name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், அக்டோபர் 24, 2019

கவிதை (50) (1975) ஊரக இளைஞர்களின் உழைக்கின்ற கரங்களிலே !




          கொத்து (01)                                                             மலர் (050)
-----------------------------------------------------------------------------------------------------------

ஊரக இளைஞர் பயிற்சித் திட்ட  முதல் அணியினர் பயிற்சி நிறைவு மற்றும் சான்றிதழ் பெறும் விழா மாவட்ட
நீதிமன்ற நடுவர் திரு..சோமசுந்தரம் அவர்கள்       சிறப்புரையுடன் இனிது நிறைவுற்றது. [இடம்: .தொ..நி.
நாகப்பட்டினம்] முன்னதாக அனைவரையும் வரவேற்று
நான் ஆற்றிய உரை !
(1975)
---------------------------------------------------------------------------


          ஊரக   இளைஞர்களின்   உழைக்கின்ற   கரங்களிலே
              உள்ளுறைந்து  கிடக்கின்ற  உயர்திறமை வெளிக்கொணர,
          ஏரகத்   தோன்றல்களின்    எதிர்கால    நல்வாழ்வு
              ஏற்றம்  பெறுவதற்கு  இணையற்ற  தொழிலறிவால்

          காரகம்  ஒளிபெருக்கக்  கைத்தொழில்கள்  புனைந்தியற்றி
              காலவெள்ள  நீர்ச்சுழியில்  கலங்காமல்  இலக்கடைய
          கூரகம்   தோன்றியநற்   கோட்பாடே   இப்பயிற்சி !
              கோலோச்சும்  அரசியலார்  குடைமலர்ந்த புதுஎழுச்சி !

          சீரகம்  தனிற்போந்து  செம்மையுடன்  தொழிலறிவை
              சிந்தையெனும்  கற்படிவில்  செதுக்கியவிவ்  முதலணியர்
          ஈரவகம்   இன்பமுற   எழிற்கருவி,   சான்றிதழ்கள்
              ஏற்கவுள  இத்தருணம்  இவண்போந்தோய்  நல்வரவு !

          அருஞ்சுவைப்பா  லமுதமொடு  அருவிநீர்  கலந்திடினும்
              அன்னப    றவையது    அருந்திடுமாம்   நீர்விலக்கி !
          பெரும்புலவர்  தமிழறிஞர்  படம்பிடித்த  இக்காட்சி
              பேசுகின்ற  இலக்கியங்கள்  பைந்தமிழில்  பலவுண்டு !

          நீதியுரை  ஆலயத்தின்  நெடிதுயர்ந்த  வாயிலிலே
              நின்றுரைக்கும்  சான்றுரையுள் நிழற்பகுதி  விலக்கிவிட்டு
          சோதிமிகு  வாய்மைதனை  சுட்டுப்பு  டம்போட்டு
              சூழ்நிலைச்  சான்றுகளாம்  சுளகரியில்  சலித்தெடுத்து

          அறத்தீர்ப்பு  வழங்குகின்ற  அருந்திறலார்  மேதகையார்
              அண்ணல்  அறமன்ற  நடுவர்  அருள்நெஞ்சார்
          எம்முடைய  அன்பழைப்பை  இனிதேற்று  இவண்போந்து
              இவ்விழாச்  சிறப்புரையை ஈண்டுநி கழ்த்துதற்கும்

          கம்பனது  பிறங்கடைகள்  கலைபயின்றார்  கரங்களிலே
              கருவிகளை  அளிப்பதுடன்  கலைச்சான்றும் வழங்கவுளார் !
          பெருந்தகையார்  அவருக்குப் பிழையில்லா  நற்றமிழால்
               வருகவருக வருகவென  வரவேற்பு  உரைத்திடுவேன் !

          நாகை  நகரத்தின்  நலன்நாடும்  நன்மக்கள்   
               நாளிதழில்  செய்திகளை  நமக்களிக்க உழைப்பவர்கள்
          ஓகை  மிகக்கொண்டு  உளங்கனிந்து  எமதழைப்பை
               ஓர்ந்து  இவண்போந்தார்  உரைத்திடுவேன்  நல்வரவு !

          பிணிதீர்க்கும்  கலைவல்லார்  பீடுடைய  சுழல்வேந்து
               பயிற்சி  நிலையத்தின்  பகுதிப்  பணியாளர்,
          அணிமிகுந்த  சொல்லுரைஞர்  ஆற்றலுறு  மருத்துவர்கோன்
               அன்புடனே  வருகவருகவென  வரவேற்பேன் !

          எம்முடைய  அழைப்பேற்று  இவண்போந்து  சிறப்பித்த 
               இனியநற்  பெருமக்கள்  எல்லோரும்  வருகவென
          செம்பியன்  தமிழ்கொண்டு  சிந்தை  குளிர்ந்துஉரை
               செப்பி  மகிழ்கின்றேன்  சீரியரே  நல்வரவு !

          ஊரக  இளைஞர் உறுபயிற்சி  நிறைவுவிழா !
               உரிய  கலைச்சான்றும்  கருவிகளும்  அளிப்புவிழா !
          ஓரகம்  நாமிணைந்து  உவந்து  எடுக்கும்விழா !
               உரிமையுடன்  பங்கேற்க  உளமிகுந்த  ஆர்வமுடன்

          ஈங்கு  குழுமியுள்ள  இந்நிலைய  நல்முதல்வர்
               ஏனைப்  பணியாளர்  ஒலிபெருக்கி  அமைப்பாளர்
          பாங்காய்ப் பணிமுடித்துச்  சான்றுபெறும்  மாணவர்கள்
               நிழற்படக் கலைஞர்  நிறைந்திருக்கும்  அரங்கத்தோர்

          அனைவர்க்கும்  நல்வரவை  அன்புடனே  கூறுகிறேன்
              ஆர்வலரே  வருக  வருகவென  வரவேற்று
          ஏனைய  நிகழ்ச்சிகளை  இனிது  தொடங்கிடவே
              இவ்வுரையை  முடித்திடுவேன்  எழிலவையே  நல்வரவு !



------------------------------------------------------------------------------------------------------------

  ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
    தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.

------------------------------------------------------------------------------------------------------------