சொல்லில் ”ந”, ”ன”, ”ண ” வரும் நேர்வுகள் !
தமிழில்
“Na” என்னும் மூல ஓசைக்கு “ ந, ன, ண “ என்று மூன்று எழுத்துகள்
இருப்பது குழப்பம் விளைவிக்கவில்லையா என்று ஒரு கேள்வி கேட்கப் பெற்றது. “ந” வைத் ”த”ந்நகரம்” என்றும் ”ன” வை “ற”ன்னகரம் என்றும்,
”ண” வை “ட”ண்ணகரம் என்றும் சொல்வர் !
“தந” “றன” “டண” என்று தமிழ் நெடுங்கணக்கில்
(ALPHABET) வருவதைக் காண்கிறோம். இவ்வெழுத்து இணைகள்
ஒவ்வொன்றும் ஒரே இடத்தில் பிறப்பன. எனவே, அவை இன எழுத்துகள் எனப் பெற்றன.
முதலில் வரும்
மேற்கண்ட இணையில் முதலில் வரும் “த”,
“ற”, “ட” என்னும் வல்லெழுத்துகளைச்
சார்ந்து வருவனவே “ந”, ”ன”, ”ண” என்னும் மெல்லுழுத்துகள். வல்லெழுத்தை
முன்வைத்தே “த”ந்நகரம்”, “ற”ன்னகரம்”, “ட”ண்ணகரம் என்கிறோம் !
“எந்த” என்னும் சொல்லை ”என்த” என்று எழுதினால்
என்ன என்று ஒருவர் கேட்டார். “ன்” எழுத்தும்
“த” எழுத்தும் நம் வாயில் வெவ்வேறு இடங்களில் பிறக்கின்றன. “ன்” ஐ இயல்பானபடி
உச்சரித்துவிட்டு, “த” வை எளிதாக உச்சரிக்க
முடியாது. உச்சரிப்பு இயல்பாகவும், எளிதாகவும்,
இனிமையாகவும் இருக்கும் பொருட்டே “த”வுக்கு முன்னே ”ந” எழுத்து வருகிறது.
அப்படியே மற்ற இணைகளுக்கும் !
“என்று”
என்பதை “எந்று” என எழுதுவது
தவறு என்பது இந்த இயல்பான உச்சரிப்பு முறையைப் பொறுத்தேயாகும். ”கண்டு” என்பதைக்
“கன்டு” என்றோ “கந்டு”
என்றோ எழுதுவது, நாம் அச்சொல்லை ஒலிக்கும் இயல்பான
முறைக்கு மாறாக இருக்கிறது. எனவே, அப்படி
எழுதுவது தவறு என்பர் !
ஆங்கிலத்தில் – வடமொழியில் கூட இவ்வேறுபாடு இல்லை. ”கந்தன்”, “கன்னம்”, “கிண்ணம்” என்னும் சொற்களில்
வரும் ”ந்”, ”ன்”, ”ண்” என்னும் எழுத்துகளுக்கு “N” என்னும் ஒரே ஆங்கில எழுத்தைப் பயன்படுத்தி, “KANTHAN”, “KANNAM”,
KINNAM” என்று அம்மொழியில் எழுதுவோம். “அன்னா”,
“அண்ணா”, “அணா” என்னும் மூன்று
தமிழ்ச் சொற்களையும் ஆங்கிலத்தில் எழுதும் போது “ANNA” என்னும் ஒரு வகையில்தான் வரைய முடியும். எனவே, தமிழில் “ந”, “ன”, ண” –க்கள் பயனுள்ளவையாக அமைந்துள்ளன
என்பதை உணர வேண்டும். எழுதுபவருக்கு இடர் விளைக்க அவை புகுத்தப்
பெற்றவை அல்ல !
------------------------------------------------------------------------------------------------------------
(ஆட்சிச் சொற் காவலர்
கீ.இராமலிங்கனார் எழுதிய
“தமிழில் எழுதுவோம்”
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,கடகம்,26]
{11-08-2019}
------------------------------------------------------------------------------------------------------------