குருதியில் உயரும் சர்க்கரைச் சத்து !
நமது வயிற்றில் இரைப்பை
(STOMACH) அருகில் அமைந்துள்ள கணையம் (PANCREAS) என்னும் சுரப்பி நலிவடையும் போது சர்க்கரை நோய் தோன்றுகிறது. கணையத்தில் அமைந்துள்ள நுண்ணிய அறைகளிலிருந்து இன்சுலின்
(INSULIN) என்னும் வினையூக்கி
நீர்மம் (LIQUID) சுரக்கிறது. நுண்ணறைகள்
செயலிழக்கத் தொடங்கினால் இன்சுலின் சுரப்பும் குறையத் தொடங்குகிறது !
நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் ஆகும்போது குளூக்கோஸ் (GLUCOSE)
எனப்படும் சர்க்கரைச் சத்து, குடலால் உறிஞ்சப்பட்டு
குருதியில் (BLOOD) கலக்கிறது. உடலின் அனைத்து
உறுப்புகளுக்கும் குருதி ஓட்டத்தால் கொண்டு செல்லப்படும் சர்க்கரைச் சத்து
(GLUCOSE) திசுக்களை (CELLS) அடைந்து உயிர் வளியுடன்
(OXYGEN) சேர்ந்து வினை புரிகையில் உடலுக்கு வெப்பமும் அதன் மூலம் ஆற்றலும்
(ENERGY) கிடைக்கிறது. இந்த ஆற்றல் தான் மனிதன்
ஓடவும், ஆடவும், பேசவும், நடக்கவும், மூச்சினை உள்ளிழுக்கவும், வெளியே விடவும் மற்றும் இன்னபிற செயல்களுக்கும் தேவைப்படுகிறது !
சர்க்கரைச் சத்தானது திசுக்களைச்
சென்றடையப் போதுமான இன்சுலின் தேவை. இதை நினைவிற் கொள்ளுங்கள். சர்க்கரை நோயின் அடிப்படையே இதைத் தான் சார்ந்து இருக்கிறது. கணையம் சுரக்கும் இன்சுலின் போதவில்லை என்றால், அதை ஈடுகட்ட
மருத்துவரின் கருத்துரை பெற்று அன்றாடம் இன்சுலின் மாத்திரை சாப்பிடுவதும் ஊசி மூலம்
இன்சுலின் மருந்தினை உட்செலுத்துவதும் உண்டு
!
கணையத்தில் இன்சுலின் சுரப்புக்
குறையும்போது, குருதியில் (BLOOD) கலக்கும் சர்க்கரைச் சத்தின் ஒரு பகுதி மட்டுமே
திசுக்களுக்குள் நுழைய முடிகிறது. நுழைய முடியாத எஞ்சிய பகுதி குருதியிலேயே தங்கி, குருதிச்
சர்க்கரை (BLOOD SUGAR) அளவை உயர்த்தி விடுகிறது. இதுவே சர்க்கரை நோயின் தொடக்கம்
!
நாம் உண்கின்ற அரிசிஉணவு
வாயிலாக மாவுச்சர்க்கரை (MALTOSE), பழங்கள் வாயிலாகப் பழச்சர்க்கரை
(FRUCTOSE), பால் மற்றும் பாற்பொருள்கள் வாயிலாக பாற்சர்க்கரை (LACTOSE),
வெல்லம், நாட்டுச் சர்க்கரை, வெண்சர்க்கரை, கருப்பஞ்சாறு ஆகியவை மூலம் கரும்புச் சர்க்கரை
(SUCROSE) ஆகியவை குருதியில்
கலக்கின்றன. இந்த நான்கு வகைக் சர்க்கரைகளுக்கும் வழங்கும் பொதுப்பெயர் குளூக்கோஸ்
(GLUCOSE). ஒரு சர்க்கரை நோயாளி எந்த அளவுக்கு இவற்றைத் தவிர்க்கிறாரோ
அந்த அளவுக்கு குருதிச் சர்க்கரை (BLOOD SUGAR) அளவும் கட்டுக்குள்
இருக்கும் !
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு(உப்பு),
கார்ப்பு(காரம்), கசப்பு,
துவர்ப்பு ஆகிய அறுசுவைகளுள் கசப்பு, துவர்ப்புச்
சுவை தரும் காய் கனி, பூக்களை நாம் உணவில் சேர்த்துக் கொள்வதே
இல்லை. இதனால் இச்சுவை சார்ந்த சத்துப் பற்றாக் குறை ஏற்பட்டுக் கணையத்தைப் பாதித்து மெல்ல மெல்ல அதைச் செயலிழக்கச்
செய்து விடுகிறது !
கசப்பு, துவர்ப்புச் சுவையுள்ள உணவுகள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நலம் தரும். வாழைப் பூ, ஆவாரம் பூ, பாகற் காய், கோவைக் காய், சுண்டைக் காய், தூதுவளங் காய், நெல்லிக் காய், நாவற்பழம், மாம்பருப்பு, கொய்யா இலை வெந்தயப் பொடி, ஆகியவற்றுள் ஏதேனும் சிலவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால், தொடக்க நிலை சர்க்கரை நோய் சில மாதங்களில் மறைந்து விடும். முற்றிய நிலையில் உள்ள சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். நிலவேம்பு, சிறுகுறிஞ்சா ஆகிய மூலிகைகளின் இலைகள் நான்கு அல்லது ஐந்தை அன்றாடம் தின்று வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் இருக்கும் !
நீழிழிவு நோயாளி, குருதிச் சர்க்கரையின் அளவை 15 நாள்களுக்கு ஒருமுறை கண்காணித்து,
கட்டுக்குள் வைத்துக் கொள்ளவேண்டும். சர்க்கரை
அளவு தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வந்தால், அது உயர் குருதி அழுத்தம் ஏற்படக் காரணமாக
அமைந்து விடும். அஃதன்றி, சிறுநீரகம் செயலிழப்புக்கும்
வழிவகுத்துவிடும் !
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:
2050,சுறவம்,22.]
{ 05-02-2019}
----------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்
பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------