name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வெள்ளி, அக்டோபர் 11, 2019

தமிழ் (17) தமிழும் பிறமொழிக் கலப்பும் !

பிறமொழிக் கலப்பினால் தமிழுக்கு  ஏற்பட்ட ஊறு !


(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதியதமிழில் எழுதுவோம்என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
---------------------------------------------------------------------------------------------------------

மொழியின் வேலையே, ஒருவர் கருத்தை  இன்னொருவர் தெரிந்து கொள்வதற்குப் பயன்படுவது தானே ?  இங்ஙனம் இருக்க, தமிழ்ச் சொற்களையே தேடிப் போட்டுப் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பது எதற்கு என்பர் சிலர்.
 !

தமிழ்மொழி மட்டும் அன்று, வேறு எந்த மொழியானாலும், இன்றைக்கு மக்களால் புரிந்துகொள்வதோடு நின்றுவிடாமல், நெடுங் காலத்திற்குப் பின்பும், அக்காலத்து மக்கள் இந்நாளைய மக்களின் கருத்துகளைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், அம்மொழி எக்காலத்திலும் தம் இயல்பு மாறமல் வழங்கப் பெற்று வரவேண்டும் !

இப்படிச் சொல்வதால், அம்மொழி, காலத்துக்கு ஏற்றபடிப் புதுச் சொற்களை ஏற்று வளர்ச்சி பெறாமல், என்றும் ஒருபடித்தாக இருந்துவிட வேண்டும் என்று கூறுவதாக நினைக்கக் கூடாது. வளர்ச்சி இன்றியமையாதது தான். புதுக் கருத்துகள் தோன்றத் தோன்றப் புதுச் சொற்களும் தோன்ற வேண்டியவையே !

ஆனால், அச்சொற்கள், அம்மொழியில் வேர் அமைத்துக் கொண்டு முளைக்க வேண்டும். வேரற்ற குருட்டுச் சொற்களாக, பிறமொழிச் சொற்களாகச் சேர்த்து வைத்துவிட்டால், அம்மொழி உண்மை வளர்ச்சி பெற்றதாகாது. விரைவில் சிதைந்து, பல மொழிகளாகப் பிரிந்து போக நேரும் !

தமிழில் பிறமொழிச் சொற்கள் பல நூற்றாண்டுகளாக, வரம்பின்றிப் புகுத்தப் பெற்றதன் விளைவே, அம்மொழி, தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம் என்றெல்லாம் பிரிந்து போக நேர்ந்ததாகும்.  பிறமொழிக் கலப்பு இல்லாமல் தமிழ் வளர்ந்திருந்தால், பிரிந்த இம்மொழிகளும் பிரியாமலிருந்து, இன்றிலும் பெரியதும் புகழார்ந்ததுமான  தமிழ் மொழியாக விளங்கி, தமிழினம் ஒரு மாபெரும் இனமாக நம் நாட்டில் தலைசிறந்து மிளிருமன்றோ ?

தமிழை உள்ளிட்ட இம்மொழிகளில், இன்னமும் அடிப்படைச் சொற்கள் ஒரே வேர் உடையனவாக இருக்கின்றன.  நாம், முதலில், ஒரே மொழியினராக இருந்தோம் என்பதற்கு அவை சான்று பகர்ந்து கொண்டு இருப்பினும், பிற மொழிக் கலப்பினால் பிரிவு தோன்றியதனால், மனமும் பிரிந்தவர்களாய், நாம் வேறு வேறு இனத்தவர் என்று எண்ணிக் கொண்டு, ஒரு நேரம் போராடவும் செய்தோம் அல்லோமா ?

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல் (ஆவணி)03]
{20-08-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
    
   “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------