கல்விக் கொடையை எனக்களித்த வள்ளல் பெருமக்கள் !
கடிநெல்வயல் என்பது நான் பிறந்த சிற்றூர். தமிழ்நாட்டின் வரைபடத்தில் கிழக்குக்
கடற்கரைப் பகுதியில், இலங்கைக்கு வடக்கே சற்றே மேல்புறமாக அழகிய மூக்குப் போல நீட்டிக் கொண்டிருக்கும்
முனையிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் உள்ளடங்கி இருக்கும் அமைதியான ஊர். சற்றேறக் குறைய அறுநூறு குடும்பங்கள்
இங்கு வாழ்ந்து வந்தன !
வேளாண்மையே இவர்களது ஒரே வாழ்வாதாரம். வளமான பூமி; வானவாரிப் பகுதி தான். மழையை நம்பியே வயல்கள் இருந்தன.
ஆனாலும், நெல் விளைச்சலுக்குக் குறைவிருக்காது.
ஒருசிலர் ஆசிரியப் பணிக்குத் தம்மை ஒப்புவித்துப் பணியாற்றி வந்தனர்.
இந்தக் காட்சிகள் 1955 வாக்கில் திரைச் சீலையில்
எழுதப்பட்ட ஓவியம். இன்றைய நிலையே வேறு !
இங்குள்ள தொடக்கப் பள்ளி பல ஆசிரியர்களைக் கண்டுள்ளது. தியாகராய தேவர், சிதம்பர தேவர்,, வைரக்கண்ணுத் தேவர், அழகியநாதன் பிள்ளை, சாந்தப் பிள்ளை, மங்களாவதி அம்மையார், மற்றும் பலர். இப்பெருந்தகையாளர்கள் பணிபுரிந்த இப்பள்ளியில் தனது இருப்பையும் பதிவு செய்ய
வெளியூரிலிருந்து வந்து சேர்ந்தார் இராசகோபாலன் ! (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
இவர் பார்ப்பனர்கள் போலவே உடையுடுத்துவார் – ஆனால் பார்ப்பனர் அன்று
! தார்ப்பாய்ச்சு வைத்து வேட்டி கட்டுவார்; தலையில்
விசிறி மடிப்புச் சரிகைத் துண்டினால் முண்டாசு; கையில் எப்போதும்
இணைபிரியாத பிரம்பு ! கடுகடுத்த முகம் ! புன்னகை இவரிடம் தோற்றுப் போய் எங்கோ ஒளிந்து கொண்டது !
இராசகோபாலனிடம் பிரம்படி வாங்காது வீட்டிற்குச் சென்ற பிஞ்சுகள், நான் உள்பட, மிக அரிது ! அவர் உள்ளத்தில் இரக்கம் இருந்ததில்லை;
உதடுகளில் இனிமை தவழ்ந்ததில்லை ! தோற்றத்தில் அவர்
ஒரு நரசிம்மராவ் ! செயலில் அவர் இட்லரின் மறுபிறவி !
எனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பு, கடிநெல்வயலிலிருந்து 5 கி.மீ தொலைவிலுள்ள ஆயக்காரன்புலம் நடேசனார் நினைவு அரசுப்
பள்ளியில் தொடர்ந்தது !
எனக்கு ஏழாம் வகுப்பில் சமூகப் பாடம் எடுத்தவர் மாரியப்ப இராயர்
என்னும் ஆசிரியர். இவரிடம் பல சிறப்புக் குணங்கள் இருந்தன. ”முதலாம் பானிபட்
போர் கி.பி.1526 ஆம் ஆண்டு முகலாய மன்னர்
பாபருக்கும் இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்றது. செங்குட்டுவன்
! எங்கே நீ திருப்பிச் சொல் பார்க்கலாம்” என்பார்
!
செங்குட்டுவன் எழுந்து “முதலாம் பானிபட் போர், கி.பி. 1526 ஆம் ஆண்டு, முகலாய மன்னர்
பாபருக்கும் இப்ராகிம் லோடிக்கும் இடையே நடைபெற்றது” என்று சொல்வான்.
மாரியப்ப இராயர் “சரி நீ உட்கார். செந்தமிழ்ச் செல்வன் ! எங்கே. நீ
சொல் பார்க்கலாம்” என்பார். இவ்வாறே வகுப்பில்
இருக்கும் ஒவ்வொரு மாணவனையும் “முதலாம் பானிபட் போர்.........”
என்பதைச் திருப்பிச் சொல்லச் சொல்வார். நாற்பது மாணவர்களும் சொன்ன பிறகு
தான் பாடத்தில் அடுத்த பகுதியை நடத்துவார். எந்த மாணவனையும் அவர் கடிந்து கொண்டதே
இல்லை ! பிரம்பு அவர் கரங்களில் தவழ்ந்ததே இல்லை !
மாரியப்ப இராயர் இட்ட அடித்தளத்தில் வளர்ந்த மாணவர்கள் எந்த
வாய்ப்பிலும் சோடை போனதே இல்லை. 64 ஆண்டுகளுக்கு முன்பு மாரியப்ப இராயர் வகுப்பில் பாடம் எடுத்த காட்சி இன்றும்
என் மனக்கண் முன் நிழலாடுகிறது !
பள்ளிக் கல்வி முழுவதும் எனக்குத் தமிழ் வழியிலேயே அமைந்தது. கல்லூரிக்கல்வியின் தொடக்கமான புகுமுக
வகுப்பில் (P.U.C), தஞ்சாவூரில் மன்னர் சரபோசி அரசு கலைக் கல்லூரியில்
சேர்ந்தேன். இங்கு ஆங்கில வழிப் பயிற்றுவிப்பு !
பொருளாதாரப் பேராசிரியர் சேசாசலம் அவர்கள் வகுப்பு எடுப்பார். 45 நிமிடப் பாட வேளையில்
25 நிமிடங்கள் பாடக் குறிப்புகளை அவர் சொல்லச் சொல்ல, மாணவர்கள் குறிப்பேட்டில் எழுதிக் கொள்ள வேண்டும். வைகைச்
சுறுதியின் (VAIGAI EXPRESS TRAIN) கதிப்பில் (SPEED)
அவர் சொல்வதை உள்வாங்கி எழுதிக் கொள்ள நாங்கள் திணறுவோம். PLEASE SIR, KINDLY REPEAT
WHAT YOU SAID LAST ! என்று யாராவது கேட்டு விட்டால் போதும்
! பரிபாடலிலிருந்து ஒரு வரியைச் சொல்வார் ; அல்லது
வேறொரு சங்க இலக்கியத்திலிருந்து ஏதாவது பாடலைச் சொல்லி ”WRITE IT DOWN !” என்று சொல்லி விட்டு தனது ஆங்கிலக் குறிப்புகளை வாசிக்கத் தொடங்கி விடுவார்
!
விரைவாக எழுதுவதற்கு அவர் அளித்த பயிற்சி இன்றும் எனக்கு உதவுகிறது
என்றால் அது மிகையாகாது. ஆங்கிலத்தில் பாடம் நடத்தும் பொருளாதாரப் பேராசிரியர் சங்க இலக்கியப் பாடல்களைத்
தங்கு தடையின்றி எடுத்து உரைத்த திறன், இன்று நினைத்தாலும் என்னை
வியப்பில் ஆழ்த்துகிறது !
இதற்கு நேர் மாறாகத் தமிழ்ப் பேராசிரியர் வேங்கடாசலம் அவர்கள்
பாடம் நடத்திய பாங்கு முற்றிலும் புதுமையானது . “அஞ்சன வண்ணனென் ஆருயிர் நாயகன் ஆளாமே, செஞ்சரம் என்பன தீயுமிழ்கின்றன செல்லாவோ?” என்று கம்பராமாயணப்
பாடலைச் சொல்லி விளக்கிக்
கொண்டிருப்பார். யாராவது ஒரு மாணவன் எழுந்து, ”அய்யா !, செஞ்சரம் என்பதன் பொருள் அம்பு என்பது புரிகிறது,
அது ஏன் செஞ்சரம் என்று கம்பர் சொல்கிறார் ?” என்று
கேட்பதாக வைத்துக் கொள்வோம் !
தமிழ்ப் பேராசிரியர் “ DEAR STUDENT ! HAVE YOU EVER READ “AS YOU LIKE IT”, THE FAMOUS PLAY
WRITTEN BY SHAKESPEARE ! என்று ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கி விடுவார்.
தமிழிலும் ஆங்கிலத்திலும் மேதையான
இவர், தமிழ்ப் பாட வேளையில் ஆங்கிலத்தில் உரையாடியதை இன்று நினைத்தாலும்
வியப்பாக இருக்கிறது !
ஆங்கிலத்தில் வகுப்பு நடத்தும் பொருளாதாரப் பேராசிரியர் தமிழ்
இலக்கியங்களிலிருந்து பாடல் வரிகளைச் சொல்வதும், தமிழ்ப் பேராசிரியர், ஆங்கிலத்தில் உரையாடுவதும் இனிய முரண்பாடு அல்லவா? பறவைகள்
பலவிதம் ! ஒவ்வொன்றும் ஒரு விதம் !
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.பி:2050,கடகம்,11]
{27-07-2019}
---------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப்பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------