name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (03) இன்னா நாற்பது !

மனிதனின் வாழ்வில் துன்பம் தரும் நிகழ்வுகள் எவையெவை என்று விதந்துரைப்பது இன்னா நாற்பது!



நாற்பது என்னும் எண்தொகையால் குறிக்கப்பெறும் நான்கு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ளன. அவற்றுள், கார் நாற்பதும், களவழி நாற்பதும் முறையே அகம், புறம் என்னும் பொருள் பற்றிப் பாடப்பெற்றவை. எஞ்சிய இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறநெறிக் கருத்துகளை எடுத்துரைப்பன !


மனிதனின் வாழ்வில் துன்பம் தரும் நிகழ்வுகள் எவையெவை என்று விதந்துரைப்பது இன்னா நாற்பது.  இந்நூலில் இறைவணக்கப் பாடலைத் தவிர்த்து நாற்பது செய்யுள்கள் உள்ளன. அனைத்தும் இன்னிசை வெண்பாக்களால் ஆனவை !


உலகத்தில் கூடாதவை என்னென்ன என்பது பற்றிக் கூறி நீதி உரைப்பது இந்நூல். ஒவ்வொரு பாடலிலும் நந்நான்கு கருத்துகளைக் கொண்டு, நான்மணிக் கடிகையைப் போன்று இந்நூல் அமைந்த போதிலும், ஒவ்வொன்றையும்இன்னாஎன்று எடுத்துக் கூறுதலால், இதுஇன்னா நாற்பதுஎன்னும் சிறப்பைப் பெற்றுள்ளது !


இந்நூலை இயற்றியவர் கபிலர் என்னும் பெரும்புலவர். கபிலர் என்னும் பெயரில் ஏறத்தாழ ஐவருக்கு மேல் புலவர்கள் சங்க காலத்திலும், இடைக்காலத்திலும் இருந்திருக்கின்றனர். அவர்களுள் இந்நூலாசிரியரும் ஒருவர். இந்நூல் கி.பி. நான்காம் நூற்றாண்டைச் சார்ந்தது என்பது பெரியோர் கருத்து !
-
------------------------------------------------------------------------------------------------------

ஆன்றுஅவிந்த சான்றோருள் பேதை புகல்இன்னா;
மான்றுஇருண்ட போழ்தின் வழங்கல் பெரிதுஇன்னா;
நோன்றுஅவிந்து வாழாதார் நோன்புஇன்னா; ஆங்குஇன்னா
ஈன்றாளை ஓம்பா விடல்”.

-------------------------------------------------------------------------------------------------------

என்கிறார் கபிலர். இப்பாடலின் பொருள் என்ன

அறிவிற் சிறந்தவர்கள் வீற்றிருக்கின்ற அவையிலே அறிவில்லாத ஒருவன் புகுதல் கூடாது; அவ்வாறு புகுவது அவனுக்கும் துன்பம்; அவையோருக்கும் துன்பத்தைத் தரும். 

இருட்டிய பின்னர் ஆள் அரவமற்ற தனி வழியிற் செல்வது அவன் உடலுக்கும் துன்பம்; தவறு நேர்ந்தால் அவன் உயிருக்கும்  துன்பம். 

விளையக் கூடிய துன்பங்களைத் தாங்கக் கூடிய ஆற்றல் இல்லாதவர்கள் தவம் செய்யத் துணிதல் துன்பம். துணிந்த பின் சீர்மையின்றித் தவம் புரிந்தால் அனைவர்க்கும் துன்பம்.  தரும். 

தன்னைப் பெற்ற  அன்னையைப் பேணிக் காப்பாற்றாமல் தவிக்கவிடுவது அவனுக்கும் துன்பம்தவித்துக் கண்கலங்கும் அன்னைக்கும் துன்பமாகும் !


இன்னொரு பாடலில் கபிலர் சொல்வதைக் கேளுங்கள்

கடுமையான மழைக் காலத்தில் கூவும் குயிலின் குரலைக் கேட்பது மிகவும் கொடுமையானது ! அக்குரலைக் கேட்க நேர்வது மனதிற்கு மிகுந்த துன்பத்தைத் தரும்.; 

மனதில் அருள் அற்றுப் போன பாறைமனம் படைத்தோரின்  கடுமையான ஏச்சுரைகளைக் காதுகொடுத்துக் கேட்க முடியவே முடியாது; கேட்க நேர்வது மிகுந்த துன்பம் தரும்

மாரி வளம் பொய்த்து, பயிர் பச்சை, புல், பூண்டு அத்துணையும் அற்றுப் போய் ஊரே பாலைவனமாகக் காட்சி அளிப்பதைக் காண்பது ஊராருக்குக் கொடுந்துன்பமாக அமையும்

வேளாண்மை செய்கின்ற உழவன் பழக்கப்படாத முரட்டுக் காளைகளை ஏரில் பூட்டி உழவு செய்ய முனைவது துன்பத்திலெல்லாம் தலையாய  துன்பமாகும்

இதோ அந்தப் பாடல்:-

----------------------------------------------------------------------------------------------------

மாரிநாள் கூவும் குயிலின் குரலின்னா;
ஈரம் இலாளர் கடுமொழிக் கூற்றின்னா;
மாரி வளம்பொய்ப்பின் ஊர்க்கின்னா; ஆங்கின்னா,
மூரி எருத்தால் உழவு !

-----------------------------------------------------------------------------------------------------

படித்துப் பயனடையுங்கள் நண்பர்களே ! நம் முன்னோர்கள் நமக்காக விட்டுச் சென்றுள்ள கருத்துக் கருவூலங்கள் இவை ! பொன் போலப் போற்றிக் கொள்ள வேண்டியது நம் பொறுப்பு !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை,வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,ஆடவை,22]
{07-07-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
      ”தமிழ்ப் பணி மன்றம்” நுகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------