ராமன், லட்சுமணன் - தவறு ! இராமன், இலட்சுமணன் - சரி !
“இராமர்” என்று ஏன் எழுத வேண்டும் ? “ராமர்” என்று எழுதினால் போதாதா ? “இலட்சுமணன்”
என்று வரைவது ஏன் ? “லட்சுமணன்” என
வரைந்தால் சாலுமே ? என்று கேட்கின்றனர். ”ராமர், லட்சுமணர்” என்று பலர் எழுதவும்
செய்கின்றனர் !
தமிழறிவு படைத்தவர்களும் இங்ஙனம் வரைவது வியப்பாக இருக்கிறது ! புலவர்
பட்டம் பெற்றவர்களில் சிலரும், இவ்வாறு எழுதுவது மேலும் வியப்பைத்
தருகிறது !
இலக்கணத்தில் ”ர”,
“ல”, எழுத்துகள் மொழிக்கு முதலில் வாரா என்பதைச் சுட்டிக்
காட்டி, அவர்களைக் கேட்டால், இப்போதைக்கு அந்த இலக்கணம் தேவையில்லை
என்று கூசாமல் சொல்வர் !
இலக்கணத்தில்
எழுதி வைத்திருப்பதற்காக,
அதனைப் பின்பற்ற வேண்டும் என்பது சரியன்று. நாம் பேசும்போது எப்படி உச்சரிக்கிறோமோ அதையே இலக்கணத்தில் குறித்து வைத்திருக்கின்றனர் என்பதே சரி ! “அ”. “இ”
எழுத்துகளில் ஒன்றை முதலில் சேர்க்காமல் “ரங்கன்”,
“ராமன்: என்னும் சொற்களை எவ்வகை இடரும் இல்லாமல் எளிதாக உச்சரிக்க
முடிகிறதே, அப்படியிருக்க, இலக்கணத்தில்
ஏன் “ர”, “ல” மொழிக்கு முதலில் வாரா என்று எழுதி
வைத்திருக்க வேண்டும் என்னும் கேள்வி எழும். இதற்கு விடை கண்டுவிட்டால்
“ர”, “ல” வில் தொடங்கும்
சொற்களுக்கு முன் “அ”,
“இ’ எழுத்துகளில்
ஒன்றை ஏன் இடவேண்டும் என்பதற்கான ஏதுவை இனிது அறிந்து கொள்ளலாம் !
குழந்தைகள் பேசத் தொடங்கும் பருவத்திலே “ராஜா”,
“ரசம்” “லட்சுமி” என்பன போன்ற
சொற்களின் முதல் எழுத்துகளை உச்சரிக்க முடிவதில்லை. அவற்றை
முறையே “ஆசா”, “அசம்” “அச்சுமி” என்றே சொல்லும். குழந்தை வாயில் “ர”, “ல” உச்சரிக்க முடியாதிருப்பதைக்
கண்கூடாகக் காண்கிறோம் !
தமிழ்மொழி, மனித இனம்
குழந்தைப் பருவத்திலே இருந்த போது உண்டான மொழி. குழந்தையின்
வாயில் “ர”, “ல” நுழையாதது
போலவே, குழந்தைப் பருவத்தில் இருந்த ஆதி மனிதன் வாயிலும் “ர”,
“ல” நுழைந்திராது. கால வளர்ச்சியில் “ர”, “ல” வைச் சொல்லுக்கு முதலில்
உள்ள எழுத்துகள் தமிழ் மொழியில் சேரத் தொடங்கிட போது , அச்சொற்களில்
முதலில் இருக்கும் “ர”, “ல” எழுத்துகளின் நயமின்மையைச் சிறிது குறைத்து, நயமாக உச்சரிப்பதற்கு
வாய்ப்பாகுமாறு, அச்சொற்களின் முதலில் “அ”, “இ” ஓசைகளில் ஒன்று சேர்ந்தது.
என்றாலும் “அ”, “இ”
க்கு உரிய ஒரு மாத்திரை, சொற்களுக்கு முதலெழுத்தாக இவ்வெழுத்துகள்
வரும்போது இவற்றிற்கு இல்லை; அரைக்கால் மாத்திரையே ! “அ”, “இ” வை உச்சரித்துக் கொண்டு,
அடுத்து வரும் “ர”, “ல”
வை உச்சரித்து வந்தனர்.
இயல்பாக உச்சரிக்கும் போது, முதலில் நிகழ்ந்த
இச்சிற்றோசையைக் குறிப்பதற்கு “ர”, “ல”
வில் தொடங்கும் எழுத்துகளுக்கு முன்னர் “அ”,
“இ” எழுத்துகளை இட்டு எழுதலாயினர். அக்காலத்தில் அது சரியாக இருந்திருக்கும்.
ஆனால் “அ”, “இ” இல்லாமலேயே “ர”, “ல” வில் தொடங்கும் சொற்களை இக்காலத்தில் இன்னலின்றி இசைக்க இயலும்போது “அ” “இ” க்கு என்ன வேலை என்று கேட்கலாமன்றோ ?
தமிழ்மொழி
மிகப் பழமையானது.
மனிதன் பேசத் தொடங்கிய ஆதிநாளில் அவன் பேசிய மொழி என்பதற்குத் தலைசிறந்ததொரு
சான்றாக இவ்விலக்கண மரபு இலங்கி வருகிறது.
எனவே, இவ்விலக்கண மரபை ஏன் அழித்துவிட வேண்டும்
? தமிழின் பழமையைப் போற்றுவதற்கு, இம்மரபும் துணையாகுமே
? மற்ற மொழிகளுக்கு இல்லாத இச்சிறப்பைப் பேணுவதால், என்ன பேரிடர் ஏற்பட்டுவிடும் ?
நான்
சிறு வகுப்புகளில் மாணவனாக இருந்த போது ஒரு நிகழ்ச்சி நடந்தது. நான் இருந்த
வீட்டிற்கு எதிர் வீட்டிலே ஒரு மூன்று வயதுப் பையன் இருந்தான். அவனை நான் கண்டிப்பதுண்டு.
தவறு செய்தால், அவனை என்னிடம் கொண்டுவருவர்.
அதனால், அவனுக்கு என்மீது உள்ள்ளூரக் கசப்பும்
வெறுப்பும் உண்டாயின !
ஒருநாள்
நான் என் வீட்டின் தெருப்புறத்தில் நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது, என்னை
ஏச வேண்டும் என்ற நோக்கத்துடன்,
அச்சிறுவன் அவன் வீட்டு வாயிலில் இருந்து தலையை நீட்டி, “ஆமிங்கம் ! ஊமிங்கம் !” என்ற் கத்தினான். என் கவனம் ஈர்க்கப் பெற்றதும் உள்ளே
ஓடிவிட்டான். என் பெயர்
ராமலிங்கம். இதில் “ராம” ஒரு சொல்; “லிங்கம்” இன்னொரு சொல் !
ராம = ர்
+ ஆ + ம
லிங்கம் = ல்
+ இ + ங்கம்
இச்சொற்களில்
உள்ள “ரா” என்னும் எழுத்தில் உள்ள “ர்”
எழுத்தையும், “லி” என்னும்
எழுத்தில் உள்ள “ல்” எழுத்தையும் அவனால்
உச்சரிக்க முடியவில்லை. இரண்டு (ர்,
ல்) மெய் எழுத்துகளையும் விட்டுவிட்டு,
மற்ற எழுத்துகளை ஒன்றுகூட்டியே அவன் “ஆம இங்கம்
= ஆமிங்கம்” என்று உச்சரித்திருக்கிறான்.
அதற்கு இணை இசையாக “ஊமிங்கம்” என்னும் சொல்லைப் புனைந்து அமைத்துக் கொண்டான்; என்னை
ஏசுவதற்காக !
தமிழ்
மொழியின் மிகுபழந் தொன்மையைத் தெள்ளிதின் அறிவிக்கும் இம்மரபைப் பின்பற்றுவது, தமிழ்
மொழியைப் போற்றும் எவரும் பற்றோடு செயற்பாலதாகும் !
-------------------------------------------------------------------------------------------------------------
(ஆட்சிச் சொற் காவலர் கீ.இராமலிங்கனார் எழுதிய
“தமிழில் எழுதுவோம்”
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற
ஒரு பகுதி)
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,கடகம்,27]
{12-08-2019}
-------------------------------------------------------------------------------------------------------------