name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், அக்டோபர் 03, 2019

சிந்தனை செய் மனமே (27) எனக்கு அரசியல் கற்றுத் தந்த கல்விக் கூடங்கள் !


திருத்துறைப்பூண்டி தெற்கு வீதி எனக்கு அரசியல் அறிவை வாரி வழங்கும் பள்ளியாக அப்போது திகழ்ந்தது !



நண்பர்களே ! தமிழ்ப் பணி மன்றத்திற்கெனச் சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு அதன்படி அனைவரும் செயல்பட்டு வருகிறோம். இந்த விதிமுறைகள் அனைத்து உறுப்பினர்களின் பார்வைக்காக அறிவிப்புப் (ANNOUNCEMENT) பகுதியில், நிலைப்புச் செய்யப்பட்டுள்ளது !

அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, மன்றத்தின் விதிமுறைகளை 9-04-2019 முதல்  31-05-2019 வரை நிறுத்தி வைத்து ஆட்சியர் என்ற முறையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தேன்.  நண்பர்கள் தங்கள் அரசியல் கருத்துகளை, எவ்விதக் கட்டுப்பாடுகளுமின்றி, ஆனால் கண்ணியத்தோடு, மன்றத்தில் பதிவிடலாம் என்றும் அதில் தெரிவித்திருந்தேன். தமிழ்ப் பணி மன்றத்திற்குரிய பக்கத்தில் அறிவிப்புப் (ANNOUNCEMENTS) பகுதியில் அதை இப்போதும் கூடக் காணலாம் !

இந்த வகையில் நான் என் கருத்துகளைச் சில  கட்டுரைகள் வாயிலாக வெளியிட்டிருந்தேன். என் கட்டுரைகளில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் தமிழ், தமிழர் நலன், தமிழக நலன் சார்ந்தே வடிவமைக்கப்பட்டிருந்தன. விதிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைக் கண்ணுறாத சில நண்பர்கள், சில வினாக்களை எழுப்பி இருக்கின்றனர். விதிகள் நிறுத்தி வைக்கப்பட்டதை அவர்கள் அறிந்திருந்தால், இந்த நண்பர்களுக்கு எத்தகைய  ஐயமும் வந்திருக்காது என்று எண்ணுகிறேன் !

என்னைப் பற்றி நானே சொல்லிக் கொள்வது சிறப்பாகாது என்பதால், என்னை நான் அதிகமாக வெளிப்படுத்திக் கொள்ள வில்லை. தேவை எழும்போது அதை வெளிப்படுத்துவதால் தவறும் இல்லை எனக் கருதுகிறேன் !

தமிழ் சார்ந்த பின்புலம் இல்லாத குடும்பத்தில் தான் பிறந்தேன். எனினும், பள்ளியில் எனக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களின் பயிற்றுவிப்பு முறையால், தமிழுணர்வு என்னைப் பற்றிக் கொண்டது. 1958 ஆம் ஆண்டு, எனது 14 ஆம் அகவையில் திருமறைக்காடு என்னும் வேதாரணியத்தில் திரு. சி.என்.அண்ணாதுரை அவர்களின் சொற்பொழிவை நேரில் கேட்டதிலிருந்து, தமிழ் வேட்கை என்னுள் கிளர்ந்து எழுந்தது !

பிறந்த ஊரான கடிநெல்வயலை விடுத்து, 1959 ஆம் ஆண்டு திருத்துறைப் பூண்டிக்கு இடம் பெயர்ந்த காலத்திலிருந்து தமிழகம் மற்றும் இந்திய அரசியலை உற்று நோக்கி உள்வாங்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. திருத்துறைப்பூண்டி தெற்கு வீதி எனக்கு அரசியல் அறிவை வாரி வழங்கும் பள்ளியாக அப்போது திகழ்ந்தது !

தந்தை பெரியார், மு.கருணாநிதி, பி.இராமமூர்த்தி, கு.காமராஜர், முகமது இஸ்மாயில், .பொ.சிவஞானம், சி.பா.ஆதித்தனார், சி.பி.சிற்றரசு, என்.வி.நடராஜன், .வெ.கி.சம்பத், எம்.கல்யாணசுந்தரம், புலவர் அறிவுடைநம்பி ,சி..வரதராஜன்,  போன்ற அரசியல் தலைவர்களின் சொற்பொழிவை நேரில் கேட்டு என் அரசியல் அறிவை விரிவுபடுத்திக் கொள்ளும் வாய்ப்பை இங்குதான் பெற்றேன் !

பின்பு அரசுப் பணியின் நிமித்தம் தஞ்சை மாவாட்டம் பாபநாசத்தில் தங்கிய நேரத்தில், மீண்டும் தந்தை பெரியார், நடிகவேள் எம்.ஆர்.இராதா, எஸ்.எஸ்.இராஜேந்திரன், நாவலர் நெடுஞ்செழியன், காமராஜர், பக்தவத்சலம், இந்திரா காந்தி, போன்ற தலைவர்களின் உரையை நேரில் கேட்டு, வியந்து போயிருக்கிறேன் !

இதையடுத்து, புதுக்கோட்டையில் நான் பணியாற்றுகையில் என் தமிழறிவும், அரசியல் அறிவும் ஒருங்கே விரிவடைந்தன. திருவள்ளுவர் ஈராயிரத்தாண்டு விழா 1969 ஆம் ஆண்டு மூன்று நாள் நடைபெற்றது.. புலவர் அன்பு கணபதி, புலவர் தி.சு.மலையப்பன், புலவர்..கந்தசாமி ஆகியோருடன் நானும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தோம் !

மூன்று நாள் நடந்த இவ்விழாவில், அப்போதைய சட்டப் பேரவைத் தலைவர் புலவர் கோவிந்தன், தவத்திரு குன்றக்குடி அடிகளார், இராய.  சொக்கலிங்கனார், பேராசிரியர்கள் சோ. சத்தியசீலன், ..இராஜ கோபாலன், .நமச்சிவாயம், .சீனிவாச ராகவன் போன்றோர் பங்கேற்றனர் !

உறந்தை. செல்வேந்திரன், பி.இராமமூர்த்தி, ஈரோடு சின்னச்சாமி, கோ.பெ.வையகம், எழும்பூர் இளம்பரிதி, நெல்லை.திராவிடமணி. திருச்செங்கோடு செ.கந்தப்பன், ஆர்.வெங்கட்ராமன், எஸ்எஸ்தென்னரசு, எம்.எஸ்.சிவசாமி, குத்தூசி குருசாமி, நெதுசுந்தரவடிவேலு, மதுரை முத்து, கருத்திருமன், எம்.கேசுப்பிரமணியம்  மற்றும் பலரது சொற் பொழிவுகளைக் கேட்கின்ற வாய்ப்பு இங்குதான் எனக்குக் கிடைத்தது !

ஏறத்தாழ 60 ஆண்டுகளாக அரசியல் நிகழ்வுகளை உள்வாங்கி வளர்ந்து வந்திருந்தாலும் எந்தக் கட்சியினுடனும் என்னை இணைத்துக் கொண்டதில்லை. எனது உள்ளமும் உணர்வும் தமிழில் திளைத்தது. அதில் எந்த அரசியல் கட்சிக்கும் இடமில்லை. ”எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவுஎன்னும் வள்ளுவரின் கோட்பாடு தான் எனக்கு வழிகாட்டி !

தமிழ், தமிழர் நலன், தமிழக நலன் என்று வரும்போது, சில கட்சிகளின் கருத்துகளுடன் ஒத்துப் போகிறேன். சில கட்சிகளுடன் முரண்படுகிறேன். இன்று தமிழகத்தில் இயங்கும் எந்தக் கட்சிக்கும் நற்சான்றளிக்க என்னால் இயலாது. எனது நற்சான்றும் அவர்களுக்குத் தேவையில்லை !

தமிழகம் மதுவால் சீரழிகிறது; ஒற்றுமை இன்மையால் சீரழிகிறது; பேராசை பிடித்த அரசியல்வாதிகளால் சீரழிகிறது; மக்கள் நலன் கருதாத மணற் கொள்ளையர்களால் சீரழிகிறது;  அரசியல் கோமாளிகளுக்குத் துணைபோகும் அதிகாரிகளால் சீரழிகிறது; திரையுலகப் பித்துப் பிடித்த இளைஞர்களால் சீரழிகிறது; கடவுள் பெயரால் கலவரம் செய்யும் கயவர்களால் சீரழிகிறது; மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடக்கும் பேதைகளால் சீரழிகிறது; தொலைகாட்சித் தொடர்களில் மூழ்கிக் கிடக்கும் மகளிரால் சீரழிகிறது; இரட்டை நிலை எடுக்கும் அரசியல் கட்சிகளின் கயமைத் தனத்தால் சீரழிகிறது !

இத்தகைய சீரழிவுகளுக்கு இடையே, உங்களைக் காப்பாற்ற வந்திருக்கும் தேவதூதன் என்று பறைசாற்றிக் கொள்ளும் விஜயகாந்த், சரத்குமார், சீமான், கமலகாசன் போன்றோரின் திருவாய்மொழி ஒருசிலரைக் கவர்ந்து இழுக்கலாம். ஆனால் எனது அரசியல் பட்டறிவு அவர்களது உள்நோக்கத்தை உணர்த்துவதால், இளைஞர்களே ஏமாறாதீர்கள் என்று எச்சரிக்கை ஒலியை எழுப்புகிறேன் ! ஏமாறுவது எனது பிறப்புரிமை என்று வாதிட முனைந்தால், அது உங்கள் விருப்பம் என்று விட்டுவிடவே விரும்புகிறேன் !
-
----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,மேழம்,09]
{22-04-2019}
----------------------------------------------------------------------------------------------------------
                ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------