name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, நவம்பர் 17, 2019

பல்வகை (17) புதுச் சொல் புனைவு - அரசு முனைப்புக் காட்ட வேண்டும் ! !

சொல்லாக்கத்திற்கு   தமிழக அரசில் புதிய துறையை உருவாக்க வேண்டும் !



தமிழ் இலக்கியங்கள் பல, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. கி.பி முதலாம் நூற்றாண்டுக்குப் பிறகு இயற்றப் பெற்ற இலக்கியங்களும் அளவிறந்தவை ! கடைச் சங்க காலமான கி.மு. 600 – கி.பி. 200 இரண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் பிறமொழிக் கலப்பில்லாதவை. இவற்றில் தமிழர் வரலாறும், தமிழர் நாகரிகமும், தமிழ்ப் பண்பாடும் இலைமறை காயாகப் பதிவு செய்து வைக்கப் பெற்றிருக்கின்றன !

கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு, தமிழகத்தில் வடமொழி ஊடுறுவல் தொடங்கியது. எனவே இதற்குப் பிறகு தோன்றிய இலக்கியங்களில் வடமொழிச் சொற்கள் கலப்பு மிகுதியாகக் காணப்படுகின்றன !

கடந்த 1800 ஆண்டுகளாக, வடமொழியின் மேலாண்மையிலிருந்து தமிழால் விடுபட முடியவில்லை. இன்றைய நிலையில் நாம் பயன்படுத்தும் சொற்களில், எவை வடமொழிச் சொற்கள், எவை தமிழ்ச் சொற்கள் என்று பகுத்துப்பார்க்க முடியாத அளவுக்குக் கலப்படம் மிகுதியாகிவிட்டது !

வடமொழிச் சொற்களின் கலவையால், மலையாளம், கன்னடம், துளுவம், தெலுங்கு போன்ற புதிய மொழிகள் தோன்றி, தமிழின் ஆட்சி எல்லை சுருங்கிப் போயிற்று ! வடமொழிக் கலப்பை மட்டுப் படுத்த, பல்லாண்டுகளாகப் பல தமிழறிஞர்கள்  முயன்று வந்துள்ளனர். எனினும் அவர்களது உழைப்பிற்குப் போதிய பலன் கிடைக்காமலேயே போயிற்று !

இன்றைய தமிழகத்தில், மக்கள் பெயர்களில் 95 % வடமொழிப் பெயராகவே உள்ளன. கோயில் பெயர்களும், கோயிலில் உறைகின்ற கடவுளர் பெயர்களும் 99 % வடமொழிப் பெயராகவே இருக்கின்றன. ஆண்டுகளின் பெயர்களும், மாதங்களின் பெயர்களும் வடமொழிப் பெயர்களாகவே திகழ்கின்றன !

வடமொழியின் மேலாண்மையிலிருந்து தமிழும் தமிழக மக்களும் விடுபடுதல் என்பது அத்துணை எளிய செயலன்று ! தமிழை ஒரு படி உயர்த்தி வைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டால், இரண்டு படிகள் கீழே இறக்கி வைக்கும் செயலில் சில அமைப்புகள் இடையறாது ஈடுபட்டு வருகின்றன !

இத்தகைய இடையூறுகளைத் தமிழ் எதிர்கொண்டிருக்கையில், தமிழகத்தில் ஆங்கில மொழியின் ஊடுறுவல் அதிவிரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ! படிப்பறிவில்லாத பாமரன் வாயிலிருந்து உதிரும் சொற்களில் ஆங்கிலச் சொற்களின் அணிவகுப்பு காணப்படுவது கவலை அளிப்பதாக உள்ளது . பஸ், டிக்கட், கண்டக்டர், டிரைவர், காப்பி, டீ, சோடா, சிகரெட், சினிமா, டிரெய்ன், ஏரோப்ளேன், எம்.எல்., எம்.பி, கலெக்டர், தாசில்தார், போலீஸ் மற்றும் இன்னோரன்ன ஆங்கிலச் சொற்கள் பாமர மக்கள் வாயிலும் வரைமுறையின்றிப் புழங்குகின்றன !

மொழிவாரி மாநிலம் அமைந்து, தமிழ்நாடும் அதற்கென ஒரு அரசும் இயங்கி வருகிறது. தமிழ்நாடு என்று பெயரைத் தாங்கி இருப்பதால், தமிழையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய கடமை தமிழ்நாட்டு அரசுக்கு இருக்கிறது. தமிழை வளப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டால் தான் தமிழ் வளரும்; வாழும் ! அரசின் அரவணைப்பு இல்லையேல் தமிழ் தளர்ந்துபோகும்; வீழ்ந்தும் போகும் !

தமிழ் வளர்ச்சிக்குத் தமிழக அரசு இன்னும் நிரம்பச் செய்யலாம். பள்ளிகளில் தமிழ் வழிக்கல்வியைக் கட்டாயமாக்கக் கூடுதலாக சில சட்டங்களை இயற்ற வேண்டும். பதின்மப் பள்ளிகள் தமிழை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்டு இயங்க, புதிய  சட்டங்களை இயற்ற வேண்டும்.  தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு மட்டுமே  அரசு வேலை என்பதைக் கட்டாயமாக்க  வேண்டும் !

தமிழ்ச் சொல்லாக்கத்திற்கு  என்று தமிழக அரசில் புதிய துறையை உருவாக்க வேண்டும். முனைவர் ப.அருளி போன்ற தமிழறிஞர்களை, அகவை மேல்வரம்பு விதிக்காமல், சொல்லாக்கத் துறையின் இயக்குநராக அமர்த்தம் செய்ய வேண்டும்.  இத்துறையில், தமிழ் வல்லுநர்கள் அடங்கிய பெருங்குழு ஒன்றை உருவாக்கி, இந்நாள்வரைத் தமிழாக்கம் செய்யப் பெறாமல் இருக்கும் ஆங்கிலச் சொற்களைத் திரட்டி, அவற்றுக்கு உரிய தமிழ்ச் சொற்களை உருவாக்க வேண்டும் !

இப்பணியில், தமிழகத்தில் உள்ள அனைத்துப் பல்கலைக் கழகங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் திட்டங்கள் வரையப்பட வேண்டும். சொல்லாக்கத் துறையின் ஆய்வுக்குப் பின், மாதம் இருமுறை, அனைத்துச் செய்தித் தாள்களிலும், புதிய சொற்களை, கட்டணமின்றி (அரசுக்குச் செலவின்றி) வெளியிடும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும் !

புதிய கலைச் சொற்கள் பாடப் புத்தகங்களுக்குள் தனிப் பட்டியலாக முடங்கிக் கிடக்கின்றன. பல்கலைக் கழகங்கள் தொகுக்கும் கலைச் சொற்கள் அவர்களது நூலகத்தை விட்டு வெளியில் வருவதில்லை. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அகராதிக்கெனத் தனித் துறையே உள்ளது. இத்துறையினர் தொகுத்த கலைச் சொற்கள், நூல் வடிவில் அப்பல்கலைக்கழக நூலகத்தில் முடங்கிக் கிடக்கிறது. புதிய சொற்கள் மக்களிடம் சென்று சேர அரசு செய்தித் தாள்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் !

மாதம் இருமுறை சொல்லாக்கத் துறையால் வெளியிடப் பெறும் புதிய தமிழ்ச் சொற்களை செய்தித்தாள்கள் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வகையில் சட்டம் இயற்றிச் செயல்படுத்த வேண்டும் !

தமிழ் வளர்ச்சித் துறை, தனது பணிகளை அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வதுடன் முடித்துக் கொள்கிறது. அரசு அலுவலகங்களுக்கு அப்பாலும் தனது பார்வையை இத்துறை செலுத்த வேண்டும் !

தமிழின் பெயரை உள்ளடக்கியதமிழ்நாடு அரசுதமிழ் வளர்ச்சிக்கு முனைப்பாக உதவ வேண்டும் ! தமிழ் உணர்வாளர்களின் ஒற்றை வேண்டுகோள் இதுவே !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, துலை(ஐப்பசி) 02]
{19-10-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
       
தமிழ்ப் பணிமன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------