கொத்து (01)
மலர் (35)
-------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டை நண்பர் வில்லியம் கிராசுக்கு
ஏற்பட்ட துய்ப்பு பற்றி அவருக்காக எழுதப்பட்ட
ஒரு கவிதை !
(ஆண்டு 1970)
----------------------------------------------------------------------------------------------------
செம்பரிதி மேலையாழி நீரிலாடும் நேரம்
சிந்தனையில் மனமுழல
மலைச்சாரல் சென்றேன் !
அம்புலியின் வடிவாக அவளங்கு வந்தாள் !
ஆவலுடன் கைப்பற்றி
முகம்பார்த்து நின்றேன் !
மைவிழிகள் கண்ணீரில் உறவாட நின்றாள் !
மனம்வாடும் காணமென் ?
விளம்பிடுக என்றேன்!
கைவிரலில் முகம்பொத்தி சிரந்தாழ நின்றாள் !
கவலையுடன் முகம்பற்றி ஏனென்று கேட்டேன் !
கண்ணீரில் நான்வாட
கவல்கொண்டு உள்ளம்,
கனலாக,
எனைவிட்டுக் கரந்ததேன் ? என்றாள் !
எண்ணங்கள் அலைமோத இமைமூடி நின்றேன் !
என்வாழ்வு மனமேடைச் சதிராடக் கண்டேன் !
பெறுகவென உயர்பதவி அரசினரும் தந்தார் !
பெருமையுடன் உளம்மகிழ
புதுகைநகர் வந்தேன் !
நறுமலரின் சீர்த்தஉளம் நலமழிய எண்ணம்,
நலிவடைய புதியபல
படிப்பினைகள் கொண்டேன் !
பணிபுரிந்து வாழ்வியற்ற வாழ்த்தியவர் கண்டேன் !
பழகுதற்கு உரிமையுடன்
அணுகியவர் இல்லை !
அணிமிகுந்து வானுயர்ந்த மாளிகைகள் கண்டேன் !
அன்புடனே உறவுகொள்ள
விழைந்தவர்கள் இல்லை !
உணவுதேடி நாடிபல விடுதிகளைக் கண்டேன் !
உவப்புடனே அளிப்பதற்கு
முன்வருவார் இல்லை !
பணத்தினையே பெரிதுஎன மதிப்பவர்கள் கண்டேன் !
பண்புதனில் இனியவரைப்
போற்றிடுவார் இல்லை !
வழிமறைந்து நிலைகுலைந்து உளம்வருந்த நின்றேன் !
வான்மழையாய் ஆங்கொருதாய் துயர்விலக்க வந்தாள் !
விழிதனிலே அருளுடனே உணவுண்ணத் தந்தாள் !
விருப்புடனே அதையுண்டு
நலம்பேணி
வந்தேன் !
அன்புதனை விழியிலேந்தி
தங்கையவள் வந்தாள் !
அவளோடு உறவாடி இதயத்தை வென்றேன் !
கன்னிப்பூ அவளெந்தன் உளந்தன்னைக் கொண்டாள் !
கவடின்றி அன்போடு ஒருபாதை நின்றோம் !
அயலார்கள் பழிகூற வழிமீது வந்தார் !
அஞ்சாது எதிர்நின்று போராடி வென்றோம் !
வெயிலாகச் சிலபேர்கள் எமைச்சாடி வந்தார் !
விரிவாகச் சொன்னோம்பின்
வழிமாறிச்
சென்றார் !
எதிர்போகிப் புறங்கூறும் இழிவான சிலபேர்
இடையூறு விளைவிக்க வழிதேடி வந்தார் !
சதிகாரர் மறைவாகப் பலவின்னல் செய்தார் !
சாய்க்கடை மொழிபேசி வசைபாடி வந்தார் !
உயிரான உறவுக்குப் பழிசூழச் செய்தார் !
உண்மைக்குத் திரையிட்டு விளங்காமல் செய்தார் !
பயிரான பெண்மைக்குக் களங்கத்தைப் பெய்தார் !
பாவமென் உயிர்த்தங்கை மனம்வாடி நின்றாள் !
சொல்லுதற்கு இயலாத சூழலால் தீயோர்,
சொல்மிக்க மதிப்பெய்த உயர்வாகி நின்றார் !
புல்லிற்கு இணைசெல்லும் புலையர்தம் கூற்றால்,
பொய்யென்ற தீயால்மெய் புகையாகச் செய்தார் !
தங்கைக்கு இடையூறு தவிர்க்கின்ற நோக்கில்,
தடம்மாறி மறைவாக இடந்தேடி வந்தேன் !
மங்கையின் உளம்பூத்த மாசற்ற நட்பின்
மாண்பினை உணராத மதிகெட்ட உலகம் !
கயமையே உருவாகப் பணம்தேடும் மாந்தர் !
கரவாமல் மெய்பேசத்
தடுமாறும் சுற்றம் !
பயம்மிக்க உணர்வோடு மனம்வாடும் பெண்டிர் !
பலவுமென் உள்ளத்தில்
பகடையாய்ச் சூழ,
வெறுப்புற்று வழிமாறி வெளியேறி வந்தேன் !
விழிமீது நீரேந்தி அவள்நொந்து
நின்றாள்
!
அறுபட்ட கொடியாக உயிர்வாடி நொந்தேன் !
ஐந்தாறு நாளாக எனைத்தேடி
நின்றாள்
!
உறுதிக்கு இடந்தந்து மறைவாக வாழ்ந்தேன் !
உள்ளத்தில் அவள்வந்து உறவாடி நின்றாள் !
மறுத்துள்ளம் இளைப்பாற மலைச்சாரல் சென்றேன் !
மனம்நொந்த என்தங்கை அழுதங்கு நின்றாள் !
துயருக்குப் பொருள்கேட்டு முகம்பார்த்து நின்றேன் !
உயிருக்கு முடிவெய்த
வழிகூறச் சொன்னாள் !
உயர்வான நெஞ்சத்தை உணராத உலகில்
உயிர்வாழ்ந்து பயனென்ன ?
உரையீரோ என்றாள் !
அன்பிற்குத் தடையிட்டு அணைபோட உலகில்,
அரணேது
? அறியாது ! இன்றிந்த உலகம் !
என்பற்ற நாவின்று பலவாறு பேசும் !
எதற்காகப் பிரிந்தென்னை
மறைவாக வேண்டும் ?
முன்னைப்போல் அன்போடு உறவாடி வாழ்வோம்!
முரணுற்று மறைவாக
வாழாதீர்
! என்றாள் !
அன்னைக்கு நிகரான அன்பார்ந்த தெய்வம் !
அறிவிற்கு ஒளியூட்டி
வழிகாட்டி நின்றாள் !
அழுக்காறு மிகுந்தோரின் விழிப்பார்வை அஞ்சி,
அன்பிற்குத் திரையிட்டு
உயிர்வாழ்தல் வாழ்வா ?
குழப்பங்கள் தெளிவுற்றுக் கரம்பற்றிக் கொண்டோம் !
கொடுமைக்கு முடிவெய்த சூள்கொண்டோம்
! வெல்வோம் !!
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------