name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், செப்டம்பர் 17, 2019

புதிய தமிழ்ச் சொல் (52) உமிழி ( PUMP )


உமிழி - PUMP
----------------------------------------------------------------------------------------------------------

ஊர்ப்புறங்களிலும் நகர்ப் புறங்களிலும் மக்கள் தங்கள் நீர்த் தேவைக்கு ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளை (BORE WELL) அமைத்து கொள்வதைக் காண்கிறோம். இந்த குழாய்க் கிணற்றிலிருந்து தண்ணீரை வெளியே எடுப்பதற்குச் சில பம்புகளை (PUMPS) தங்கள் விருப்பத்திற்கு ஏற்பத் தேர்வு செய்து பொருத்துகிறார்கள் !


நீருக்குள் அமிழ்ந்து நின்று, நீரை உறிஞ்சி மேலே கொண்டு வரும் சப்மெர்சிபிள் பம்பு” (SUBMERSIBLE PUMP) , நீருக்குள் மூழ்கி இருக்கும் ஒரு குழாயின் கீழ்முனைக்கு, வேறொரு குழாய் வழியாகக் காற்றை அழுத்தத்துடன் அனுப்பி, அந்தக் காற்றின் அழுத்தத்தினால் நீரை மேலே தள்ளிக் கொண்டு வந்து கொட்டும் ஜெட் பம்பு” (JET PUMP) , ஆகியவை ஆழ்குழாய்க் கிணறுகளில் பயன்பாட்டில் உள்ளன !


ஆற்று நீர் அல்லது குளத்து நீரை மைய விலக்கு விசை (CENTRIFUGAL FORCE) மூலம் உறிஞ்சி வெளியே கொட்டும் செண்ட்ரிபியூகல் பம்பு” (CENTRIFUGAL PUMP) அதிக உயரத்திற்கு நீரைக் கொண்டு செல்லத் தேவையில்லாத இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன !


1956 –ஆம் ஆண்டு தமிழக அரசு, தமிழை ஆட்சி மொழியாக அறிவித்துச் சட்டம் இயற்றியது. அதன்பின் 63 ஆண்டுகள் ஓடிவிட்டன. எனினும் பிறமொழிச் சொற்களே தமிநாட்டில் இன்னும் கோலோச்சுகின்றன. அரசு அலுவலகங்களிலும், செய்தித் தாள்களிலும், மின்ம ஊடகங்களிலும் பம்புஎன்னும் சொல்லையே இன்னும் பயன்படுத்தி வருகின்றனர் !


பம்பு” (PUMP) என்பதைச் சிலர் குழாய் ஏற்றம்என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். வேறு சிலர் விசைக் குழாய்என்று தமிழாக்கம் செய்கிறார்கள். இவை இரண்டும் இருசொற் பெயராக உள்ளன. வடிவிலும் பெரியதாக உள்ளன. ஒரே சொல்லில் குறுகிய வடிவம் உடையதாக ஒரு பெயரை உருவாக்க முடியுமா என்பதைச் சற்று ஆய்வு செய்வோம் !


ஒரு நீர் இறைக்கும் பம்புஎப்படி வேலை செய்கிறது ? தண்ணீர் நிரம்பியுள்ள கிணறு, குட்டை, குளம் அல்லது ஏரியிலிருந்து பம்புடன் பொருத்தியுள்ள நெளிகுழாய் (HOSE PIPE) ”பம்புவின் விசையால் நீரினை உள்ளிழுத்து பம்புக்குள் அனுப்புகிறது. பம்புஅதனை வேறொரு குழாய் வழியாக வெளியே உமிழ்கிறது !


ஊர்திகளின் ஆழித் தூம்புகளில் (TUBES) காற்றினை ஏற்றும் பம்புகளும் இதே முறையில்தான் இயங்குகின்றன. வெளியில் உள்ள காற்றை உறிஞ்சி ஆழித் தூம்பினுள் உமிழ்கிறது !


நீர் இறைக்கும் பம்புவாக இருந்தாலும் சரி, காற்று ஏற்றும் பம்புவாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கலனுக்குள் இருக்கும் காற்றினை உறிஞ்சி வெளியே துப்பும் வேக்குவம் பம்புவாக இருந்தாலும் சரி, அவற்றினுடைய இயக்க முறை ஒரே தன்மையதே !


இவ்வாறு உறிஞ்சி உமிழும் பம்புவை உமிழிஎன்று சொன்னால் பொருத்தமாக இருக்கும் அல்லவா ? “உமிழிஎன்ற சொல் வடிவில் சிறியது; ஒலி நயம் உடையது; காரணப் பெயராகவும் அமைகிறது. எனவே, இனி நாம் பம்புஎன்று சொல்லாமல் உமிழிஎன்றே சொல்வோமே !


உமிழிஎன்னும் சொல்லின் அடிப்படையில் உருவாகும் வேறு சில சொற்களையும் தமிழாக்கம் செய்வோமே !


============================================================


PUMP....................................................= உமிழி

PUMP SET............................................= உமிழிக் கணம்

SUBMERSIBLE PUMP.........................= நீர்மூழ்கி உமிழி

JET PUMP............................................= வளிவிசை உமிழி

F.H.P.MOTOR PUMP.............................= சிறு திறன் உமிழி

PUMPING STATION..............................= நீரேற்று நிலையம்

VACUUM PUMP....................................= வெட்புல உமிழி

PETROL PUMP......................................= கன்னெய் உமிழி


DIESEL PUMP........................................= தீயல் உமிழி

BI-CYCLE PUMP....................................= ஈருருளி உமிழி

HAND PUMP..........................................= கையியக்க உமிழி

FUEL PUMP............................................= எரிபொருள் உமிழி

CENTRIFUGAL PUMP............................= மையவிலக்கு உமிழி


---------------------------------------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,

வை.வேதரெத்தினம்,

(veda70.vv@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பணி மன்றம்.

[தி.ஆ;2050,மடங்கல் (ஆவணி),26]

{12-09-2019}


---------------------------------------------------------------------------------------------------------
தமிழ்ப் பணி மன்றம்முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற

கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------



உமிழி




உமிழி