பேச்சு மொழியை எழுத்தில் வடிப்பது மாபெரும் தவறு !
மனித உடலுக்கென்று ஒரு
கட்டமைப்பு உள்ளது. இரு கைகள், இரு கால்கள், இரு விழிகள், இரு
செவிகள், ஒரு வாய், ஒரு மூக்கு,
ஒரு முகம், ஒரு தலை மற்றும் இன்னும் சில உறுப்புகளும்
அமைந்த கட்டமைப்புக்கு மனிதன் என்று பெயர். அத்துணை உறுப்புகளுடனும்
தான் ஒரு குழந்தை இந்த உலகத்தில் பிறக்கிறது !
மனிதன் மட்டுமன்றி அனைத்து
உயிரினங்களும் - புல், பூண்டு,
புழு, பூச்சி, பறவைகள்,
விலங்குகள் அனைத்துமே -
குறிப்பிட்ட திட்டவட்டமான உடல் கட்டமைப்புடனேயே உருவாகி வாழ்கின்றன
! இதுதான் இயற்கை நியதி ! இந்த இயற்கை நியதியைச் சிதைக்கும் உரிமை எந்த மனிதனுக்கும்
கிடையவே கிடையாது !
மொழிகளும் இப்படிப் பட்டவையே ! ஒவ்வொரு மொழிக்கும் ஒரு கட்டமைப்பு உண்டு ! ஆங்கிலத்தில்
26 எழுத்துகள் இருப்பதைப் போலத் தமிழில் 247 எழுத்துகள்
உள்ளன. எழுத்துகளைக் கூட்டவோ, குறைக்கவோ,
சிதைக்கவோ எந்தவொரு தனி மனிதனுக்கும்
உரிமை இல்லை !
“சூரியன்”
என்று எழுதியிருப்பதைச் “சூரியன்” என்று தான் பலுக்க (உச்சரிக்க) வேண்டும் ! “சூரியன்” என்பதுடன் ஒரு எழுத்தைச் சேர்த்தோ அல்லது ஒரு
எழுத்தை குறைத்தோ, சொல்லைச் சிதைத்துப் பலுக்குவதற்கு
(ஒலிப்பதற்கு) யாருக்கும் உரிமையில்லை
!
“எப்பொழுது வந்தாய்?”
என்று எழுத்து வடிவில் உள்ள சொற்றொடரை , அப்படியே
தான் ஒலிக்க வேண்டும் ! ”எப்ப வந்த ?” என்று
சிதைத்து ஒலிக்கக் கூடாது ! ஒரு மொழியின் வடிவமானது எழுதும் போதும்
சிதைவடையக் கூடாது; உரையாற்றும் போதும் சிதைவடையக் கூடாது;
அச்சு ஊடகத்தில் ஏற்றப் படும் போதும் சிதைவடையக் கூடாது; தொலைக்காட்சி முதலிய மின்ம ஊடகங்களில் ஒளிபரப்பு ஆகும் போதும் சிதைவடையக் கூடாது;
திரைப்படம் முதலிய காட்சி ஊடகங்களில் காட்டப்படும் போதும் சிதைவடையக்
கூடாது !
ஏனெனில், மொழியைப் பலுக்குவதில் (உச்சரிப்பதில்) சிதைவை ஏற்படுத்த எந்தவொரு மனிதனுக்கும் உரிமையில்லை ! கவிதை என்ற பெயரில், சிலர் ”பேச்சுத்
தமிழை”, அச்சு ஊடகத்திலும் மின்ம ஊடகத்திலும் ”கொச்சைத் தமிழாக”ப் பதிவேற்றம் செய்து வருவதைக் காண்கையில்
மனம் வருந்துகிறது. இவர்கள் கவிஞர்கள்தானா, தமிழ் மீது பற்று உள்ள மானிடர்கள் தானா என்ற ஐயம் எழுகிறது !
பேச்சுத் தமிழில் சொற்கள்
திருத்தமில்லாது இருக்கலாம்; குறைபாடுகள் இருக்கலாம்;
எல்லா மொழிகளிலிலும் “பேச்சு மொழி” திருத்தமில்லாது தான் இருக்கும். இது இயல்பு தான் ! ஆனால், அதை அப்படியே எழுத்தில் வடிக்க முற்படுவது மாண்பு
நெறி தவறிய செயல்.! மதி
மழுங்கிய செயல் !
“எப்படி இருக்கே
?” என்பது அனைத்து மாந்தர்களின்
”பேச்சுத் தமிழ்”.
கற்ற மாந்தர்கள் அதை எழுத்தில் வடிக்கையில் “எப்படி
இருக்கிறாய் ?” என்றுதான் எழுத வேண்டும். பேச்சு மொழியையே எழுத்திலும் கொண்டு வருவேன் என்று யாராகிலும் பிடிவாதம் செய்வாராகில்
அவர் பித்தம் பிடித்தவர் என்றுதான் சொல்ல வேண்டும் !
தமிழ் நமது அன்னை மொழி ! அன்னை மொழியைச் சிதைப்பது, பெற்ற அன்னையைச் சிதைப்பதற்கு
ஒப்பாகும் ! “தின்றுவிட்டாயா ?” என்னும்
சொல்லைத் “துன்னுட்டியா ?” என்று கவிதையாக
எழுதிப் படித்தாலும் சரி, முகநூலில் எழுதி வெளியிட்டாலும் சரி,
அச்சு ஊடகத்தில் வெளியிட்டாலும் சரி, தொலைக் காட்சி
உரையாடலில் இடம் பெறச் செய்தாலும் சரி, திரைப்படத்தில் ஒலிக்கச்
செய்தாலும் சரி, அப்படிச் செய்பவர், பெற்ற
அன்னையின் கை கால்களை ஒடித்து முடமாக்குகிறார் என்று பொருள் !
இயல் வாய்மை
(REALISM) என்ற பெயரில் “துன்னுட்டியா
?” என்று மேடைகளில் பேசுவதும், கதைகளில் உரையாடலை
அமைத்து அச்சிடுவதும், முகநூலில் எழுதுவதும், திரைப்படங்களில் காட்சிகள் அமைப்பதும் அதற்காக வரிந்துகட்டிக் கொண்டு வாதாடுவதும்,
பித்துப் பிடித்தவர்களின் கூன்மதிச் செயல்களாகும். கொச்சை மொழியில் அல்லது கலப்பு மொழியில் செய்தித்தாளில் தலைப்புகளை அமைத்திடும்
தாளிகையினரும் இத்தகையவர்களே ! இவர்கள் தங்கள் தவறினை உணர வேண்டும்
!
திருத்தமற்ற தமிழ்ப் பேச்சுகளையும், எழுத்துகளையும் பரப்பி வரும் கற்றறிந்த பாழ் மனதினர், அதை முனைப்பாக ஆதரிக்கும் மூடர்கள், வழக்குரைஞராக மாறி
வாதாடும் வறிஞர்கள், எல்லோருமே, அன்னைத்
தமிழை அரசவையில் நிறுத்தி, அன்று துச்சாதானன் செய்த கொடுஞ்செயலை
நிகழ்த்துகிறார்கள் என்பதை உணர வேண்டும் !
கொச்சை மொழியில் பேசுவதும், எழுதுவதும்தான் பொதுமக்களுக்குப் பிடிக்கிறது என்று எந்த மூடனாவது சொல்வானாகில்,
அவனைப் பார்த்து நான் கேட்க விரும்புகிறேன், “அன்னைத்
தமிழைச் சிதைக்கிறாயே ! அலகை மாந்தனே ! நீ பொதுமக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக உன்னைப் பெற்ற தாயின் கைகால்களைத் துண்டித்து
அவளது துகிலையும் உரித்தெறிய முயல்வாயா, சொல் ?”
”பேச்சுத் தமிழ்”
இரு ஆளிநர்களிடையே நிகழும் உரையாடலில் இடம் பெறலாம் ! மேடைப்பேச்சில் “பேச்சுத் தமிழுக்கு” இடமில்லை; முகநூலிலும், தாளிகைகளிலும்
எழுத்து வடிவில் வெளிவரும் கவிதை கட்டுரைகளில் இடம்பெறலாகாது ! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ”பேச்சுத் தமிழ்”
இடம் பெறுதல், மொழிச் சிதைவைப் பொதுமக்களிடையே
ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். திரைப்படங்களில் “பேச்சுத் தமிழ்” இடம்பெறுதல், படத்தைப்
பார்க்கும் அனைவரிடமும் அதைப் பரப்புரை செய்வதாகிவிடும் !
அறிவுள்ள தமிழன் மொழிச்
சிதைவுக்குத் துணைபோக மாட்டான் ! மானமுள்ள தமிழன் மதி பிறழ்ந்து
மொழிச் சிதைவுக்கு இடம் தரமாட்டான் !
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்.
[தி.பி.2050,மடங்கல் (ஆவணி(,24]
{10-9-2019}
------------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------