மக்கள் நீதி மய்யம் கரைந்து கட்டெறும்பாகும் காலம் தொலைவில் இல்லை !
ஒரு அரசியல்
கட்சியைத் தொடங்கி, மக்கள் ஆதரவைப் பெற்று,
ஆட்சியில் அமர்வதென்பது, கட்டுமான வழிமுறைகளை முறையாகப்
பின்பற்றி, பொறுமையாகவும் கடினமாகவும் உழைத்து, ஒரு மாளிகையைக் கட்டி, அதில் குடியேறுவதற்குச் சமம் !
மாளிகை
கட்டும் பணியில் முதலாவதாகக் கடைக்கால் தோண்டி, அடித்தளம் அமைத்து
அதன்மீது கற்களை வைத்துச் சிறிது சிறிதாக சுவர் எழுப்பி, வலுவூட்டி,
தேவையான உயரம் வந்தவுடன் கூரை ( ROOF MOLDING) அமைத்திட வேண்டும் !
பின்பு
இறுதிப் பணிகளை நிறைவேற்றி, கடைசியாக ஒப்பனை வேலைகளைச் செய்ய வேண்டும்.
இத்தகைய படிமுறைகளைப் பின்பற்றி அமைக்கப்படும் மாளிகை தான் கடுங்காற்றுக்கும்,
பெருக்கெடுத்து வரும் வெள்ளத்திற்கும் அசையாது நின்று நெடுங்காலம் நீடித்து
நிலைத்து நிற்கும். அரசியல் கட்சியைக் கட்டமைப்பதும் இத்தகைய
செயலே !
ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் கட்சியைத் தொடங்கிய திரு. விஜயகாந்தும், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்சி
தொடங்கிய திரு சீமானும், அண்மையில் கட்சி தொடங்கியுள்ள
திரு.கமலகாசனும், அரசியல் கட்சி என்னும் கட்டடம் கட்டும்
கலையை அறியாத ஆத்திரக் காரர்களாகத் திகழ்கின்றனர். அடித்தளமே இல்லாமல் கூரையை மட்டும்
அமைத்துக் கொண்டு குடியிருக்க ஆசைப்படுகிறார்கள். அடித்தளம் இல்லாத
கட்டடத்திற்கு வலிமை இல்லை என்பது ஏன் இவர்களுக்குப் புரியாமற் போகிறது ?
மாநிலம்
முழுதும் உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி, கட்சிக் கிளைகளைச்
சிற்றூர்கள் தோறும் அமைத்து, படிப்படியாக ஒன்றியம், வட்டம், மாவட்டம் என மேல்மட்டம் வரைப் பொறுப்பாளர்களைத் தேர்வு செய்து
நடத்தப் பெறும் கட்சிகளே என்றென்றும் நிலைத்து
நிற்கும். ஆலமரமாக விழுதுகள் விட்டுத் தழைத்து விளங்கும்
!
கட்சியின்
உட்கட்டமைப்புகளை உருவாக்கி வலுப்படுத்தாத விஜயகாந்தின் தே.மு.தி.க, தொடக்கத்தில் 8 % வரை வாக்குகளைப் பெற்றதையும்,
இப்போது 2% வாக்குகள் மட்டுமே பெறும் அளவுக்கு
வீழ்ச்சி அடைந்துள்ளதையும் ஒப்பிட்டுப் பாருங்கள் !
சீமான், சென்ற தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று முன்னேற்றம் காண்பிக்க முடிந்தது. அண்மையில் நடந்திருக்கும் தேர்தலிலும் அதே அளவுக்கு வாக்குகளை அவரது கட்சி
பெற்றிடும் என்பது நிச்சயமில்லை. பெறலாம்; அல்லது பெறாமலும் போகலாம். கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை
நடத்தி சிற்றூர்,
பேரூர், வட்டம், மாவட்டம்,
மாநில அளவில் திட்டவட்டமான உட்கட்டமைப்பை உருவாக்காமல் ஒற்றைக் கலைஞன் அரங்காடும் காட்சியாக (ONE MAN SHOW) அவர் கட்சியை நடத்தி
வரும் பாங்கு, ஆட்சியைப் பிடிக்கும் அவரது கனவை என்றைக்கும் நனவாக்கப்
போவது இல்லை !
விஜயகாந்த்தும்
சீமானும் நடைபயின்ற அதே பாதையில் தான் கமலகாசனும், பயணிக்கத்
தொடங்கி இருக்கிறார். அண்மையில் வாக்குப் பதிவு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரது கட்சி
குறிப்பிடத் தக்க அளவுக்கு வாக்குகளைப் பெறும் என நாம் எதிர்பார்க்கலாம். மாற்றத்தை விரும்பும் மக்களில் சிலர் அவருக்கு வாக்களித்து இருக்கக் கூடும் !
மாற்றத்தை
விரும்பும் மக்களின் வாக்குகளை கமலகாசன் போன்ற புதிய அரசியல் வரவுகள், தொடக்கத்தில் பெற்று, அரசியல் களத்தில் ஒரு வெளிச்சத்தைப்
பெற்றுவிடுகின்றன. ஆனால்,
அடித்தளம் இல்லாத இக்கட்சிகள், காலப் போக்கில்
கட்டெறும்பாகத் தேய்ந்து கரைந்து இருளில் மறைந்து போய்விடுகிறது என்பது அரசியல் ஆர்வலர்கள்
அறிந்து வைத்துள்ள உண்மை !
கட்சிக்கென
உட்கட்டமைப்பே இல்லை என்னும் நிலையில் கமலகாசனின் மக்கள் நீதி மையம் கட்சியின் வளர்ச்சி, கூடிய விரைவில் கரைந்து கட்டெறும்பாகி, சிற்றெறும்பாகத்
தேய்ந்து போவதை அவரால் தடுத்து நிறுத்தவே முடியாது. இக்காட்சியை
நாமும் காலப் போக்கில் காணத்தான் போகிறோம் !
திரையுலகில்
உச்ச நிலையில் ஒளிர்ந்துகொண்டிருந்த சிவாஜிகணேசன், பாக்யராஜ்,
டி.இராஜேந்தர், சரத்குமார்
ஆகியோர் அரசியல் கட்சி தொடங்கி தேர்தல் அரசியலிலும் மூழ்கி எழுந்தனர். ஆனால், யாருமே நிலைத்து நிற்க முடியவில்லை. காரணம், அவர்களது
கட்சிக்கு மேற்கூரை இருந்ததே தவிர, பக்கச் சுவர்களும்,
அடித்தளமும் கிஞ்சிற்றும் இல்லை என்பதை அவர்கள் உணரவில்லை !
நடப்பு
அரசியலில் மிகுந்த ஏமாற்றம் அடைந்த மக்களில்
ஒரு பிரிவினர், புதிதாக வருபவர்களால் நல்லவை நடவாதா என்னும்
நப்பாசையில், ஏக்கத்தில், தொடக்கத்தில்
அவர்களை ஆதரித்து வாக்களிக்கிறார்கள். ஆனால், போகப் போக, இவர்களும் கவைக்கு உதவமாட்டார்கள் என்பதைக்
கண்டுகொண்டு கைவிடத் தொடங்கிவிடுகிறார்கள். விஜயகாந்துக்கு ஏற்பட்ட
இதே நிலை தான் சீமானுக்கும் ஏற்படப் போகிறது; கமலகாசனுக்கும்
ஏற்படப் போகிறது !
அரசியல்
கட்சி தொடங்கப் போகிறேன் என்று பூச்சாண்டி காட்டி வரும் இரஜினிகாந்துக்கும் இதே நிலை
தான்.
இரஜினிகாந்தின் நடிப்பினைப் போற்றும் சுவைஞர்கள் எல்லாம் அரசியல் களத்தில் அவரை ஆதரிப்பார்கள்
என்று கணக்குப் போடுவது முட்டாள்தனம். அவர் ஒருநாளும் மக்கள்
ஆதரவைப் பெற முடியாது. அடித்தளம் இல்லாமல் கட்டடம் கட்ட நினைக்கும்
இத்தகைய மேதாவிகளை, மக்கள் அடையாளம் கண்டுகொள்ளும் காலம் விரைவில்
வரத்தான் போகிறது !
திரையுலக
மின்மினிப் பூச்சிகள் தமது ஒளியை இழந்து முக்காடு போட்டுக் கொண்டு மூலையில் விழுந்து
கிடப்பதை நாமும் பார்க்கத்தான் போகிறோம்!
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப்
பணி மன்றம்.
[தி.ஆ:2050,மேழம்,07]
{20-04-2019}
---------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப்
பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------