சொல்லில் “ர”கரம் “ற”கரம் வரும் நேர்வுகள் !
தலைமைச் செயலக அலுவலர்களுக்கு
ஒருமுறை ஆட்சிமொழிப் பயிற்சி அளிக்கும் வாய்ப்பு வந்தது.. அவர்களிடம் தமிழில் எத்தனை
“Ra” எழுத்து இருக்கிறது என்று வினவினேன். “இரண்டு
“Ra” என்று பல குரல்கள் ஒலித்தன. தனித் தனியாகச்
சிலரைச் சுட்டி “அப்படியா ?” என்றேன். ”ஆம்” என்று
விடை வந்தது.
இடையின
“Ra”, வல்லின “Ra” என்றனர் சிலர். சின்ன “Ra”, பெரிய “Ra” என்றனர் வேறு சிலர். ”வண்டி “Ra” கால்
“Ra” என்றும் கூறுவர்” என்றேன். ஒரு சிரிப்பு அலை வீசியது.
கற்கண்டு ”Ra” , சர்க்கரை
”Ra”, என்றும் ஓர் ஆசிரியர்
கூறுவார் என்றேன். மீண்டும் ஒரு சிரிப்பு அலை சுருள் புரிந்தது.
பிறகு, தமிழில் ஒரு “Ra” தான் இருக்கிறது என்றேன். “மற்றொன்று” எனும் கேள்வி எழுவதற்கு முன்பே, அது “Rta” என்றேன். இதைப் பயிலுநரே
உணர்வதற்காக “மற்ற” என்று கரும்பலகையில்
எழுதி, இதை உச்சரிக்கச் சொன்னேன். “Ma,Rta” என்றனர்.
முதலில் உள்ள எழுத்தைச் சுட்டிக் காட்டி’அதை’
‘ஒலிக்க’ என்றேன். “ம”
என்றனர். இரண்டாவது எழுத்து “Ir” என்றனர். மூன்றாவது எழுத்து “Ra” என்றனர். நீங்கள் ஒலிக்கும் வண்ணமே மூன்று எழுத்தையும் சேர்த்து உச்சரித்தால் ”Marra”
என்றுதானே ஆகும் ? ஆனால் அச்சொல்லை “Ma,Tra”
என்றுதானே சொன்னீர்கள். அப்போது இரண்டாம் எழுத்து
“Irt” அன்றோ ? மூன்றாம் எழுத்து ”Rta”
அன்றோ ? பின்னை ஏன் முறையே “Ir” என்றும் “Ra” என்றும் சொல்கிறீர்கள் என்று கேட்ட போது விழிப்பு
உண்டாயிற்று. கண்களின்
விழிப்பும் அறிவின் விழிப்பும் ஒருங்கே நிகழ்ந்தன !
தமிழில் ஒரு
“Ra” தான் உண்டு. அதையே இடையின “ர”கரம் என்போம்.
மற்றொன்று “Rta”. அதனை வல்லின “ற”கரம் என்போம். ஒன்று “Ra”,
மற்றொன்று “Rta”. நாக்கின் நுனியைப் பற்களின் மேல்
வரிசையின் அடியில் வைத்து உரசிச் சொல்வதே “Rta” (ற) என்று இலக்கண நூல்களில் குறிக்கப் பெற்றிருக்கிறது என்றதும், ஒவ்வொருவரின் நாக்கின் நுனியும் அங்ஙனம் உரசிப் பார்க்க முற்பட்டது !
கற்கண்டு என்னும் சொல்லில்
வரும்
“ற்”, “Irt” ஓசை உடையது என்பதைப் பயிலுநர்
யாவரும் ஒப்புக் கொண்டனர். “Irt”
என்னும் ஓசைக்குப் பின் ”க” வருவதால், “Irt”க என்று
உச்சரிப்பது இயல்பேயல்லாமல் “Irt”க்க என்று உச்சரிப்பது இயல்பாகாது. அங்ஙனம் உச்சரிக்கவும்
முடியாது. எனவே தான் வல்லின “ற”வுக்குப் பின் வல்லெழுத்து வந்தால் மிகுவதில்லை !
”சர்க்கரை”யில் “ர்”க்குப் பின் “க்” வரவேண்டி இருக்கிறது. அங்ஙனம்
வரவில்லை என்றால் “சர்–கரை” என்றாகும். எனவே இடையின
“ர”கரத்திற்குப் பின் வல்லினம் மிகுவது இயல்பாகிறது !
இவ்விளக்கம் தந்த பின், வல்லினத்துக்குப் பின் மிகாது, இடையினத்துக்குப் பின்
மிகவேண்டும் என்னும் விதி எவ்வளவு இயல்பானது என்பதை எல்லோரும் உணர்ந்து கொண்டனர் !
இந்த இயல்பான நிகழ்ச்சியையே
இலக்கணத்தில் பொறித்து வைத்திருக்கின்றனர் என்பதைப் புரிந்து கொண்டனர் !
“இரப்பு”, “இறப்பு” என்னும் சொற்களில் முறையேவரும் இடையின வல்லின
”ர”கர
”ற”கரங்கள் இரண்டையும் “Ra” என்றே உச்சரித்து விடுவதால்,
எழுதும் போது ஒன்றுக்கொன்று மாற்றி எழுதிவிட நேர்கிறது. முதல் சொல் “I Ra ppu”
இரண்டாம் சொல் “I Rta,ppu” என்று
ஒலிக்க வேண்டிய இயல்பான
முறையில் ஒலிக்காமையால்,
இவ்வகையான சொற்களில், வல்லின, இடையினப் பிழைகள் ஏற்பட நேர்கிறது. இது நம் நாக்கின் குறையேயன்றி, மொழியின் குறையோ அல்லது
அதன் இயல்பான போக்குகளை முறைப்படுத்தியுள்ள விதிகள் அடங்கிய இலக்கணம் தரும் இடரோ ஆகாது !
-------------------------------------------------------------------------------------------------------------
(ஆட்சிச் சொற் காவலர்
கீ.இராமலிங்கனார் எழுதிய
“தமிழில் எழுதுவோம்”
என்னும் நூலிலிருந்து எடுக்கப்பெற்ற ஒரு பகுதி)
--------------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்.
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050,கடகம்,25]
{10-08-2019}
-------------------------------------------------------------------------------------------------------------