பூங்குடியின் சீரழிவுக்கு யார் காரணம் ?
கிருட்டிணகிரி
மாவட்டம் ஓசூர் வட்டத்தில் உள்ளது அஞ்சட்டி
வனப்பகுதி. மலைக் குன்றுகளும் அடர்ந்த காடுகளும் சூழ்ந்த
அமைதியான சூழல். அஞ்சட்டியிலிருந்து மேற்கு நோக்கி நடந்தால் இரண்டு
மணி நேரத்தில் ஒரு சிற்றூர் தென்படும். அது தான் பூங்குடி
!
பூங்குடியின்
மக்கள் தொகை ஏறத்தாழ 300 இருக்கும். சாலை வசதி, மின் வசதி எதுவும் எட்டிப் பார்த்திராத சிற்றூர்.
மாவட்ட ஆட்சியராகத் தங்கசாமி
இ.ஆ.ப. இருந்தபோது, இவ்வூருக்குச் சாலை வசதியும், மின் வசதியும் ஏற்படுத்தித்
தந்தார். வாக்காளர் பட்டியலிலும் பெயர் சேர்க்க ஆவன செய்தார்.
அஞ்சட்டியிலிருந்து சிற்றுந்து (MINI BUS) ஒன்று
பூங்குடிக்கு இருமுறை வந்து செல்லவும் ஏற்பாடு செய்திருந்தார் !
மேற்குத்
தொடர்ச்சி மலையின் நீட்சியாக இப்பகுதி இருந்ததால், சிறுத்தை,
ஓநாய், கழுதைப்புலி, காட்டு
நரி, செந்நாய், முதலை போன்ற கொன்றுண்ணிகளும்,
யானைக் கூட்டங்களும், பாம்புகளும் பூங்குடி மக்களுக்கு
எப்போதும் அச்சுறுத்தலாக இருந்து வந்தன !
பூங்குடியின்
ஊர்த் தலைவர் திம்மப்பா. 70 அகவை நிறைந்த இவரது சொல்லுக்கு
ஊரே கட்டுப்படும். ஊருக்குள் சிறுத்தையோ, ஓநாயோ, கழுதைப் புலியோ வந்தால், திம்மப்பா தலைமையில் ஊரே ஒன்று கூடி அவற்றை விரட்டி அடித்து, மக்களையும் கால்நடைகளையும் காத்து நிற்கும் !
மூன்றாண்டுகளுக்கு
முன்பு நடந்த ஒரு பொதுத் தேர்தலில் பூங்குடி மக்களும் தங்கள் வாக்குகளை முதன் முதலாகப்
பதிவு செய்யும் வாய்ப்புக் கிடைத்தது. இவர்களில் 220 பேருக்கு வாக்குரிமை இருந்தது
!
வாக்குக்
கேட்டு
10 பேர் கொண்ட ஒரு குழு பூங்குடிக்கு வந்தது. உங்கள்
ஊருக்கு தார்ச் சாலை அமைத்துத் தருவோம் சென்று
சொல்லி “வலக்கை” (RIGHT HAND) சின்னத்தில்
வாக்களிக்குமாறு கேட்டு, ஆளுக்கொரு குண்டூசியும் கொடுத்தனர்.
பல் குத்த உதவும் என்று அவர்களும் வாங்கி வைத்துக் கொண்டனர்
!
”தார்ச் சாலை” வாக்குறுதியால் மகிழ்ச்சி அடைந்த அவ்வூர் மக்களில் ஏறத்தாழ 25
பேர் “வலக்கை”க்கு வாக்களிக்க
முடிவு செய்தனர். ஊர்த் தலைவரிடம் கலந்து பேச வேண்டும் என்று
ஏனோ அவர்களுக்குத் தோன்றவில்லை !
மறு நாள்
ஐந்து பேர் பூங்குடிக்கு வந்து, “அல்லிப் பூ”வுக்கு வாக்களியுங்கள் என்று பரப்புரை செய்தனர். ”பிரதான்
மந்திரி கர்மா யோஜனா” என்று ஏதேதோ சொல்லி வீட்டுக்கொரு கழிப்பறை
கட்டித் தரப்படும் என்று கூறி ஆளுக்கொரு கொண்டையூசியும் கொடுத்துச் சென்றனர்.
வீட்டுக்கொரு கழிப்பறை என்னும் பரப்புரை சிலரைச் சிந்திக்க வைத்தது
!
அன்று
மாலையே சிலர் கதிர் கொய்யும் அரிவாளுடன் வந்து, அரிவாள் வைத்திருந்தால்
எதற்கும் அச்சப்படத் தேவையில்லை என்று சொல்லி “கதிர் கொய்யும்
அரிவாளுக்கு” வாக்குக் கோரினர். அச்சிட்ட சில அறிக்கைகளையும் தந்து
சென்றனர். வந்தவர்களின் எளிமையைப் பார்த்து வியந்த சிலர்,
அவர்களுக்கே வாக்களிக்கலாம் என்று எண்ணலாயினர் !
மூன்றாம்
நாள் காலையில் வண்ணக் கொடியுடன் வந்த 45, 50 பேர்,
பூங்குடி வாக்காளர்களிடம், ஆளுக்கொரு சீப்பினத்
தந்து “ஒளிரும் சூரியனுக்கு” வாக்களிக்குமாறுக்
கேட்டுக் கொண்டனர். அத்துடன் நாள்தோறும் 12 முறை சிற்றுந்தினை
வந்து போகச் செய்வோம் என்றும் கூறினர். இதைக் கேட்டு கணிசமான மக்கள் சூரியன்
பக்கம் ஈர்ப்புக் கொண்டனர் !
அன்று
நண்பகலில், திறந்த ஊர்தியில் கும்பிட்டுக் கொண்டு ஒருவர்
நிற்க, 25, 30 பேர் உதய தெய்வம் வாழ்க என்று கூவிக் கொண்டு நடந்து
வந்தனர். உங்கள் ஊரில் கல் எடுத்து லலிதாம்பிகைக்குச் சிலை வைப்போம்,
அதை நீங்கள் வழிபடலாம் என்று வாக்குறுதி தந்து “இரண்டு வெற்றிலைக்கு” வாக்களிக்குமாறு கேட்டு, ஆளுக்கொரு குச்சி மிட்டாயும்
கொடுத்துச் சென்றனர். லலிதாம்பிகை சிலையைக் காண ஆவல் கொண்ட சிலர்
அவர்களுக்கே வாக்களிக்கலாம் எனத் தங்களுக்குள் பேசிக் கொண்டனர் !
நான்காம்
நாள் காலை ஐந்தாறு பேர் கைகளில் ”தக்காளிப் பழம்” ஏந்தி வந்தனர்.
வாக்காளர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு, நீங்கள்
எல்லாம் எமது சொந்தங்கள் என்று உரிமை கொண்டாடி, “தக்காளிப் பழத்திற்கு”
வாக்களிக்குமாறு கேட்டு, ஐந்தாறு பல்லி முட்டை
மிட்டாய்களையும் தந்தனர். சில வாக்காளர்களிடம் “சொந்தம்” என்ற
சொல் முனைப்பாகவே வேலை செய்தது !
இன்னொருநாள்
சீறும் சிங்கம் படம் தாங்கிய கொடியுடன் இரண்டொரு இளைஞர்கள் வந்து, பள்ளி வாய்க்கால் படுகொலையைப் பற்றி எடுத்துச் சொல்லி “தேயிலை விவசாயி” சின்னத்திற்கு வாக்குக் கேட்டனர். கைகளை ஆட்டி,
கண்களை மூடி, உடலைக் குலுக்கி அவர்கள் பேசிய வீர
உரை சிலரிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது !
சனிக்கிழமை
நண்பகலில் கைகளில் தீப்பந்தம் ஏந்தி சில இளைஞர்கள் வந்தனர். உங்களைக் காக்க வந்திருக்கும் கடவுள் கமலப்பனுக்கு ஆதரவு தாருங்கள்,
“தீப்பந்தம்” சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று
வேண்டுகோள் விடுத்தனர்., கையகலம் இருந்த கமலப்பன் படத்தை ஆளுக்கொன்று
கொடுத்துச் சென்றனர். கமலப்பன் படத்தைக் கண்ட சிலருக்கு “தீப்பந்தம்”
மீது சிறு பாசம் கூட ஏற்பட்டது !
ஞாயிற்றுக்
கிழமை காலை ஐந்து மணிக்கு பூங்குடிக்கு வந்த சிலர் ஆளுக்கொரு அடையாளச் சீட்டைத் தந்து
”பெருங்காயப் பெட்டி” சின்னத்திற்கு வாக்களித்து
விட்டு வந்து, இந்தச் சீட்டைக் காண்பித்து, ஆளுக்கொரு பொரிகடலைப் பொட்டலம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றனர்
!
பூங்குடி
வாக்காளர்கள் மனதில், தார்ச் சாலையும், கழிப்பறையும், சிற்றுந்தும், லலிதாம்பிகை
சிலையும் நிழலாடின. குண்டூசி, கொண்டையூசி,
குச்சி மிட்டாய், சீப்பு, பல்லி மிட்டாய், கமலப்பன் படம் ஆகியவையும் ஊசலாட்டத்தை
ஏற்படுத்தின !
ஊர்த்
தலைவர் திம்மப்பாவை மறந்தே போயினர். சிறு குழுக்களாக
ஆங்காங்கே கூடி நின்று
பேசிக் கொண்டனர். அவர்களது உரையாடல் போகப் போக வாக்கு வாதமாக உருவெடுத்தது.
வாக்குக் கேட்டு வந்த ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவாகவும் குழுக்கள் தோன்றின.
ஒரு குழு இன்னொரு குழுவை பகைமையுடன் பார்த்தது. குழுக்களின் வாதங்களில் தீப்பொறி பறந்தது. பசியை மறந்தனர்.
தாகத்தை மறந்தனர். உறக்கத்தை மறந்தனர்
!
இதற்கிடையில்
ஒரு நாள் காலையில் சிறுத்தை ஒன்று ஊருக்குள் புகுந்து வெங்கடப்பாவின் ஆடு ஒன்றை அடித்து இழுத்துச் சென்றுவிட்டது. அவர் “வலக்கை” ஆதரவாளர்.
அவரது குழுவினர் தவிர பிற குழுவினர் யாரும் அவரது உதவிக்கு வரவில்லை
!
ஒரு வெள்ளிக்கிழமை
காலை இலட்சுமண ரெட்டியின் மகனைப் பாம்பு கடித்துவிட்டது. அவர் “ஒளிரும்
சூரியன்” குழுவைச் சேர்ந்தவர் என்று யாரோ ஒருவன் உளறி வைத்தான்.
ஊர் மக்களில் முக்கால்வாசிப் பேர் ஒதுங்கிக் கொண்டனர். மகனைக் காப்பாற்றத் திண்டாடிப் போனார்
இலட்சுமண ரெட்டி !
ஊர்த்தலைவர்
திம்மப்பாவினால் ஒன்றும் செய்ய முடியவில்லை. கந்தசாமி கவுடா
பட்டினியாகக் கிடந்தால் பழனியப்பப் படையாச்சி மகிழ்ச்சி அடைகிறார். பழனியப்ப
படையாச்சிக்கு வயிற்று வலி என்றால் மாரிச்செட்டி சக்கரைப் பொங்கல் சாப்பிட்டுக் குதூகலிக்கிறார்
!
பூங்குடியில்
இன்று ஒற்றுமை இல்லை ! பக்கத்து வீட்டுப் பிள்ளை குளத்தில்
தவறி விழுந்து விட்டால் பதறித் துடித்த மக்கள் இன்று பால் பாயாசம் வைத்துச் சாப்பிட்டுக்
கொண்டாடுகிறார்கள் !
பச்சைக்
காய்கறி விளைந்த பூமியில் இன்று பகைமை பயிராகிறது ! ஊர்த்தலைவர்
சொல்லுக்குக் கட்டுண்டுக் கிடந்த மக்களை ஒரேயொரு தேர்தல் சிதறடித்துச் சின்னா பின்னமாக்கி
விட்டது ! பூங்குடிக்கு நேர்ந்த இந்த தீய வாய்ப்புக்கு யார் காரணம்
? யார் குற்றவாளி ?
எந்தக்
கட்சியானாலும் சரி ! அரசியல் சார்புடைய நண்பர்கள் ஒவ்வொருவரும்
சிந்தியுங்கள் ! யாரோ ஒருவருக்கு முடி சூட்டுவதற்கு நாம் ஏன் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும்
? யாரோ ஒருவர் பதவிக்கு வருவதற்கு நாம் ஏன் பல்லக்குச் சுமக்க வேண்டும்
?
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,மேழம்,22]
{05-05-2019}
---------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம்” முகநூற்
குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------