name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, நவம்பர் 17, 2019

ஐம்பெருங்காப்பியம் (03) சீவகசிந்தாமணி !

சீவகன் என்பவனது அகவாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது சீவக சிந்தாமணி !



சீவக சிந்தாமணி என்பது சங்க காலத்திற்குப் பின் தோன்றிய காப்பியமாகும். ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான இந்நூல் சோழமன்னன் காலத்தில் இயற்றப்பட்டதாகும் !

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவரால் உருவாக்கப்பட்ட இக்காப்பியம் சீவகன் என்பவனின் அக வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. முழுவதும் விருத்தப் பாக்களால் ஆன முதல் தமிழ்க் காப்பியமாகவும் இந்நூல் திகழ்கிறது !

’“ஏமாங்கதநாட்டின் மன்னன்சச்சந்தன்”. அரசிவிசையைமீது அளவற்ற காதல் கொண்டவன். அந்தப்புரமே கதியென்று பொழுதைக் கழிக்கலானான். “கட்டியங்காரன்என்னும் அமைச்சன் ஆட்சியைக் கவனித்து வந்தான் !

அமைச்சனுக்கு ஆட்சி அதிகாரங்கள் மீது ஆசை வரவே, படைகளின் உதவியுடன் அரசனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றச் சூழ்ச்சி செய்கிறான். படைகளால் சூழப்பட்ட மன்னன், கருவுற்றிருந்த தன் மனைவியை ஒரு மயிற்பொறியில் ஏற்றிப் பாதுகாப்பாக அரண்மனையை விட்டு வெளியில் அனுப்பிவிட்டுப் போரிட்டு மடிகிறான் !

அரசிவிசையைஒரு இடுகாட்டில் தங்கி இருக்கையில்  ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தாள். பின்னர் தவ வாழ்வை மேற்கொண்டாள். ”கந்துக்கடன்என்ற வணிகன், அந்த ஆண் குழந்தையை எடுத்து வளர்த்து வந்தான். ”சீவகன்என்னும் பெயருடன் வளர்ந்த அந்தக் குழந்தை வளர்ந்து வாலிவ அகவை அடைந்ததும்  அச்சணந்திஎன்னும் குருவிடம் கல்வி கற்று, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினான் !

சீவகன் தன் நண்பனுக்கு  கோவிந்தைஎன்பவளை மணம் முடித்து வைத்தான். தானும் பல்வேறு திறப்பாடுகள் காரணமாக பல்வேறு சூழ்நிலைகளில் எட்டுப் பெண்களை மணந்தான். இவ்வாறு பல பெண்களை மணந்ததன் மூலம் பண பலத்தையும், படை பலத்தையும் பெருக்கிக் கொண்டு, மாபெரும் வீரனாக உருவாகியசீவகன்ஆட்சி அதிகாரத்தில் இருந்தகட்டியங்காரன்சூழ்ச்சிகளை எல்லாம் முறியடித்து நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றினான். முப்பது ஆண்டுகள் அறம் தவறாது ஆட்சி செய்த சீவகன், பின்னர் ஆட்சிப் பொறுப்பைத் தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு துறவியானான் !

மனிதன் மன்னாக இருக்கலாம்; மகளிரை மணக்கலாம்; அறநெறி தவறாமல் ஆட்சி செய்யலாம்;  போரிடலாம்; ஆனால், தன் கடமைகளை எல்லாம் நிறைவேற்றிய பின் அனைத்தையும் துறந்து, தவ வாழ்வை மேற்கொள்ளல் வேண்டும் என்னும் சமண சமயக் கோட்பாட்டினை இக்காப்பியத்தின் கதை வெளிப்படுத்துகிறது !

சீவக சிந்தாமணி  என்னும் இப்பேரிலக்கியம் நாமகள் இலம்பகம் முதலாக முத்தி இலம்பகம் ஈறாக 13 இலம்பகங்களைக் கொண்டு திகழ்கின்றது. இலம்பகம் யாவும் மகளிர் பெயரிலேயே அமைந்துள்ளன . ஒவ்வொரு இலம்பகத்திலும் ஒரு மண நிகழ்ச்சி பற்றிச் சொல்லப்படுகிறது. இலக்கியச் சிறப்பு மிக்க இந்நூலில் 3145 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.  அனைத்துப் பாடல்களும் விருத்தங்களால் ஆனவை !

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050, நளி (கார்த்திகை )02)]
{18-11-2019}
-----------------------------------------------------------------------------------------------------
      தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------