name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வெள்ளி, அக்டோபர் 11, 2019

தமிழ் (16) ஆங்கிலத்தின் படிமுறை வளர்ச்சி !

அயல்மொழிச் சொற்களை அளவின்றி ஏற்றால் என்னவாகும் ? 


(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதியதமிழில் எழுதுவோம்என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
----------------------------------------------------------------------------------------------------------

அயல்மொழிச் சொற்களை அளவின்றி ஏற்றுக் கொண்டமையினாலே, ஆங்கிலம் வளர்ந்துவிட்டது, என்னும் ஒரு வாதம் செய்யப்படுகிறது. இது தப்பு வாதம்.  அதைப் போல், தமிழும் வேற்றுச் சொற்களால் வளர்ந்துவிடும் என்று ஒரு பொய் வாதம் செய்யலாம். அஃது என்ன வளர்ச்சி ?

மிகப் பழைய தமிழகத்தின் வேறு வேறு பகுதிகளான, வடுகம், கன்னடம், துளுவம், மலையாளம் இவற்றில் வழங்கிய தமிழ்மொழி, பேச்சு வழக்கில் சிறிது சிறிது வேறுபட்டிருந்தது.  அயற்சொற்களின் அளவு மீறிய திணிப்பால், அப் பேச்சு வழக்குத் தமிழ் மொழி வடிவங்கள் உருத் தெரியாமல் மாறி, வடுகு (தெலுங்கு), கன்னடம், துளுவம், மலையாளம் என, வேறு வேறு மொழிகள் ஆகிவிட்டன. இது சிதைவா ? வளர்ச்சியா ?

நான்கு குவளைகளில் உள்ள நல்ல பாலில், ஒன்றில் குளம்பிச் சாறும், இன்னொன்றில் தேநீர்ச்சாறும், வேறொன்றில் சுக்கு மல்லிச் சாறும், மற்றொன்றில் மூலிகைச் சாறும் துளித் துளியாகப் போட்டுக் கொண்டே வருவோமானால், ஒரு நிலைக்குப் பிறகு, அவை ஒவ்வொன்றும் பால் என்னும் பண்பு மாறி, குளம்பியாகவும், தேநீராகவும், சுக்கு மல்லி நீராளமாகவும், மூலிகை நீராளமாகாவும் ஆகிவிடுவது திண்ணந்தானே ?

பிறகு அவற்றிற்குப் பாலின் இலக்கணம் பொருந்துமா ? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் இலக்கணம் வகுக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டு விடுவது இயல்புதானே ?

இங்ஙனமேசாக்சன்மொழி, பிறமொழி ஏற்பால் முதலில் பெரிதானது உண்மையே ! ஆனால் அப்படி ஏற்றதனால்  சாக்சன்என்னும் பண்பு மாறி, ‘ஆங்கிலோ சாக்சன்  என்னும் வேறு ஒரு மொழியாயிற்று ! அங்ஙனம் ஏற்றுத் தான் அம்மொழி பெரியது ஆக வேண்டி இருந்தது. ஏறத்தாழ 1500  ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில்பியோஉல்ப்என்னும் ஓர் இலக்கியம் உண்டாவதற்கு வகை செய்தது இக் கலப்பேஅந்த ஆங்கிலபழைய ஆங்கிலம்என்று சொல்லப் பெற்றது !

கடன் வாங்காமல் இருந்தால், இலக்கியம் செய்யும் அளவுக்கு, அம் மொழியில் சொற்கள் இல்லாமல் இருந்த காலம் அது !  ஏற்றுக் கொண்ட சொற்கள் போதாமையால், மேலும் மேலும் ஏற்றுக் கொண்டே செல்ல வேண்டி இருந்தது.  மூல மொழியின் வேர்களைக் கொண்டே, புதுச் சொற்களை ஆக்கிக் கொண்டு வளர்ச்சி உறுவதற்கு ஏற்ற அளவு அம் மூலமொழி வளம் உள்ளதாக இருக்கவில்லை. அம் மூலமொழியைப் பேசியவர்களும் இவ்வகைக்கு அப்போது ஊக்கமற்று இருந்தனர் !

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலத்தில் சில இலக்கியங்கள் செய்யப் பெற்றன.  அவைஇடைக்கால ஆங்கிலம்  எனச் சொல்லப் பெறும். ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்பிற்கால ஆங்கிலம்உருவாயிற்று. அதில் எழுதிய சிறந்தவர் சாசர்.  எனவே அதனைச்சாசர் ஆங்கிலம்என்பர்.  இப்போது நாம் படிப்பது வேறு ஆங்கிலம். ’இன்றையஆங்கிலத்தில் வல்லவராக இருக்கும் ஒருவர்சாசர்ஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள முடியாது.  அதைப் படித்த ஒருவர்இடைக்காலஆங்கிலத்தைப் புரிந்து கொள்ள இயலாது. ’இடைக்காலஆங்கிலம் தெரிந்தவர் பழையஆங்கிலத்தை அறிந்துகொள்ள மாட்டார் !

இவ்வாறாக, ஆங்கிலம் பிறமொழிக் கலப்பால் வளர்ந்தது என்று சொல்கிறோமே அல்லாமல், உண்மையில் அஃது உருமாறி நான்கு மொழிகளாக ஆகிவிட்டது. ஆனால் அவற்றை, வேறு வேறு மொழிகள் என்று சொல்லாமல்ஆங்கிலம்என்னும் பெயராலேயே குறிக்கிறோம் !

இப்படியே, தமிழும் பிறமொழி ஏற்பால், பெரிதும் வளர்ந்துவிட்டது என்பது உண்மையாகுமா ?   தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் யாவும் தமிழ் மொழியே என்றால் எவரேனும் ஒப்புக் கொள்வாரா ?  நான்கு புது மொழிகளைப் பெற்றெடுத்து வளர்த்துவிட்டது, என்று வேண்டுமானால் பெருமையடித்துக் கொள்ளலாம் !

ஆங்கிலம் பிறமொழிக் கலப்பால் பெரிய மொழியாகி, உலகம் முழுவதும் வழங்கும் உயர்நிலை பெற்றது என்பர்.  ஆங்கிலம் சிறந்தது எதனால் என்று, கூர்ந்து அறியாதவர்களின் கூற்றே இது.  ஆங்கிலேயன் வல்லாளன். எனவே, அம் மொழி உலக மொழி ஆயிற்று ! 

தமிழன் அங்ஙனம் வல்லவனாக இருந்தால், தமிழுக்கு இயல்பாகவே இருக்கும் பெருஞ் சிறப்புக்கு, இம் மொழி எத்தனையோ பெருமை பெற்று விட்டிருக்குமே !  உலகத்திலேயே மிகப் பழமையானதும், எந்தக் கருத்தையும் தெரிவிக்கும் புதுச் சொற்களை ஆக்கிக் கொள்வதற்கு ஏற்ற மூலவளங்கள் பொருந்தியதுமான, மொழியைத் தனக்கு உரியதாக வைத்துக் கொண்டு, தமிழன், பிறமொழிகளிலிருந்து சொற்கள் கடன் வாங்குவதும், அதனால் தமிழை வளர்ப்பதாகச் சொல்வதும், கேலிக் கூத்தாக இருக்கின்றது !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மடங்கல் (ஆவணி)04]
{21-08-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
    
-----------------------------------------------------------------------------------------------------------
  ”தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !!
-----------------------------------------------------------------------------------------------------------