கொத்து
(01) மலர் (017)
==============================================================
புதுக்கோடையில் பூத்த பொங்கல் மலர் !
(ஆண்டு 1970)
பொங்கல் வாழ்த்து !
[ இது ஒரு கிராமத்துக் காட்சி ]
=====================================================
பொழுதெழில் புலர்ந்துவரும் !
புள்ளினங்கள் ஆர்த்துஎழும் !
பொற்கதிர்கள் மேலெழுந்துப்
பூவுலகை ஊடுறுவும் !
தாழைமடல் தூளிவிழும் !
தண்ணிலவும் நாணியெழும்: !
தரணியெலாம் வான்பனியைத்
தழுவியுடல் மீமகிழும் !
கருங்குருவிக் கூச்சலிடும் !
கட்டவிழும் மொட்டிதழும் !
காரிகையர் கற்பனையில்
கைவளரும் கோலம்மிகும் !
வரம்புகளில் பரங்கிமலர்
வான்பார்த்துப் நகைமுகிழும் !
வண்டுகளின் ஊங்காரம்
வாழ்த்தோதும் கதிரசையும் !
கன்றுகளை நினைந்துருகும்,
கறவைகள் பால்சொரியும் !
கட்டவிழ்த்து விடப்பட்டக்
காளையெக்கர் மீதுலவும் !!
சென்றுவருக வருகவெனச்
செங்காந்தள் கையசைப்பாள் !
சிரந்தாழ்த்தி மார்கழியாள்
சென்றிடுவாள், தைவருவாள் !
ஏடணையாய் நெல்சொரிந்து
இவ்வுலகைக் காத்திடுவாள் !
ஏரோட்டும் கைப்பிடித்துப்
பாராட்டிச் சீர்தருவாள் !
நன்மைகளைத் ”தை”தருவாள் !
நாமவளைப் போற்றிடுவோம் !
நாவினிக்கப் பொங்கலிட்டு
நன்றிசொலி; வாழ்த்திடுவோம் !!
============================================================
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.