name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, அக்டோபர் 12, 2019

தமிழ் (20) அத்திம்பேர் ! அம்மாஞ்சி !

பொருள் புரியாச் சொற்கள் ! புழக்கத்தில் இருப்பது ஏன் ?


[தருமபுரியை அடுத்த இலக்கியம்பட்டி கம்பர் தெருவில் ஒருவீடு]
-------------------------------------------------------------------------------------------------------------

மணி : வாருங்கள் அத்திம்பேர் ! அம்மாஞ்சி நீயும் வாடா !

அத்திம்பேர் : ஏனடா மணி ! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் ? படிப்பெல்லாம் முடிந்து விட்டதா ?

மணி : ஆமாம் அத்திம்பேர் ! மின்னியல், மின்மவியலில் பொறியியல் பட்டப் படிப்பு ! சென்ற மாதம்தான் முடிவடைந்தது ! இனி வேலை தேடும் படலம்தான் !

அத்திம்பேர் : அதற்கென்ன ? ஏதாவது ஏற்பாடு செய்வோம் ! ஆமாம் அம்மா எங்கே ?

மணி : அம்மா ! அத்திம் பேர் வந்திருக்கிறார். கூடவே அம்மாஞ்சியும் வந்திருக்கிறான். வந்து பாருங்கள் !

அம்மா : வாருங்கள் அண்ணா ! வாடா அம்பி !  வீட்டில் மன்னியும் குழந்தைகளும் நலமா ?

அத்திம்பேர் : எல்லோரும் நலம்தான் தாமரை ! ஆமாம், நீயும் அகத்துக்காரரும் எப்படி இருக்கிறீர்கள் ?

அம்மா : நாங்கள் நலந்தான் அண்ணா ! மணி பொறியியல் பட்டப்படிப்பு முடித்து விட்டான் ! அவனுக்குத் தான்  ஏதாவது வேலைக்கு ஏற்பாடு செய்யவேண்டும் !

அத்திம்பேர் : நான் தான் தமிழ் படித்து விட்டு ஆசிரியராக அல்லாடுகிறேன் ! மணியாவது பொறியியல் பட்டப்படிப்பு படித்திதிருக்கிறானே ! அதுவரை மகிழ்ச்சி தான் !

மணி : சரி அத்திம்பேர் ! உங்கள் ஊர்க்காரர் ஓசூரில் ஒரு நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறாரே ! அவர் மூலம் எனக்கு உதவி செய்யக் கூடாதா ?

அத்திம்பேர் : சரி மணி ! அடுத்த மாதம் எங்கள் ஊருக்கு வா ! அவரைப் போய்ப் பார்ப்போம் !

மணி : சரி அத்திம்பேர் ! வருகிறேன் !

அத்திம்பேர் : ஆமாம் மணி ! சொல்லுக்குச் சொல் அத்திம்பேர் அத்திம்பேர் என்கிறாயே ? அத்திம்பேர் என்பதற்கு என்ன பொருள்  சொல் பார்ப்போம் ! கூடவே அம்மாஞ்சி, மன்னி என்பதற்கும் பொருள் சொல்ல முடியுமா ?

மணி : அத்திம்பேர் என்றால் அத்தை வீட்டுக்காரர் ! அம்மாஞ்சி என்றால் அத்திம்பேரின் மகன் ! அண்ணன் மனைவி மன்னி ! என்ன சரிதானா அத்திம்பேர் ?

அத்திம்பேர் :  சரி மணி ! அத்திம்பேர், அம்மாஞ்சி, மன்னி  என்றால் யார் என்று சொன்னாயே தவிர, அந்தச் சொற்களின் பொருள் அல்லது திருந்திய வடிவம்  என்னவென்று சொல்லவில்லையே ?

மணி : எல்லோரும் வழக்கமாகச் சொல்வதைத் தான் நானும் சொன்னேன் ! அந்தச் சொற்களுக்குப் பொருள் தெரியாதே அத்திம்பேர் !

அத்திம்பேர் : சரி நானே சொல்கிறேன் ! அத்தை + அன்பர் = அத்திம்பேர் ! அத்தையின் அன்பர், அதாவது அத்தையின் கணவர் என்று பொருள் !

மணி : அப்படியா ? சரி ! அம்மாஞ்சி ?

அத்திம்பேர் : அம்மான் என்றால் மாமன் என்று பொருள். அம்மானின் சேய், அதாவது அம்மானின் மகன் அம்மாஞ்சி ! இப்பொழுது புரிகிறதா ?

மணி : புரிகிறது அத்தையன்பர் அவர்களே ! மன்னி என்பதற்கும் அப்படியே பொருள் சொல்லிவிடுங்கள் !

அத்திம்பேர் : அண்ணல் என்றால் பிற பொருள்களுடன் தமையன் என்றும் ஒரு பொருள் . அண்ணல் என்ற சொல் மருவி அண்ணன் ஆகிவிட்டது. அண்ணன் மனைவி அண்ணி. இந்த அண்ணன் என்பவர் ஒரு வீட்டின் தலைவர். அதாவது மன்னன் ! மன்னனின் மனைவி மன்னி ! அண்ணன் மனைவி அண்ணி; மன்னன் மனைவி மன்னி ! அவ்வளவுதான் !

மணி : தமிழ் நாட்டில் இருக்கிறோம்; அன்றாடம்  தமிழில் பேசுகிறோம்; ஆனால் சில சொற்களுக்குப் பொருள் புரியாமலேயே வாழ்கிறோம் ! இது தவறன்றோ ?

அத்திம்பேர் : தவறு தான் ! அதற்காக நிரம்பவும் வருந்தாதே ! இனி சரியாக எழுதவும் பேசவும் முயற்சி செய் ! அது போதும் !

மணி : அத்தையன்பரே ! உங்களுக்கு ஒன்று தெரியுமா ? நான் பேடுருளி ஒன்று வாங்கி இருக்கிறேன் !

அம்மான் சேய் :  (இடையில் குறுக்கிட்டு) பேடுருளியா ? அப்படியென்றால் என்ன ?

அத்தையன்பர் : குமரன் ! ”பேடுருளி என்றால்  MOPED ! முகநூற் குழுவான தமிழ்ப் பணி மன்றத்தில் இதைப்பற்றி விரிவாக ஒரு கட்டுரை வந்தது ! பார்த்தேன்! உணவு அருந்தியபின் உனக்கு இது பற்றி விளக்கமாகச் சொல்கிறேன் !

அம்மா : சரி ! எல்லோரும் வாருங்கள் ! உணவருந்தலாம் !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
 வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல் (ஆவணி) 06]
{23-08-2019}
----------------------------------------------------------------------------------------------------------
       
 “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

----------------------------------------------------------------------------------------------------------