name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், அக்டோபர் 02, 2019

கீழ்க்கணக்கு (02) நான்மணிக் கடிகை !

எத்துணை முயன்றாலும் துயில்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் பலருண்டுயார் இவர்கள் ?



கீழ்க்கணக்கு நூல்களுள் அடி அளவினால் நாலடியார் பெயர் பெற்றது போல, பாடல்களில் கூறப்பெறும் பொருள்களின் அளவால் நான்மணிக் கடிகை பெயர் பெற்றுள்ளது !

கடிகை என்பது துண்டம் என்று பொருள்படும். எனவே, நான்மணிக் கடிகை என்னும் தொடர் நான்கு மாமணித் (இரத்தினம்) துண்டங்கள் என்னும் பொருளைத் தருவதாகும். ஒவ்வொரு பாடலிலும், ஒத்த நான்கு சிறந்த கருத்துகளைத் தேர்ந்தெடுத்துப் பிணைத்து, அழகிய சொற்கோவையைப் படைத்துள்ளார் நான்மணிக் கடிகையை யாத்துள்ள புலவர் விளம்பி நாகனார் !

இறைவணக்கச் செய்யுள்  நீங்கலாக இந்நூலுள் 101 செய்யுள்கள் உள்ளன. செய்யுள்கள் எல்லாம் வெண்பாக்களால் அமைந்தவை. ஒருசில பஃறொடை (நான்கடிகளுக்கு மேல்) வெண்பாக்கள். மற்றவை நேரிசை, இன்னிசை வெண்பாக்கள் !

நான்மணிக் கடிகையிலிருந்து சில அருமையான செய்யுள்கள் உங்கள் பார்வைக்கு !

மனிதர்கள் சிலர் படுக்கையில் படுத்தவுடனேயே உறங்கிவிடுவர். வேறு சிலர் சற்று நேரம் புரண்டு புரண்டு படுத்த பின் தூங்குவர். இன்னும் சிலர் மாத்திரையின் உதவியால் துயில்கொள்வர். ஆனால் எத்துணை முயன்றாலும் துயில்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் பலருண்டு. யார் இவர்கள் ?

அடுத்தவர் பொருள் மேல் ஆசைப்பட்டு, அதைக் களவாட நினைப்பவர்க்கு உறக்கமே வராது

காதலிக்கும் பெண்ணிடம் உள்ளத்தைப் பறிகொடுத்து அவளையே நினைத்து நினைத்து உருகும்  ஆடவர்க்கும்  உறக்கம் அருகிலேயே வராது

இருப்பது போதாது என்று பேராசை கொண்டு மேலும் மேலும் செல்வத்தைத் தேடி ஆலாய்ப் பறக்கும் மனிதர்கட்கும் உறக்கம் வராது

கோடி கோடியாய்ச் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கும் மனிதர்களுக்கு அதைக் கள்வர்களிடமிருந்தும், அரசுத் துறையினரின் கழுகுக் கண்களினின்றும்  பாதுகாக்கும் கவலையில் எந்நாளும் உறக்கம் வரவே  வராது !

விளம்பி நாகனார் தனது செய்யுள் வாயிலாக உண்மைய விண்டு வைக்கும் அழகைப் பாருங்கள் !
--------------------------------------------------------------------------------------

கள்வம்என்பார்க்கும் துயில் இல்லை; காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை; ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில் !

---------------------------------------------------------------------------------------

வேறொரு பாடலில் விளம்பி நாகனார் சொல்கிறார்:- 

எத்துணைப் பெரிய அமைப்பாக இருந்தாலும், அதில் உறுப்பு வகிக்கும் மக்களிடையே ஒற்றுமை இல்லையேல், அது அந்த அமைப்பின் வலிமையையே சிதைத்துவிடும் !

ஒருவன் செய்யத் தகாத குற்றம் ஒன்றைச் செய்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்கப் பொய் சொல்வானாகில், ஊர்மக்களின் கோபத்திற்கு ஆளாகி, நையப் புடைக்கப்பெற்று, அவனது பொன்னிற உடல் புண்ணாகிச் சிதைந்து போகும் ! 

பெய்கலனின் தன்மை அறியாது, தீமை விளைவிக்கும் கலனில் பாலை ஊற்றிக் காய்ச்சினால், பாலின் சுவையே சிதைந்து போகும் !

சேரக் கூடாத, கீழ்மைக் குணம் படைத்த மனிதர்களிடம், ஒரு மனிதன் பழகத் தொடங்கினால், அவனது குலமே சிதைந்து அழிந்து போய்விடும் !

 இதோ அந்தப் பாடல் !
----------------------------------------------------------------------------------------

மொய்சிதைக்கும் ஒற்றுமை இன்மை; ஒருவனைப்
பொய்சிதைக்கும், பொன்போலும் மேனியை; பெய்த
கலம் சிதைக்கும், பாலின் சுவையை; குலம் சிதைக்கும்
கூடார்கண் கூடி விடின்.

----------------------------------------------------------------------------------------

மனித குலத்திற்குத் தேவையான பொருள் பொதிந்த அறிவுரையை எத்துணை அழகாகச் சுள்ளென்று மண்டையில் உறைக்கும் வண்ணம் எடுத்துச் சொல்லி இருக்கிறார் விளம்பி நாகனார் !

இவை போன்று, நல்லுரை நல்கும் பாடல்களின் தொகுதியே நான்மணிக் கடிகை. படித்து, மகிழ்ந்து, பயன் அடைய வேண்டியது தமிழ்க் குலத்தின் கடமை !

எழுத்திலும், பேச்சிலும் நல்ல மேற்கோள்களை எடுத்தாள விரும்புவோர், கட்டாயம் இந்நூலினைப் படியுங்கள் !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்,
[தி.:2050,ஆடவை,21]
{06-07-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
      “தமிழ்ப்பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------