name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், அக்டோபர் 09, 2019

பல்வகை (07) புதிய வழக்கம் பூக்கட்டும் !

முகநூல் இடுகைகளுக்கு “விழைவு” (LIKE) தரும் நண்பர்களே ! 


ஒவ்வொரு மனிதனுக்கும் எதிரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் .சில நேர்வுகளில் இந்த  “எதிரிகள்மனித வடிவத்திலும், வேறு சில நேர்வுகளில் சினம்”, “மடிமை”, “அழுக்காறுபோன்ற வடிவங்களிலும் உலா வருகிறார்கள் !


மனித வடிவு அல்லாத பிற வடிவங்களில் உலா வரும்சினம்”, “மடிமை”, “அழுக்காறு”, “செருக்கு”, “பேராசை”, போன்ற  எதிரிகளுள் ஒரு சிலரை  மனிதன் வெற்றி கொள்ள முடிகிறது. எல்லா எதிரிகளையும் வென்ற மனிதனிடம்மனிதம்குடிகொள்கிறது !

முகநூலில் உலா வரும் மனிதர்களுக்குவிழைவு” (LIKE) என்னும் வடிவத்தில் எதிரி உருவாகிறான். இந்தவிழைவுவிளைவிக்கும் தீங்கு சொல்லி மாளாது. இவன் முகநூலில் எழுதும் பலருக்குக் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விடுகிறான். சிலருக்கு ஊக்கத்தை உருக்குலைக்கும் ஒப்பற்றத் திருப்பணியைச் செய்துவருகிறான். வேறு சிலரிடம் மட்டும் அவனது முயற்சிகள் தோற்றுச் செயலிழந்து போய்விடுகின்றன. !

மூன்று நாள் சிந்தித்து, மூன்று மணி நேரம் உழைத்து, சிற்சில இடங்களில்  திருத்தியும், நீக்கியும், சேர்த்தும், இறுதி வடிவம் கொடுத்து ஒரு நண்பர் தன் கட்டுரையை முகநூலில் வெளியிடுகிறார்.  இருபத்து நான்குமணி நேரம் கழித்து, முகநூற் பக்கத்தைத் திறந்து பார்த்தால் முப்பது பேர் கட்டுரையைப் படித்து விட்டு எதுவும் சொல்லாமல் (SEEN BY 30) கடந்து போயிருக்கிறார்கள் என்பது புரிகிறது !

கட்டுரையை முழுவதுமாகப் படிக்கும் இவர்கள் எண்ணிக்கையை  SEEN 30  என்னும் குறிப்பு வெளிச்சம் போட்டுக் காட்டிவிடுகிறது. சொடுக்கிப் பார்க்கையில் இவர்கள் பெயரும் தெரிகிறது. படிப்பார்கள்; ஆனால் விழைவு”(LIKE),  கருத்துரை” (COMMENTS),  பகிர்வு” (SHARE) என எந்த வலையிலும் சிக்க மாட்டார்கள். மக்கள் குமுகாயத்தில் இவர்கள் எல்லாம் மேட்டுக் குடிமக்கள். தங்கள் கருத்தைத் தெரிவித்தால் தங்கள் பெருமை குலைந்து போகும் என்ற மீமிசை உளப் பாங்கு (SUPERIORITY COMPLEX) கொண்டவர்கள். இவர்களை யாராலும் மாற்ற முடியாது; விட்டுவிடுவோம் !

பதினைந்து பேர்விழைவுகொடுக்கிறார்கள். இவர்கள் நம்மவர்கள் தான். நம்மைப் போல இடைநிலை வகுப்பினர் (MIDDLE CLASS). மூன்று நாள் சிந்தித்து, மூன்று மணி நேரம் உழைத்து, எழுதிய கட்டுரையைப் படித்துவிட்டு, அரை நொடியில் ஒருசொடுக்கு மூலம் ஒருவிழைவு” (LIKE) கொடுத்து விட்டு மன நிறைவு கொள்பவர்கள் !

பதினைந்து  பேர்விழைவு” (LIKE) கொடுத்திருப்பதைப் பார்த்து விட்டுக் கட்டுரை எழுதியவரின் மனதின் ஓரத்தில் சிறு வலி உருவாகிறது. மூன்றுநாள் சிந்தித்து, மூன்று மணி நேரம் உழைத்து எழுதிய கட்டுரைக்குப் பரிசு ஒரேயொருசொடுக்குத் தானா ?  கட்டுரையைப் பற்றிக் கருத்துரை சொல்லும் அளவுக்கு, அதில்செய்திகள்தரவில்லையா, அல்லது கட்டுரையின் தரத்தில் மேன்மைஇல்லையா அல்லது தரத்தில்கீழ்மைகுடிபுகுந்து விட்டதா என்று விடை தெரியாமல் அவர் மனம் ஏக்கம் கொள்கிறது !

விழைவு” (LIKE) என்னும்நுழைவிசை” (BUTTON) இல்லாமல் இருந்திருந்தால் இவர்கள் எல்லாம் கட்டாயம்  கருத்துரை எழுதி இருப்பார்கள். இந்தநுழைவிசை” (BUTTON) தான் இவர்களை மடிமைக்கு (LAZINESS) ஆளாக்கி விட்டது. மனிதன் சுறு சுறுப்பாக இயங்குவதும் மடிமைப் படுவதும் சூழ்நிலையால் தானே தீர்மானிக்கப்படுகிறது !

விழைவு” (LIKE) என்னும் நுழைவிசையை (BUTTON) (நுழை + விசை = நுழைவிசை) நீக்கிவிடச் சொல்லி முகநூல் நிறுவனத்திற்கு நாம் கோரிக்கை வைக்க முடியாது. நாம் செய்யக் கூடியதுவிழைவு” (LIKE) மட்டும் தரக் கூடியவர்களுக்கு, வேண்டுகோள் விடுப்பது தான் !

விழைவு” (LIKE) தரும் நண்பர்களே ! இவ்வழக்கத்தைக் கைவிடுங்கள் ! “கருத்துரை” (COMMENTS) எழுதுங்கள் ! தேனீ போலச் சுற்றிச் சுழன்று, செய்திகளைத் திரட்டித் தருவோர்க்கு நீங்கள் செலுத்த வேண்டிய நன்றிக் கடன்கருத்துரைதான். எழினி (MOBILE) மூலம் இயங்குவோர் ஒற்றைச் சொல்லாக இராமல் ஒரு வரியிலாவது கருத்துரைஎழுதுங்கள் ! கணினி மூலம் இயங்குவோர் நான்கு வரிக்குக் குறையாமல்கருத்துரைஎழுதுங்கள் !

எழுத எழுதத் தான் உங்களிடம் ஒளிந்து கிடக்கும் எழுத்துத் திறமை வெளிப்படும். எழுத்தில் மெருகு ஏறும். ”என்னால் முடியுமாஎன்ற ஐயப்பாட்டின் காரணமாகவே பல நண்பர்கள்விழைவுமட்டும் தந்து மன நிறைவு கொள்கிறார்கள். நீங்களும் ஒரு எழுத்தாளராக ஒளிர வேண்டாவா ? உங்களுக்குள் இருக்கும் திறமையை ஏன் திரை போட்டு மூடி வைக்கிறீர்கள் ?

நண்பர்களே !  விழைவு” (LIKE)  தரும் வழக்கம் உங்களிடமிருந்து உடனடியாக விடை பெறட்டும் ! கருத்துரை (COMMENTS) எழுதும் வழக்கம் உங்கள் கரங்களில் இனி துளிர்க்கட்டும் ! நீங்கள் எழுதும் கருத்துரை உங்களையும் எழுத்தாளர் ஆக்கட்டும் ! உங்களால் பாராட்டப் படுவோர் (இடுகையாளர்கள்) இன்னும் ஊக்கமுடன் உழைத்து அரிய பல கருத்துகளை எழுத்துகளாக வடிக்கப் பயன்படட்டும் !

புதிய வழக்கம் பூக்கட்டும் இன்று முதல் ! மறதியாக, வழக்கம் போல் இதற்கும் ஒரு விழைவைத் (LIKE) தந்து விடாதீர்கள் !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.;2050;கடகம்,18]
{3-08-2019}

------------------------------------------------------------------------------------------------------------
    
  “தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

------------------------------------------------------------------------------------------------------------