பண்பாட்டைச் சீரழிக்கும் பணப் பேய்களின் கூடாரம் !
தமிழ்நாட்டு மக்களுக்கு இன்று பொழுது போக்குச் சாதனமாக இருப்பவை திரைப் படமும் தொலைக் காட்சியும். அறிவியல் வளர்ச்சியின் ஒரு பகுதியான திரைப்படம், தமிழக மக்களைத் தன்பால் ஈர்த்துக் கட்டிப் போட்டுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது !
நாடு விடுதலை பெறுவதற்கு முன்பு மக்களிடையே விடுதலை வேட்கையைத் தூண்டி விட்டதிலிருந்து செவிகளுக்கு இன்பம் பயக்கும் மெல்லிசையை அறிகப்படுத்தியது வரை திரைப்படத்தின் பங்கு அளப்பரியது !
கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார், மருது சகோதரர்கள், பாரதியார், பெரியார் போன்ற மாமனிதர்களின் வாழ்க்கை வரலாற்றை மக்களிடம் எடுத்துச் சென்றதும் திரைப்படம் தான் !
சிறந்த அறிவியல் கருவியாகத் திகழ்ந்த தமிழ்த் திரைப்படம், இன்று மக்களை அழிக்கும் அணுக் குண்டாக மாறி வருகிறது. கதையை மட்டும் நம்பி எடுக்கப்பட்ட படங்கள் அன்று பல சாதனைகளைப் படைத்தன. ஆனால் சதையை மட்டுமே நம்பி எடுக்கப்படும் இன்றைய படங்கள் மக்களுக்கு வேதனைகளைத் தான் தருகின்றன !
கறையான் புற்றெடுக்க அதில் கருநாகம் குடிவந்ததைப் போல, நன்னெறியாளர்கள் மறைந்து தீநெறியாளர்கள் திரைத்துறையை முற்றிலுமாக தன்வயப் படுத்திக் கொண்டுவிட்டனர் !
இன்றைய திரைப் படத்தில் அறவுணர்ச்சி ஊட்டும் கதைக் காட்சிகள் இல்லை; ஆனால் மனக்கிளர்ச்சி ஊட்டும் சதைக் காட்சிகள் இருக்கின்றன. நீதி நெறிகளை உயர்த்திப் பிடிக்கும் நேரிய காட்சிகள் இல்லை; ஆனால் பீதியில் உறைய வைக்கும் பீடைமிகு வன்முறைக் காட்சிகளைத் தாராளமாகவே தருகின்றனர் !
முத்தக் காட்சிகளையும்
முதலிரவுக் காட்சிகளைப் பார்க்கும் பத்து வயதுச் சிறார்கள் ஒழுக்க சீலர்களாக வளர்வார்கள் என்று திரையுலக அரிச்சந்திரன்கள் நமக்குப் பாடம் சொல்லித் தருகிறார்கள் போலும் !
இலைமறை காயாகத் தெரிய வேண்டிய செய்திகளை அப்பட்டமாகத் துகிலுரித்துக் காட்டும் திரையுலகக் கோணல் மதிக் கோட்டான்கள், இளைய சமுதாயத்தின் நெஞ்சில் நஞ்சைப் பாய்ச்சி அவர்கள் பிஞ்சுப் பருவத்திலேயே வெம்பி
வீழ்ந்துவிட வித்திட்டுக் காவலுக்கும் ஆள் வைத்துக் காத்திருக்கிறார்கள் !
தடயங்களை விட்டு வைக்காமல் கொலை செய்வது எப்படி, நுட்பமாகத் திட்டமிட்டுக் கொள்ளை அடிப்பது எப்படி , பெண்களை ஏமாற்றித் தன் வயப்படுத்துவது எப்படி , பயணம் செய்யும் ஊர்திகளிலும், பொது நிகழ்வுகளிலும் குண்டுகளை வெடிக்கச் செய்வது எப்படி என்று பல தீய கருத்துகளைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டி மக்களுக்கு மாபதகம் செய்து வருகின்றனர், - இந்தத் திரைத்துறை மாயமான்கள் !
தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர், நடிகை என அனைவரும் தான் இந்தப் பண்பாட்டுச் சீரழிவுக்குப் பொறுப்பு. பணம், பணம் என்று பேயாய் பித்துப் பிடித்து அலையும் இந்தப் பேதமை மனிதர்கள் , மனித சமுதாயத்தை பாழ்படுத்தி வரும் தொற்று நோய் நச்சு உயிரிகள் என்று சொன்னால் அது மிகையாகாது !
ஒரு படத்திற்கு உருபா ஐம்பது கோடி அளவுக்குச் சம்பளம் வாங்கும் முதன்மை நடிகர்கள், தமிழ்நாட்டு மக்களைச் சுரண்டிக் கொள்ளை அடித்துக் கொழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். திரைக் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்ட தமிழ் நாட்டின் ஒரு பகுதி மக்கள், அறிவு மயங்கி இந்த நடிகர்களின் பின்னால் அணி வகுத்து நிற்கிறார்கள்; அவர்களைத் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள் !
நமது பணத்தைச் சுரண்டி, ஒரு நடிகன் கோடி கோடியாய்க் குவிக்க, நாம் ஏன் துணை போக வேண்டும் என்று இந்த மயக்க மனிதர்கள் நினைப்பதும் இல்லை; கோடிகளில் புரளும் இந்த நடிகர்கள், தமது செல்வச் செழிப்பிலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி வீதியோரங்களில் உறங்கும் ஏதுமற்ற ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவோம் என்று இரக்கப்படுவதும் இல்லை. இரக்கமற்ற இந்த நடிகர்கள், அரசியலிலும் கால் பதித்து உச்சம் காண ஆசைப்படுகிறார்கள். !
திரைத்துறைக் கவர்ச்சியில் மயங்கி, உழைத்துச் சேர்த்த சொந்தக் காசையும் இழந்து, நடிகர்களின் வானளாவிய அட்டை உருவுக்கு பால் முழுக்காட்டும் இந்த மதி மயங்கிய மக்களை எண்ணுகையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு பாரதியார் பாடிய , நெஞ்சு பொறுக்கு தில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் ! என்னும் பாட்டுதான் நினைவுக்கு வருகிறது !
தமிழக மக்களே ! திரைத் துறைக் கவர்ச்சியிலிருந்து விடுபட்டு, உங்கள் சொந்த வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக உழையுங்கள் ! நெல்லுக்கு நீர் பாய்ச்சலாம்; புல்லுக்கு நீர் பாய்ச்சுவது புத்தியுள்ள மனிதர்களுக்கு அழகாகுமா ? கோடிகளைக் குவித்து வைத்துள்ள குறுமதியாளர்களுக்கு விசிறியாக இருப்பதை விட, குழிவிழுந்த கண்களுடன் வாஞ்சையுடன் வாழ்ந்து வரும் உங்கள் தாய் தந்தையருக்கு விசிறியாக வாழுங்கள் !
-----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.ஆ:2050, சுறவம்,7]
{21-01-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------