கொத்து (01) மலர் (009)
========================================================================
எனது பள்ளித் தோழரும்,
சென்னை, கால்நடை மருத்துவக் கல்லூரியில்
மருத்துவராகப் பயிற்சி
பெற்று வந்தவருமான நண்பர், திரு.
இரத்தின. இராசேந்திரனுக்கு எழுதிய
கடித வடிவக் கவிதை
(ஆண்டு. 1969)
====================================================
வானுறு மதியின் தண்மை
வழங்கிடும் வதனம் கொண்டாய் !
கானுறு புலியின் வீரம்
கழன்றிடும் விழிகள் கொண்டாய் !
தேனுறு காந்தள் அன்னத்
திகழ்ந்திடும் இதழ்கள் கொண்டாய் !
மானுறு சிவந்த மேனி
மயக்கிடும் நகையும் கொண்டாய் !
இன்புறு நெஞ்சக் கோயில்
எழுந்த என்ஏந்தல் ஆனாய் !
அன்புறு தாய்போ லானாய் !
அணைத்திடு துணைவன் ஆனாய் !
மன்னுறு துன்பம் தோன்றின்
மகிழ்வுடன் உதவச் செய்தாய் !
என்னரு மணியே ! முத்தே !
எழுகதிர் நீயே யன்றோ !
சங்கமும் மகர மீனும்
தரளமும் முத்தும்
தோன்றும்,
வங்கநீர்க் கரையில் வாழும்
வழுதியின் தோன்ற
லே,நீ !
பொங்கிடு மின்பம் எல்லாம்
புலனுறத் துய்த்தல்
வேண்டும் !
மங்கையை மணந்து வாழ்வில்
மகிழ்வுடன் வாழ்தல்
வேண்டும் !
அஞ்சன வண்ணன் உந்தன்
ஆருயிர் இராஜ சேகர் !
வஞ்சனை அறியா நண்பன்
வல்லவன் செரீபும் உண்டு !
செந்தமிழ்ச் சிந்து பாடும்
செல்வனாம் பாலனும் உண்டு !
சந்தனம் நிகர்த்த நண்பர்
சங்கமே உனக்கு உண்டு !
இத்தனைப் பயனும் பெற்று
எங்கோநீ வாழு கின்றாய் !
அத்தனைச் செல்வத் திற்கும்
அரசனாம் உன்னைப் பெற்று,
இக்கரை யான்வாழ் கின்றேன் !
இருப்பினும் இன்பம் இல்லை !
அக்கறை என்பால் உண்டேல்,
அன்பனே ஒருமுறை வாராய் !
-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம் முகநூல்.
--------------------------------------------------------------------------------------