கார்காலப் பின்னணியில் பாடப் பெற்ற நாற்பது பாக்களால் இந்நூல் கார்நாற்பது எனப்பெற்றது !
பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் ஐந்தாவதாக வைத்து எண்ணப்படுவது
கார்நாற்பது. சங்கம் மருவிய காலத் தமிழ் இலக்கியத் தொகுப்பான பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. மதுரையைச் சேர்ந்த கண்ணங் கூத்தனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது !
பண்டைக்காலத் தமிழரின் அகவாழ்க்கையின் அம்சங்களை, தன்னைப்
பிரிந்து வேற்றூர் சென்ற தலைவனின் வருகைக்காகப் பார்த்திருக்கும் தலைவியின்
ஏக்கத்தினூடாகக் கார்காலப் பின்னணியில்
எடுத்துக் கூறுகின்ற நூல் கார் நாற்பது. அகப் பொருள் சார்ந்தது !
கார்காலத்தின்
இயற்கை நிகழ்வுகளையும், அக்காலத்தில்
நிகழும் பண்பாட்டு நிகழ்வுகளையும், தலைவியின் மனநிலையோடு
சேர்த்து இந் நூலில் எடுத்துக் கூறப்படுகின்றது !
அகப்பொருள்
பற்றிய கீழ்க்கணக்கு நூல்களில் சிறியது கார் நாற்பது. கார் காலத்தின் தோற்றம்
ஒவ்வொரு செய்யுளிலும் கூறப் படுகின்றமையினாலும், நாற்பது
செய்யுட்களை உடைமையாலும், இது கார்நாற்பது என்னும் பெயர்
பெற்றுள்ளது !
தலைவன் பொருள் ஈட்டிவர எண்ணி வெளியூர் செல்கையில், 'கார் காலத்தில் மீண்டு வருவேன்' என்று தலைவியிடம் கூறிப் பிரிந்து செல்கிறான். உரியகாலத்தில் அவன் திரும்பி வாராமை குறித்துத் தலைவி பிரிவு ஆற்றாது மனத் துயருற்று தோழியிடம் புலம்புகிறாள்.
தோழி ஆறுதல் மொழி கூறி அவளைத் தேற்றுகிறாள் ! சென்ற தலைமகன் கார்காலம் தொடங்கியதைக் கண்டு தன் நெஞ்சினையும் பாங்கனையும் விளித்துப் பேசுகிறான். இச்செய்திகளை உள்ளடக்கி இந் நூல் இயற்றப் பெற்றுள்ளது. தோழி, தலைமகள், தலைமகன், பாங்கன் ஆகியோரை உறுப்பினராக அமைத்து, ஒரு நாடகம் போல அவர்களை இந் நூலில் பேச வைத்துள்ளார் ஆசிரியர் !

கார்காலத் திருவிழாக்களில் ஒன்றான கார்த்திகை விளக்குத் திருவிழாவின்போது மக்கள் தங்கள் இல்லங்களில் ஏற்றி வைத்துள்ள அகல் விளக்கு அணிகளைப் போல, நடைபாதை எங்கும் வரிசையாக மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. இந்தக் காட்சி, கார்காலம் தொடங்கிவிட்டது என்பதையும், தலைவன் பொருள் தேடிக்கொண்டு மீண்டு வரும் காலம் வந்துவிட்டது என்பதையும் அறிவிக்கும் தூதாக மழை பெய்யத் தொடங்கிவிட்டது என்னும் பொருளில் கீழ்க்கண்ட பாடல் அமைக்கப்பட்டுள்ளது !
---------------------------------------------------------------------------------
நலமிகு
கார்த்திகை நாட்டவ ரிட்ட
தலைநாள்
விளக்கிற் றகையுடைய வாகிப்
புலமெலாம்
பூத்தன தோன்றி சிலமொழி
தூதொடு
வந்த மழை.
----------------------------------------------------------------------------------
கார்காலம் பற்றிய வண்ணிப்பு (வர்ணனை) இப்பாடலில் அழகாக இடம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது !
இதோ இன்னொரு பாடல். கார்காலம் தொடங்கிவிட்டது,
தன் தலைவன் இன்னும் திரும்பி வரவில்லையே என்று கலங்கி நிற்கும்
தலைவியைப் பார்த்து, அவள் தோழி, ஆறுதல்
கூறமுடியாமல் தானும் கலங்குகிறள் !
”வேனிற்காலத்தில் பூக்கக் கூடிய பாதிரிப் பூக்கள், கார்காலம் தொடங்கிவிட்டதால் வாடத் தொடங்கிவிட்டன. காட்டின்கண்
உள்ள இளமணற் பரப்பின்மீது ஆலங்கட்டிகள் விழுந்து உருள்கின்றன. கரிய நிற முகில்களூடே இடிமுழக்கம் கேட்கிறது. தனித்து
இருக்கும் தலைவியை மேலும் வருத்தம் கொள்ளச் செய்யும் முகத்தான், நேற்று முதல் மழையும் பெய்யத் தொடங்கி இருக்கிறதே !.”
(கார்காலம் தொடங்கிவிட்டது. தலைவன் ஏன்
இன்னும் வரவில்லை ? என்று மனதிற்குள் மயங்கும் தோழியின்
கூற்று இந்த வரிகள்.) அப்பாடல் வருமாறு:-
-----------------------------------------------------------------------------
வரி நிறப் பாதிரி வாட, வளி போழ்ந்து
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள,
உரும் இடி வானம் இழிய, எழுமே-நெருநல், ஒருத்தி திறத்து.
-----------------------------------------------------------------------------
கார்காலம் பற்றிய நேர்முக வண்ணனை அளிப்பது போல இயற்றப்பட்டுள்ள “கார் நாற்பது” இலக்கியம் படிக்கப்
படிக்கப் இன்பம் பயப்பதாகும்.
--------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்
[தி.ஆ:2050,ஆடவை,25]
{10-07-2019}
----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்றது !
----------------------------------------------------------------------------------------------------------