கொத்து
(01) மலர் (027)
==============================================================
ஒரு திரைப் படத்தில்
இடம்பெற்ற காட்சியை அடிப்படையாக
வைத்துப் புனையப் பெற்ற கவிதை !
(ஆண்டு 1968)
==============================================================
கன்னல் கனியிதழே ! கட்டழகே ! காவியமே !
மின்னல் கொடியழகே ! மாமயிலே ! மேகலையே !
பின்னல் கருமுகிலின் பெட்டகமே ! பேரழகே !
சன்னல் கதவருகே சாய்ந்திருக்கும் சண்பகமே !
காதல் கணைவீசிக் கதைபேசும் காரிகையே !
கூதல் பருவத்துக் குளிருடலை வாட்டுதடி !
மோதல் விலக்கிவிடு ! முல்லைநகை காட்டிவிடு !
நோதல் அழகாமோ ? நூலிடையே ! தாளையெடு !
வெள்ளைப்
பல்வரிசை ! விரிந்தசுளைக் கொவ்வையிதழ் !
கள்ளைச்
சுமந்திருக்கும் காந்தட்பூ வெண்டைவிரல் !
பிள்ளை
மழலைமொழி பேசுமிரு
கயல்விழிகள் !
கொள்ளை
எழில்பெருகும் கோபுரமே
தாளையெடு !
பட்டுப் புடவைதனில் பத்துநிறம் எட்டுவகை !
கட்டுக் கணுக்கரும்புக் கைகளுக்கு நான்குவளை
!
மொட்டுக் கதலியுறு முல்லைவடம் மூன்றுவகை
!
கொட்டிப் பூமகளே ! குவித்திடுவேன் ! தாளையெடு !
அள்ளி அலங்கரிப்பேன் ! ஆரணங்கே ! ஆயிழையே !
துள்ளித் துடித்துவிழும் தூயவிழி மான்மறியே !
வெள்ளிக் கதிர்நிலவே ! விண்ணுலவும் தாரகையே !
வள்ளிக் கிழங்கேயென் வைரமணி நீயிலையோ ?
கரும்புச் சாறெடுத்துக் கற்கண்டு, தேன்கலந்து !
அரும்பும் இதழாக ஆக்கியஎன் பொற்சிலையே !
விரும்பும் பொருள்யாவும் விடிந்தவுடன் தந்திடுவேன் !
இரும்புத் தாள்திறவாய் ! என்னுயிரே ! தாளையெடு !
-------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
[veda70.vv@gmail.com]
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம் முகநூல்.
--------------------------------------------------------------------------------------------------------------------------