா உயிர்களும் நமக்கு உறவுகளே. அவற்றைத் துன்புறுத்தல் கூடாது !
- புலால் உணவு உண்ணக் கூடாது !
- சாதி, மதம், இனம், மொழி என்னும் வேறுபாடுகள் கூடாது !
- பசித்தவர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி ஆகிய வேறுபாடு கருதாது உணவளித்தல் வேண்டும் !
- மத நல்லிணக்கம் வேண்டும் ! மத வெறி கூடாது !
- எதிலும் பொது நோக்கம் வேண்டும் !
- இறந்தவர்களை எரிக்கக் கூடாது. புதைக்க வேண்டும் !
------------------------------------------------------------------------------------------------------------
இக்கொள்கைகளைப்
பின்பற்றியே அவரது பாடல்கள் அமைந்துள்ளன. வள்ளலார் சொல்கிறார்
! ”மக்களே ! (01) ”நல்லோர் மனதை நடுங்கச் செய்யாதீர்”.
(02) ”அறக்கொடை (தானம்) தருவதை
அண்டித் தடுக்காதீர்”. (03) ”நம்பி வரும் நண்பர்களை வஞ்சிக்காதீர்”.
(04) ”ஏழைகளின் வயிறு எரியச் செய்யாதீர்”. (05) ”பிறர் பொருளைப் பெற விரும்பிப் பொய்யுரை புகலாதீர்.” (06) ”பசித்தோர் முகத்தைப் பார்த்து, வாளாவிருக்காதீர்.”
(07) ”இல்லை என்று வருவோர்க்கு இல்லை என்று சொல்லாதீர்”.
(08) ”ஆசானின் அடிபணிய அணுவளவும் தயங்காதீர்”. (09) ”நிழல் தரும் மரங்களை அழிக்காதீர்.” (10) ”பெற்றோர் நல்லுரையைப்
புறந்தள்ளிப் போகாதீர் !”
அனைத்து மதங்களும் வலியுறுத்தும்
அன்பு,
அறம் ஆகியவற்றை உள்ளடக்கி “தூய நன்னெறிப் பொதுமை” (சமரச சுத்த சன்மார்க்கம்)
என்னும் புதிய கோட்பாட்டை அறிவித்து, அனைவரும்
அதன்படி ஒழுக வேண்டும் என்றும் பரப்புரை செய்து வந்தார் !
ஆண்டவன் ஒருவனே; அவனுக்கு உருவ வழிபாடு தேவையில்லை; அவன் ஒளிவடிவானவன்;
அருட்குணம் மிக்கவன், என்று வலியுறுத்தி வந்தார்
!
-----------------------------------------------------------------------------------------------------------
எய்வகைசார்
மதங்களிலே பொய்வகை சாத்திரங்கள் எடுத்துரைத்தே
........எமது தெய்வம்
எமது தெய்வம் என்று உகைவகையே கதறுகின்றீர்
தெய்வம்
ஒன்று என்று அறியீர்..
-----------------------------------------------------------------------------------------------------------
என இடித்துரைத்த வள்ளலார், சமயச் சடங்குகளை வெறுத்தார். மதச் சண்டைகள் மக்கி மண்ணாகிப்
போக வேண்டும் என்று விரும்பினார் !
------------------------------------------------------------------------------------------------------------
.“இருட் சாதி தத்துவச்
சாத்திரக் குப்பை
.......இருவாய்ப்
புன்செயில் எருவாக்கிப் போட்டு,
மருட்
சாதி சமயங்கள் மதங்கள், ஆச்சிரம
.......வழக்கெலாம்
குழிக்கொட்டி மண் மூடிப் போட்டு..”
-----------------------------------------------------------------------------------------------------------
என்று சாடினார். தூய நன்னெறி வாழ்வை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார் !
------------------------------------------------------------------------------------------------------------
வாடிய
பயிரைக் கண்டபோது எல்லாம்
......வாடினேன்,
பசியினால் இளைத்தே
வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த
.....வெற்றரைக்
கண்டு உளம் பதைத்தேன்.
-----------------------------------------------------------------------------------------------------------
என்று பரிவு மனம் கொண்டிருந்த
வள்ளலாரை,
மதம் சாதிகளில் முனைப்பான பற்றுக் கொண்டிருந்த மனிதர்கள் புரிந்து கொள்ள
வில்லை !
வடலூரில்
1867 ஆம் ஆண்டு நிறுவப் பெற்ற அறநிலையம் (தருமசாலை),
அன்று முதல் இன்று வரை, (152 ஆண்டுகளாக)
பசித்து வருகின்ற அனைவருக்கும் மூன்று வேளையும் உணவளித்து வருகின்ற அருந்தொண்டினைச்
செய்து வருகிறது என்பதை சாதிமதப் பித்துப் பிடித்து இன்று அலைகின்றோர் உணர வேண்டும் !
-----------------------------------------------------------------------------------------------------------
வாழையடி
வாழையென வந்த திருக்கூட்ட
.........மரபினில்
யானொருவன் அன்றோ
................வகையறியேன் இந்த ஏழைபடும்பாடு
......................உனக்குத் திருவுளச் சம்மதமோ..
------------------------------------------------------------------------------------------------------------
என்று எந்நேரமும் மக்கள்
குமுகாயத்தைப் பற்றியே சிந்தித்து மனப் பரிவு கொண்ட வள்ளளார், சிறு தெய்வ வழிபாடு என்று சொல்லி, ஆடு, கோழி, பன்றி முதலிய உயிரினங்களைப் பலி கொடுத்தலைக் கண்டித்தார்
!
-------------------------------------------------------------------------------------------------------------
நலிதரு
சிறிய தெய்வம் என்று ஐயோ
........நாட்டிலே
பல பெயர் நாட்டிப்
பலிதர
ஆடு, பன்றி குக்குடங்கள்
........பலிகடா
முதலிய உயிரைப்
பொலியுறக்
கொண்டே போகவுங் கண்டே
.......புத்தி நொந்துளம்
நடுக்குற்றேன்.
------------------------------------------------------------------------------------------------------------
என்கிறார். ஐதீகம், சாத்திரம் என்ற பெயரில் வடமொழியில் மந்திரம்
சொல்லல், ஐயர் பூசனை செய்தல், கருவறைக்குள்
நுழைவுமறுத்தல், தலையில் தேங்காய் உடைத்தல், தீ மிதித்தல், அலகு குத்துதல், செடில் காவடி, கோயிலைச் சுற்றிப் உருண்டு புரளுதல் போன்ற
தவறான பழக்க வழக்கங்களை வள்ளலார் ஏற்கவில்லை !
-----------------------------------------------------------------------------------------------------------
கலையுரைத்த
கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
........கண்மூடி
வழக்கமெலாம் மண்மூடிப் போக..
-----------------------------------------------------------------------------------------------------------
என்று மனம் நொந்துப் பாடினார்.
-----------------------------------------------------------------------------------------------------------
கடுகு
ஆட்டுக் கறிக்கு இடுக தாளிக்க எனக்
.......கழறிக் களிக்காநின்ற
சுடுகாட்டுப்
பிணங்காள் இச்சுகமனைத்தும்
.......கணச் சுகமே
சொல்லக் கேண்மின்.
------------------------------------------------------------------------------------------------------------
என்று புலால் உண்ணலை வெறுத்து உரைத்தார் !
------------------------------------------------------------------------------------------------------------
பிறந்தவரை
நீராட்டிப் பெருகவளர்த் திடுகின்றீர்
......பேயரே நீர்,
இறந்தவரைச்
சுடுகின்றீர் எவ்வணம் சம்மதித்தீரோ
.......இரவில் தூங்கி,
மறந்தவரைத்
தீமூட்ட வல்லீரால் நும்மனத்தை
......வயிர மான
சிறந்தவரை
எனப்புகழ்ச் செய்துகொண்டீர் ஏன்பிறந்து
.......திரிகின்றீரே
------------------------------------------------------------------------------------------------------------
உயிரோடு இருக்கும் வரைப்
பாராட்டிச் சீராட்டிப் போற்றி வந்த உம் உறவினரை, அவர் இறந்த பிறகு தீயிலே இட்டு எரிப்பதற்கு எப்படி உங்களுக்கு மனம் வருகிறது
என்று கேட்கும் வள்ளலார், இறந்தவர்களைப் புதைக்க வேண்டுமேயன்றி
எரிக்கலாகாது என்று வலியுறுத்துகிறார் !
அன்பும் அருளும் ஒருங்கிணைந்து
உருவெடுத்து வந்ததைப் போல், பிறந்து அருளாட்சி செய்து,
மக்களுக்கு நல்லுரை நல்கி வந்த வள்ளலாரை, பழமைப்
பாசி மனம் படைத்தோர் அவர் உயிருக்கு ஊறு செய்து விட்டதாகவே மக்கள் நினைக்கிறார்களே
அன்றி, பூட்டிய அறைக்குள்
மறைந்து விட்டார் என்று சொல்வதை நம்ப அணியமாக இல்லை ! பரிவு மனம்
உடையோர் இருக்கும் வரை, வள்ளலார் புகழ் மறையாது !
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050. நளி (கார்த்திகை)
14]
{30-11-2019}
------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------