கொத்து (01) மலர் (040))
--------------------------------------------------------------------------------------------------------------------------------
புதுக்கோட்டையிலிருந்து தாராபுரத்திற்கு
இடமாற்றலான
இளநிலை
உதவியாளர்
திரு. வை.
கணேசனுக்காக
ஏற்பாடு செய்யப்பெற்ற தேநீர் விருந்தில்
நான் ஆற்றிய
உரை.
(ஆண்டு 1968)
-------------------------------------------------------------------------------
அன்புடன்
அருள்தவழும் அவைத்தலைவர்
அவர்கட்கும் !
அமைதியுடன் எனதுரையைச் செவிமடுக்கும் நண்பர்க்கும் !
இன்றுடன்
இம்மனையை இழிந்துசெலும்
ஏந்தற்கும் !
எழுத்தராய்ப் பணிபுரிய இவண்புகுந்த தையற்கும் !
இனிமையுடன் சுவையுண்டி ஈங்குதந்த பேரவைக்கும் !
தலைவணங்கிக் கரம்குவித்துத் தருகின்றேன் வணக்கம் !
தகைமையுடன்
ஏற்றிடுக
! தமிழ்த்தாயே வாழ்த்து !
-----------------------------------------------------------------------------------------------------------
ஈரெட்டுத் திங்கட்கு இணையாக இம்மனையில்
ஈரெட்டுத் திங்கட்கு இணையாக இம்மனையில்
எழுத்தராய்ப் பணிபுரிந்து இன்றுமுதல் மேற்பணிக்கு
தாராபுரம் நோக்கித் தாள்வைக்கும் தாளாள !
தவிக்கின்ற நெஞ்சமதைத் தருகின்றேன்
பாரீர் !!
பதிவுசெய் துறைவிலகிப் பணிவிழைந்து
இவண்போந்து
பதவியாம் பலகணியில் பணியேற்றீர்
எழுத்தரென
!
புதியபலக் கேண்மையுடன் பொற்புடனே
நீர்பழகி,
பொலிவுறுவல்
என்றெண்ணிப் புத்துவகை
கொண்டிருந்தேன்!
ஏனென்று தெரியவிலை
எனதெண்ணக் கோட்டையெலாம்
இடிந்தின்று சரிந்துவிழ ஏகுகிறீர் வெகுதொலைவு !
மான்தானோ மருளடைய ? மாங்குயிலோ
மறைந்தோட?
மல்லிகையோ வாடுதற்கு ? மணிவிளக்கோ
சுடர்வீழ
?
வான்முகிலோ கலைந்தோட ? வண்ணவில்லோ மறைந்துவிட ?
வண்ணத்துப் பூச்சியோ வாட்டமுற ? வளர்மழலை,
பொன்னுடலோ கன்றிவிட ? பூவிழியோ சோர்ந்துவிழ ?
புரியவிலை ! கேள்விதனைப் புரியவிழ்த்துச் சென்றிடுவாய் !
ஆர்வமுடன் அண்டையுள அன்பர்கள்தம் நற்பணியை,
ஆன்றவிந்த அலுவலர்கள் அடைந்திருக்கும் செயலறிவை,
ஓர்மையுடன் உன்னித்து உளமிருத்தல் உவராமல்,
ஓடியதேன் ? ஆடியதேன் ? உற்றபயன் கூறிடுவாய் !
தொட்டனைத்து ஊறிடுமே மணற்கேணி மாந்தற்கு
கற்றனைத்து ஊறிடுமே காசினியில் நல்லறிவு !
பட்டனைத்து ஊறிடுமே பட்டறிவு ! பேரறிஞர்
பற்றனைத்து சேர்ந்திடுமே
பெருமையும் பேர்புகழும் !
நவில்தரும் நூல்நயம் போலும் பயில்தரும்
பண்புடை யாளர் தொடர்பிந்தப் பார்மிசையில் !
வெயில்போலக் காய்ந்துவரின் வேட்பதற்கு யார்வருவார் ?
வெண்மதியாய், தண்புனலாய், விளங்கிடுக ! வாழ்ந்திடுக !
குத்துகின்ற முள்ளும் கோதும் கொடும்பிசினும்
குவிந்துவுள தோலடுத்துக் குடியிருக்கும் நற்சுளையும்
மொத்தவுரு சேர்ந்து முயங்குவதே மூசுபலா !
முற்றிக் கனிந்துசுவை முத்துநிறை தேன்குழலே !
சுளையுரியத் தொல்லைதரும் தோலுறையாய் உம்மிடத்து
சூழ்ந்தகுறை நீக்கிடுக ! சுகமடைந்து வாழ்ந்திடுக !
அளைந்துருகிப் பழகிடுக ! ஆர்வமுடன் பணிபுரிக !
அலுவலக நண்பர்களின் ஆதரவைப் பெற்றிடுக !
செல்லுகின்ற தடம்மீது சிலந்திவலை, புதருண்டு !
சீராய்நீர் சென்றிடுக ! சிந்தித்துச் செயல்படுக !
கொல்லுகின்ற வெம்புலிதன் குடற்பசியும் தீர்ந்துவிட்டால்
கொலைவெறி யும் வாராது ! கொடுமதியில் உழலாது !
குள்ளநரிக் குறுமனமோ குவலயத்தில் எப்பொழுதும்
குமைந்திருக்கும் !வஞ்சகத்தின் குடியிருப்பு ! இருளடவி !
கள்ளமதில் கருஞ்சிலந்தி ! கருத்துதடு மாறிடுவோர்
குருதியினைக் குடித்துவிடும் குடலுருவிச் சாய்த்துவிடும் !
வேங்கையைத் துணைகொண்டு வெளியூர்நாம் சென்றிடலாம் !
விரும்பினால் பால்கறந்துத் தாகவிடாய் தீர்த்திடலாம் !
தீங்கினையே மனதெண்ணித் திரிந்துவரும் தெருநரிகள்
தயைநாடிச் சென்றுவிடின் தாரணியில்
வாழ்க்கையிலை
!
நீரென்றால் நீரும் நன்னீராய் மாறிடுக !
நெருப்பாயின் நீரும் நெருப்பாக மாறிடுக !
நீரூற்றி நெருப்பை நீக்கிடலாம் நீறாயின்
நீள்கொழுந்துச் சுடர்நீக்க நினைப்பதுவும் பேதைமையே !
-----------------------------------------------------------------------------------------------------------
கோடுறு கிளையிற் காகம்
கூடுவைத் தனேக காலம்,
பேடொடு கூடி வாழும்
பெருமரப் பொந்தில் வந்தே,
ஆடிய நாகம் ஒன்று
அதுபெறும் முட்டை எல்லாம்,
நாடியே குடித்துப் போக
நலிந்துளம் மெலிந்து வாடி,
துயருற்ற கதையைப் போலத்
தோன்றிடும்
சிலநா கங்கள் !
அயர்வுற்ற நேரம் தன்னில்
அருகினில் மெதுவாய் ஊரும் !
பற்களைப் பதித்து நஞ்சைப்
பாய்ச்சிடும் ;
பதுங்கி ஓடும் !
புற்களில் புகுந்து கொள்ளும் !
புற்றினில் பொதிந்து வாழும் !
அடைக்கலம் அளித்தற் கென்றே
அமைந்தமண் புற்றழியோ மேல்
படைக்கலம் பயந்தர வாரா !
பணிமனை விதியிது தானே !
இளையவர் முதியோர் என்று
ஏதமே சிலர்தாம் கொள்வர் ;
களைந்திட வேண்டும் என்று
காழ்ப்பினில்
துணியச் செய்வர் !
அய்யகோ ! இவனுக் கிந்தப்
பதவிதான் சரியா ? முறையா ?
பையவே பறித்தா லன்றிப்
பயன்பெற வியலா தென்று
எண்ணாத எண்ணம் எல்லாம்
எண்ணியே ஏக்கம் கொள்வர் !
ஒண்ணாத செயல்கள் செய்வர்,
உயர்பணி யாளர் தம்மைக்
காக்கையும் பிடிப்பர் கடைக்கண்
கட்டளைச் சிரமேற் கொள்வர் !
யாக்கையும் உயிரும் தங்கள்
யாசகம் அன்றோ என்பர்
மயக்கிடு மொழிகள் கூறி
மனக்குறை எடுத்துச் சொல்வர் !
ஏனிதை உரைப்பே னென்றால்
இயற்கையின்
படைப்பின் மேலாம்
மானிடன் உருவைப் பெற்றும்
மனதினால் நரியாய் வாழும்
வஞ்சகர் கூட்டம் அங்கும்
வம்புகள் செய்தற்
கூடும் !
கொஞ்சிடும் மொழிகள் கூறிக்
கோறலைச் செய்யக் கூடும் !
ஊரெதில் உறைந்தாலும் நீர்
ஊறினை எண்ணல் வேண்டா !
கூறிடல் வேண்டும் வாய்மை
கொள்கையும்
வேண்டும் வாழ்வில்
பொங்கிடும் ஆவின் பாலாய்ப்
புதுப்புனல் அருவியின் நீராய்,
தங்கமாய் விளங்கி வாழ்க்கைத்
தடந்தனில்
உயர்ந்து செல்க !
அஞ்சுகம் அன்னைச் செல்வம்
ஆரூர்தம் கருணை நிதிபோல்
பைந்தமிழ்ச் செல்லப் பிள்ளை
பாவேந்தர் நாவலர் மதிபோல்
காஞ்சியின் நிழலில் தோன்றிக்
காசினி வியக்க வாழ்ந்து
பூந்தமிழ்ப் பயிரைக் காக்கும்
புரவலர் அண்ணா போல
சந்தமாய் மணந்து வாழ்வில்
சீருடன் வாழ்க ! வாழ்க !
திங்களைப் புரைய காய்ந்து
தேந்தமிழ் நிகர்ப்ப வாழ்க !
அன்னத்தின் தூவி போல ,
அனிச்சப்பூ இதழைப் போல ,
வண்ணங்கள் காட்டும் நீல
வான்பனி நீரைப் போல ,
நெருஞ்சியின் மலரைப் போல ,
நீள்கடல் நுரையைப் போல ,
அருந்தமிழ் நெஞ்சம் கொண்ட
அன்பர்காள் !
நன்றி !
வணக்கம்
!
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
-------------------------------------------------------------------------------------------------------------------------