அழகுணர்ச்சி இல்லாத மனிதன் விலங்குக்குச் சமமானவன் !
ஒவ்வொரு
மனிதனும் அழகாகத் தோற்றமளிக்கவே விரும்புகிறான். தன்னைக்
காண்பவர்களின் கருத்தைத் தன்பால் ஈர்க்க வேண்டும் என்னும் ஆவலே இதற்குக் காரணம்.
மனிதன் என்ற சொல் இங்கு ஆடவர், மகளிர் என இருபாலரையுமே
குறிக்கும் !
உச்சி
முதல் பாதம் வரை தன் அழகு, சுடர் விட்டு மிளிர, மனிதன் எடுத்துக் கொள்ளும்
அக்கறைக்கு அளவே இல்லை ! முடியலங்காரம், உடையலங்காரம், அணியலங்காரம், என
ஒவ்வொன்றுக்கும் செலவிடும் நேரம் மிகுதி ஆகிக்கொண்டே போகிறது !
இத்தகைய
அழகுணர்ச்சி தவறன்று ! கட்டாயம் தேவை தான் ! ஏனெனில், அழகுணர்ச்சி இல்லாத மனிதன் விலங்குக்குச் சமமானவன்
! அவனது வாழ்க்கை சுவையற்றுப் போகும். உப்புச்
சுவை சேராத உணவுப் பண்டமாக தாழ்வுற்றுப் போகும் !
அழகுணர்ச்சி, அனைத்து மனிதர்களிடமும் இருக்கிறதா, என்றால்,
“ஆம்” என்று தான் சொல்லமுடியும் ! ஆனால், அதன் அளவு தான் ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது
!
ஒரு
நாள் நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். ஈராண்டுகளுக்கு
முன்பு கட்டப் பெற்ற கற்காரைக் கூரை (CONCRETE MOLDING ROOF) வீடு. முன்றிலைக் (PORTICO) கடந்ததும்
எதிர்ப்படும் வேலைப்பாடு அமைந்த நிலைவாயில் ! உள்ளே அகலறை
(DRAWING HALL). வலப்புறம் சாளரம் (WINDOW) அருகில் 4’ X 4’ மிசைப் பலகை (TABLE). அதன் எதிரில் அன்னக் கழுத்து அமரிருக்கை
(CHAIR) ! அறையின் இடப்புறம்
நீண்ட இணையணை (SOFA) !
இணையணையை
அடுத்து நான்கு ஞெகிழி (PLASTIC) நாற்காலிகள் ! தலைவாயிலுக்கு நேர் எதிரில் காட்சி மாடம் (SHOW CASE) ! அதையடுத்து மரத் தளியில் (WOODEN STAND) தொலைக்காட்சிப்
பேழை ! மற்றும் இன்னொரன்ன
பொருள்கள் !
நான்
சென்ற நேரத்தில் நண்பர் வீட்டிலில்லை ! அவர் மனைவி தான்
என்னை வரவேற்றார் ! ஆனால் நான் அமர்வதற்கு இருக்கை எதுவும் வெட்புலமாக
(VACANT) இல்லை ! அன்னக் கழுத்து அமர் இருக்கையில் (SWAN NECK TYPE CHAIR) குழந்தைகளின் புத்தகப் பைகள் இடம் பிடித்திருந்தன ! இணையணையில் பழைய செய்தித் தாள் கட்டுகள் சிலவும்,
அழுக்குத் துணிகள் பொதியும், பழைய கோரைப் பாய்
ஒன்றும் காணப்பட்டன !
ஞெகிழி
நாற்காலிகளில், அட்டைப் பெட்டிகள் சில இடம் பிடித்திருந்தன
! அவற்றுள் ஒன்றை வெட்புலமாக்கி என்னை அமரச் செய்தார் நண்பரின் மனைவி
! சில நிமிடங்களில் நண்பர், கையில் காய்கறிக் கூடையுடன்
வந்தார். ”வாருங்கள் அன்பரசு ! நலமாக இருக்கிறீர்களா ?”
என்று உசாவியவர் “இதோ வந்து விடுகிறேன்”
எனச் சொல்லிக் காய்கறிக் கூடையுடன் உள்ளே சென்றார் !
கிடைத்த
ஓரிரு நிமிடங்களில் அகலறையை நோட்டமிட்டேன் ! மிசைப் பலகையில்
மூடியின்றித் திறந்த நிலையில் ஒரு மைத் தூவல் (INK PEN) ! அருகில்
‘அயோடக்சு’ (IODEX BOTTLE) குப்பி ஒன்று கவிழ்ந்த நிலையில் ! ஐந்தாறு தலைவலி மாத்திரைகள்
பொதிக்கப் பெற்ற அட்டை (STRIP) !. நாள்காட்டியில்
(DAILY SHEET) கிழித்த அன்றைய நாளுக்கான தாள் ! சுருட்டிய நிலையில் ஒரு கைக்குட்டை ! குளம்பி
(COFFEE) அருந்திய கழுவாத கோப்பை
!
நான்கைந்து
சில்லறைக் காசுகள் ! மின்கட்டண அட்டை ! கொட்டிக் கிடக்கும் ஒரு கைப்பிடி பயின் வளையங்கள் ((RUBBER BANDS) ! எழினிக்கு (MOBILE) மின்னேற்றம் செய்யும் சூலி
(CHARGER) ! சிறிய பீங்கான் தட்டு ஒன்றில் கொஞ்சம் கதம்ப நொறுவை (MIXTURE) !
ஊர்தி ஓட்டுகையில் அணியும் தலைச் சீரா (HELMET) ! இன்னும் சிற்சில பொருள்கள் !
சுவரெங்கும்
கரிக்கோடுகள் (PENCIL LINES), ஊதாக்கோடுகள்
(MARKER LINES) ! குழந்தைகளின் கைவண்ணம் போலும்
! அரத்தம் (BLOOD) குடித்த கொசுக்கள் நசுக்கப் பெற்ற சிவப்புத் தடங்களும் சுவரில் இடம் பிடித்திருந்தன
! அழுக்குப் படிந்த பந்துகள் சுவரில் மோதிப் பதித்த, கலங்கலான வரிகள் இக்கால ஓவியங்களாய்க் (MODERN ART) காட்சியளித்தன ! குழந்தைகளின் காலணிகள் திசைக்கு ஒன்றாகத் திரும்பிக் கிடந்தன !
சட்டம்
ஒழுங்கு சீர்குலைந்த நகரம் போல் அந்த வீட்டின் அகலறை
(DRAWING HALL) காட்சியளித்தது ! அகலறையே
(DRAWING HALL) இப்படி இருந்தால், அடுக்களை
(KITCHEN), துயிலறை (BED ROOM), குளியலறை
(BATH ROOM) பூசை அறை (POOJA ROOM) போன்றவை எத்துணை
அழகாகக் காட்சியளிக்கும் என்று மனதிற்குள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டிருக்கையில்,
நண்பர் உள்ளிருந்து வந்தார் ! ஒரு நாற்காலி சுமந்து
கொண்டிருந்த அட்டைப் பெட்டிகளைக் கீழே இறக்கி வைத்து விட்டு, அதில் அமர்ந்தார் !
சில
நிமிட உரையாடல்களுக்குப் பின், அவர் தந்த குளம்பியை
(COFFEE) மனக் குமட்டலுடன் சிறிது ஒப்புக்கு அருந்திவிட்டு, என் இல்லம் வந்து சேர்ந்தேன் ! துப்புரவும் ஒழுங்கும்
இல்லாத வீட்டில், குளம்பியின் ஒவ்வொரு துளியும் கற்றாழைச் சாறாக
மனதிற்குள் கசந்தது
!
நண்பர்
மிடுக்கானவர் ! அழகாகத் தலைவாரி, உடையுடுத்தி,
சில கூடுதல் ஒப்பனைகளையும் செய்து கொண்டு காண்போரைக் கவரும் வனப்புக்
கொண்டவர் ! தன் தோற்றத்தைப் பொறுத்தவரை அழகுணர்ச்சியை முழுமையாக
வெளிப்படுத்தும் இயல்பு வாய்ந்தவர் ! அவரது இல்லமா இப்படி
?
நேர்த்தியாக
உடை உடுத்தி உலா வரும் ஒருவர், குப்பைக் கிடங்கிற்குள் குடி
இருப்பதைப் போல் அன்றோ நண்பரின் நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன ! தனது தோற்றத்தை எழிலாக வெளிப்படுத்த விரும்பும் அவர், தனது இல்லத்தைத் எழில் மிகுந்த மாளிகையாகப் பேணுவதில் ஏன் அக்கறை செலுத்துவதில்லை
?
குப்பைக்
கிடங்குகள் நாய்கள் உறங்கும் இடமன்றோ ? நண்பர் தன்னை நாயின் நிலைக்குத் தாழ்த்திக்
கொள்வது, அவரது அறியாமையாலா ? அக்கறை இன்மையாலா
? அல்லது அவரது பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடா ?
------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2050, கன்னி(புரட்டாசி),30]
{17-10-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில்
வெளியிடப் பெற்ற
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------