கொத்து (01) மலர் (032)
-------------------------------------------------------------------
வார இதழ் ஒன்றில் வெளியான
சிறுகதையை மையமாகவைத்து
எழுதப்பட்ட கவிதை !
[ஆண்டு.1970]
-----------------------------------------------------------------------------------------------------
மணங்கமழும் பூக்காட்டில் மயங்கும் வண்ண,
மயிலென்று எண்ணியுளம் மகிழச் செய்தேன் !
அணங்கவளே மங்கையருள் அமுதம் என்று
ஆசையுடன்
நெஞ்சமதில் அமரச் செய்தேன் !
குணத்தினிலே கன்னியவள் குரிசில் என்று
குடியிருக்க எனதுள்ளக் குடிலைத்
தந்தேன் !
கணப்பொழுதில் எண்ணமெலாம் கலையச் செய்து
காரிகையாள் உள்ளமதைக் கனலால்
சுட்டாள் !
தென்னையெழில் மஞ்சமதில் தவழும் கிள்ளைத்
திருவுருவாய் எண்ணியுளம் ததும்பச் செய்தேன் !
கன்னிமகள் பொங்குதமிழ்க் கவிதை என்று
கற்பனையில் சிலையெடுத்துக்
களிக்கச் செய்தேன் !
புன்னகையை மருந்தாக்கிப் பிணிசூழ் நெஞ்சின்
பிழைதீர்க்கும் பூவையென
உளப்பூ தந்தேன்
மின்னலென எண்ணமெலாம் மேவச் செய்து
மேகலையாள் உள்ளமதைக்
கனலால் சுட்டாள் !
மாங்கனியின் தீஞ்சுவையில் மகிழும் கொன்றை
மணிக்குயிலாய் எண்ணியுளம் மலரச் செய்தேன் !
பூங்கொடியாள் குழலியருள் பொதிகை
என்று
புளகமுற மனக்கதவைத்
திறக்கச் செய்தேன் !
தீங்குறளின் நெறியொழுகும் தெரிவை
என்று
திண்மையுடன் நம்பியுளத்
தேரில் கொண்டேன் !
கங்குலென எண்ணமெலாம் கருகச் செய்து
கணிகையவள் உள்ளமதைக்
கனலால் சுட்டாள் !
துள்ளியெழும் வெள்ளலையில் துவளும் நாவாய்,
தூவியெழில் வான்குருகாய்த் தோன்றக்
கண்டேன் !
கள்வழியும் நீள்குறிஞ்சிக் கவின்பூ என்று,
களிப்புடனே மனக்காவில் கமழச்
செய்தேன் !
வெள்ளிநிலா துஞ்சுமெழில் வனிதை நல்லாள்,
விழிமலரில் துஞ்சியெழ வேட்கை கொண்டேன் !
பள்ளிகொண்ட எண்ணமெலாம் பதராய்ச் செய்து
பனிமலராள் உள்ளமதைக் கனலால்
சுட்டாள் !
-------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------