name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, நவம்பர் 17, 2019

ஐம்பெருங்காப்பியம் (04) சிலப்பதிகாரம் !

சிலப்பதிகாரம் - சொல்லித் தரும் பாடம் ! அரசியலில்  நெறி  தவறினால்  அறமே கூற்றாகும் !



ஐம்பெருங் காப்பியங்கள் எனத் தமிழில் வழங்கப் பெறும் ஐந்து நூல்களுள் சிலப்பதிகாரம் தலையாயது ! சோழவள நாட்டில் தொடங்கி பாண்டிய நாட்டில் நடைபயின்று சேர நாட்டில் முற்றுப்பெறும் சிலப்பதிகார நிகழ்வுகள் மக்கள் மனதில் நிலையான இடத்தைப்  பிடித்துள்ளன என்றால் அது மிகையாகாது !

சிலப்பதிகாரம் கடைச் சங்க காலத்து (கி.பி.2 –ஆம் நூற்றாண்டு) நூல் என்பது ஆன்றோர் துணிபு. இக்காப்பியத்தை இயற்றியவர் சேரன் செங்குட்டுவனின் இளவலான இளங்கோவடிகள் !  இந்நூல் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டு திகழ்கிறது !

இந்நூலின் காப்பியத் தலைவனான கோவலன் காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த வணிகர் குல ஏந்தலான மாசாத்துவான் என்பாரின் மகன். காப்பியத் தலைவி கண்ணகி, மாநாய்கன் என்னும் பெருங்குடி வாணிகன் மகள்.

பதினாறு அகவையுடைய கோவலனுக்கும், பன்னிரண்டு அகவை எய்திய கண்ணகிக்கும் திருமணம் நிகழ்கின்றது ! மணமக்கள் தனி வீட்டில் குடும்பம் நடத்துகின்றனர் !

கோவலன் கலைகளில் நாட்டமுடையவன். ஆடல், பாடல்களில் விருப்பம் கொண்டவன். யாழ் இசைப்பதில் வல்லவன்.  பூம்புகாரில் ஆடல் அரசியாகத் திகழும் மாதவியின் நாட்டியத்தைக் கண்டு மயங்குகிறான் !

ஒரு நாள் மாதவியின் வீட்டுப் பணிப்பெண், அங்காடித் தெருவுக்கு வந்து, மாதவியின் முத்து மாலையைக் காண்பித்து விலை கூறுகிறாள். மாலையை விலை கொடுத்து வாங்குபவர் மாதவியை அடையலாம் என்று தெரிவிக்கிறாள். அந்த முத்து மாலையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டு, மாதவியின் வீட்டிற்குச் சென்று அவளுடன் வாழ்கின்றான் கோவலன் !

செல்வம் கரைகின்றது ! மாதவியோடு மனம் வேறுபட்டு, அவளைப் பிரிந்து கண்ணகியை வந்தடைகின்றான். மாதவியிடம் இழந்த பொருள்களை மறுபடியும் வணிகம் செய்து ஈட்ட நினைக்கின்றான். கண்ணகி தன் காற் சிலம்புகளைக் கழற்றித் தந்து, அதை விற்றுப்பணமாக்கி வணிகம் செய்யத் தூண்டுகிறாள் !

கண்ணகி தந்த சிலம்புகளை விற்பதற்காக, அவளையும் அழைத்துக் கொண்டு  கோவலன் மதுரைக்குச் செல்கிறான். கவுந்தி அடிகள் துணையோடு, மாதரி என்னும் ஆயர்குலப் பெண்ணிடம் கண்ணகியைப் பாதுகாப்பாக  இருக்கச் செய்து விட்டு, ஒற்றைச் சிலம்பை விற்க மதுரை நகருக்குள் செல்கிறான். அங்கு அரண்மனைப் பொற்கொல்லரிடம் சிலம்பைக் காட்டுகிறான் !

பழுது பார்ப்பதற்காகத் தரப்பட்ட  அரசி கோப்பெருந்தேவியின் சிலம்புகள் களவு போய்விட்டதாகப் பொய் சொல்லித் தானே  திருடிக் கொண்டவன்  அப் பொற்கொல்லன். அக்குற்றத்தை மறைக்க இதுதான் சமயம் என அவன் நினைக்கிறான். பொற்கொல்லன் அரண்மனைக்குச் செல்கிறான் !

அரசனைக் கண்டு, சிலம்பைத் திருடிய குற்றத்தைச் செய்த கோவலனைப் பிடித்து வைத்திருப்பதாகச் சொல்கிறான்.  வெகுண்ட அரசன், கோவலனைக் கொல்வதற்கு ஆணையிடுகிறான். கோவலன் கொலைக் களத்தில் வெட்டுண்டு மாண்டு போகிறான் !

செய்தி கேட்ட கண்ணகி, குமுறி எழுந்து, பாண்டியனின் அரசவைக்குச் சென்று முறையிடுகிறாள். தன்னிடமிருந்த இன்னொரு சிலம்பை தரையில் வீசி உடைக்கிறாள். அதிலிருந்த மாணிக்கப் பரல்கள் சிதறி ஓடுகின்றன.

அரசியின் சிலம்பில் உள்ளவை முத்துப் பரல்கள் அன்றோ ? இவள் சிலம்பில் மாணிக்கப் பரல்கள் அல்லவா இருக்கின்றன ?” என்று உண்மையை உணர்ந்துதவறு செய்து விட்டேனேஎன்று அரற்றிக் கொண்டு உயிரை விடுகிறான். மன்னன் உயிர் துறந்ததை அறிந்த அரசி கோப்பெருந்தேவி தானும் மயங்கி விழுந்து உயிர் துறக்கிறாள் !

முறை தவறிய பாண்டிய நாடு தீயின் நாவுக்கு இரையாகட்டும் என்று கூறி மதுரை மாநகரத்தையே அழித்து விடுகிறாள் கண்ணகி. பின்பு சினம் தணிந்து சேர நாடு செல்கிறாள். அங்கு ஒரு குன்றின் மேல் வேங்கை மர நிழலில் நிற்கிறாள். அங்கிருந்த குறிஞ்சி நில மக்களிடம் தான் உற்ற துன்பம் பற்றி எடுத்துக் கூறுகிறாள் !

வானுலகோர், அவள் கணவனுடன் வானவூர்தியில் அங்கு வந்து அவளை அழைத்துச் செல்கின்றனர் !

கண்ணகியின் இந்த வரலாறு சேர மன்னன் செங்குட்டுவனிடம் குறிஞ்சி நில மக்களால் கூறப்படுகிறது. இமயம் சென்று கல் எடுத்து வந்து, கங்கையில் நீராட்டி, வஞ்சி நகரில் கண்ணகிக்குக் கோயில் எடுப்பிக்கிறான் செங்குட்டுவன். இதுதான் சிலப்பதிகாரத்தின் கதைக் கரு !

சிலப்பதிகாரம் ஒரு வரலாற்றுக் காப்பியமாக இருந்தாலும், அது அடிப்படையில் மூன்று கருத்துகளை நமக்கு உணர்த்துகிறது ! (01) அரசியலில் பிழை செய்பவர்களுக்கு அறமே கூற்றுவனாக அமையும் ! (02) கற்பு நெறி தவறாக் காரிகைகளை ஆன்றவிந்தடங்கிய சான்றோர் கூடத் தொழுவார்கள் ! (03) ஊழ்வினையானது, தீயவர்களை விடாது தொடர்ந்து வந்து பற்றியே தீரும் !

இதைத்தான்,
-------------------------------------------------------------------------------------------

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்,
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்,
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்பதூஉம்,
சூழ்வினைச் சிலம்பு  காரணமாகச்
சிலப்பதி  காரம் என்னும் பெயரால்
நாட்டுதும்  யாமோர் பாட்டுடைச் செய்யுளென
..........................................................................................
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்

------------------------------------------------------------------------------------------
என்கிறது சிலப்பதிகாரம் !
-------------------------------------------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, நளி (கார்த்திகை)04]
{20-11-2019}

--------------------------------------------------------------------------------------------------
         தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
                                                        கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------