name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, நவம்பர் 17, 2019

சிந்தனை செய் மனமே (53) சீரெழினியும் சிறு குழந்தைகளும் !

ஆறாவது விரல் !


சீரெழினி (SMART PHONE)  இல்லாமல் எந்தவொரு  மனிதனும் இயங்க முடியாது என்று சொல்லுமளவுக்குத் தமிழ்நாட்டில் புதிய பண்பாடு முளைத்து, முனைப்பாக முன்னேறி வருகிறது. ஒவ்வொரு மனிதனின் காதோடும் ஒட்டி உறவாடும் இக்கருவி அளப்பரிய திறன்களைத் தன் இதயத்திற்குள் ஒளித்து வைத்துக் கொண்டு ஒய்யாரமாக உலா வந்துகொண்டிருக்கிறது !

இன்றைய தமிழன், உணவில்லாமல் ஒரு நாளைக் கூடக் கடந்துவிடுவான்; ஆனால் சீரெழினி (SMART PHONE)  இல்லாமல் ஒரு வேளையைக் கூடக் கடக்க அவனால் முடியாது !

வளர்ந்த மனிதனை இவ்வாறு தன் வயப்படுத்தி வைத்திருக்கும் சீரெழினி (SMART PHONE), வளரும் குழந்தைகளையும் விட்டு வைக்கவில்லை ! நடைபழகும் பருவத்திலேயே இயங்கும் பொம்மைப் படங்களைப் (CARTOON PICTURES) பார்த்து மகிழும் சிறிய குழந்தைகள், போகப் போகக் காணொலிக் காட்சிகளிலும் (VIDEOS)   தீர விளையாட்டுகளிலும் (GAMES)  மனதைப் பறிகொடுத்து அதிலேயே மூழ்கியும் போய்விடுகின்றனர் !

தம் குழந்தைகளுடன்  நேரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தவறும் தாய் தந்தையர்  அவர்களின் அன்புத் தொல்லையிலிருந்து தப்பிக்க, அவர்கள் கையில் சீரெழினியைத் ((SMART PHONE) திணித்து, அவர்களின் கருத்தைத் திசை திருப்பிவிட்டுத் தம் பணிகளில் மூழ்கிவிடுகின்றனர் !

தீர விளையாட்டுகளையும் (GAMES), இயங்கும் பொம்மைப் படங்களையும் (CARTOON PICTURES),  காணொலிகளையும் (VIDEOS) சீரெழினியில் (SMART PHONE)   ஆர்வத்துடன் கண்டு களிக்கும் சின்னஞ்சிறு குழந்தைகள், அவற்றில் வரம்பு மீறிய  ஈடுபட்டை வளர்த்துக் கொள்கின்றனர் !

மூன்று அகவைக் குழந்தையைச்சாப்பிட வாஎன்று தாயார் அழைத்தால், அக்குழந்தை, “எனக்குப் பசிக்க வில்லைஎன்று பொய் சொல்லிவிட்டு சீரெழினியில் (SMART PHONE) காணொலியைக் காண்பதில் ஈடுபாடு காண்பிப்பதைக் காண முடிகிறது !

சீரெழினியில் (SMART PHONE)  திளைத்துக் கிடக்கும் ஐந்து அகவைக் குழந்தையை அழைத்து, “வாயிலில் யாரோ அழைக்கிறார்கள் , யாரென்று பார்த்து வாஎன்று தாயார் சொன்னால், “போம்மா ! உனக்கு வேறு வேலையே இல்லை ! என்னைத் தொந்தரவு செய்யாதே ! நீயே போய்ப் பார்த்துக் கொள்  !” என்று மறுப்புரையை எதிர்ப்புடன் பதிவு செய்யும் குழந்தைகளை இன்று  பெரும்பாலான வீடுகளில் பார்க்க முடிகிறது !


தாயோ தந்தையோ அழைக்கும் போது, சீரெழினியில் (SMART PHONE)   மூழ்கிக்கிடக்கும் குழந்தைகள் அவர்கள் அழைப்பை ஏற்பதில்லை; அத்துடன் தங்கள் எதிர்ப்பையும் காண்பிக்கத் தவறுவதில்லை ! தாயிற் சிறந்த கோயிலும் இல்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று குழந்தைகளுக்கு சொல்லித் தந்து  தாய் தந்தையரிடம் பாசத்தை வளர்க்க வேண்டிய  பெற்றோர், சீரெழினியை அவர்களின் கைகளில் தந்து, அந்தக் கருவியின்பால் அளவு கடந்த ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ளத் தம்மையும் அறியாமல் கற்றுத் தந்துவிடுகிறார்கள் !

தீர விளையாட்டில் (GAMES) மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளின் கரங்களிலிருந்து, சீரெழினியை மீட்க முயன்று பாருங்கள் ! வீடே இரண்டுபட்டுப் போகும்! சீரெழினியைத் தந்தால் தான் ஆயிற்று என்று பிடிவாதம் பிடிக்கும் அக்குழந்தை, சினத்தில் கண் மண் தெரியாமல் கையில் கிடைப்பதை எல்லாம் எடுத்து எறியத் தொடங்கிவிடுகிறது !

காளி கோயிலில், மருள் வந்து ஆடி, சாமியாடி அரற்றுவதைப் போல, அக்குழந்தை செய்கின்ற அட்டகாசம் வண்ணிக்க முடியாதது. பிடிவாதம், சினம், எதிர்ப்பு, மறுப்பு என்று அத்துணைத் தீய குணங்களும் சின்னஞ்சிறு குழந்தைகளிடம் குடி கொள்வதற்குச் சீரெழினி (SMART PHONE)  முதன்மைக் காரணமாக அமைகிறது !

இந்தக் குழந்தைகள் வளர வளர அவர்களிடம் பிடிவாதமும், கோப உணர்வும், எதிர்ப்புத் தெரிவிக்கும் துணிவும் மறுத்துப் பேசுகின்ற மன நிலையும், பொய்ப் பேச்சும் சேர்ந்தே வளர்கிறது ! தாய் தந்தையர் சொல்வதைக்  கேளாத தறுதலைகளாக, இக்குழந்தைகளை உருவாக்குவதில் சீரெழினியின் பங்கு பேராற்றல் வகிக்கிறது !

குழந்தைகளிடம் சீரெழினியைத் தந்து, அவர்களின் கருத்தினைத் திசைதிருப்பி அமைதிப் படுத்திவிட்டுத் தங்கள் பணிகளைக் கவனிக்கச் செல்லும் பெற்றோர் ஒவ்வொருவரும், அக்குழந்தைகளின் எதிர்காலத்தை ஊனப்படுத்துகின்ற குற்றவாளிகளே !

குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ நேரம் இல்லாத மனித இயந்திரங்களுக்கு குழந்தைச் செல்வம்  எதற்கு ? தாய் தந்தையரே தெய்வம் என்று கருதும் பிஞ்சுப் பருவத்தில், அவர்களுடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்ள இயலாத இணையர் (COUPLE) அக்குழந்தைகளின் எதிர்காலத்தை ஊனப்படுத்துகிறோம் என்பதை எப்போது உணரப் போகிறார்கள் ?

சின்னஞ்சிறு குழந்தைகளைப் பெற்றிருக்கும் தாய் தந்தையரே ! சீரெழினியை (SMART PHONE)  உங்கள் குழந்தைகளிடம் தந்து, அக்கருவியைக் கையாண்டு காணொலிகளையும், இயங்கும் பொம்மைப் படங்களையும், தீர விளையட்டுகளையும் (GAMES) கண்டு களிக்க வாய்ப்பை ஏற்படுத்தித் தராதீர்கள் ! அவை உங்கள் குழந்தைகளைப் பிடிவாதக்காரர்களாக மாற்றிவிடும் ! சிறு அகவையிலேயே கோப உணர்வில் குளித்து எழும் வன்முறையாளர்களாக மாற்றிவிடும் ! படிப்பில் அக்கறை அற்றவர்களாக உருவாக்கி விடும் ! அவர்களது எதிரகாலத்தையே சீரழித்து விடும் !

இப்போதே விழிப்படையுங்கள் ! இல்லையேல், எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகள் உங்களை விட்டுத் தொலைவாக விலகிச் செல்வதை உங்களால் தடுக்க முடியாது !


-------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி.2050, கன்னி (புரட்டாசி),29]
{16-10-2019}

--------------------------------------------------------------------------------------------------------

      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !

--------------------------------------------------------------------------------------------------------