தாய்மொழியைப் புறக்கணிப்பவன் அறிஞன் ஆக முடியாது !
ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டு ஆயிரக் கணக்கில் பதின்மப் பள்ளிகள் (Matriculation Schools) தமிழகமெங்கும் செயல்பட்டு வருவது உங்களுக்குத் தெரியும். கல்வியைச் சேவையாகக் கருதாமல் வணிகமாகக் கருதுபவை இப்பள்ளிகள். இப் பள்ளிகளின் பால் இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு, பெற்றோர்கள் தம் பிள்ளைகளை அங்கு கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறார்கள் !
ஆங்கிலத்தில் தங்கள் பிள்ளைகள் புலமை பெற்றால் போதும், தமிழ் தெரியாவிட்டலும் பரவாயில்லை என்று சிலர் தப்புக் கணக்குப் போடுகிறார்கள். ஆங்கில வழிக் கல்வி தங்கள் பிள்ளைகளுக்கு அனைத்துத் திறமைகளையும் அள்ளிக் கொண்டு வந்து தந்துவிடும் என்றும் வேலை வாய்ப்பை அளவு கடந்து உருவாக்கித் தரும் என்றும் தாய் மொழியான தமிழ் தேவை இல்லை என்றும் தவறான சிந்தனை கொண்டுள்ள இவர்கள், தங்கள் குழந்தைகளின் எதிர் காலத்தை இருளடையச் செய்கிறார்கள் என்று தான் எண்ணத் தோன்றுகிறது !
எந்தத் துறைப் படிப்பாயினும், அது நமக்கு அளிக்கின்ற அறிவுச் செல்வத்தை முழுமையாக அடைவதற்கு அதைபற்றி முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்து கொள்ளும் உணர்வை நமக்கு அளிப்பது தாய்மொழியே !
நமது வீட்டில் வளரும் இரண்டு வயது குழந்தை என்னென்னவோ பேசுகிறதே, அதற்கு யார் சொல்லிக் கொடுத்தது அந்தச் சொற்களை? நீங்கள் சொல்லிகொடுக்காத சொற்களை எல்லாம் பேசுகிறதே, அது எப்படி ? அந்த மழலை பேசுகின்ற கொஞ்சும் குரலில் வந்து விழுகிறதே வெல்லத் தமிழ்ச் சொற்கள், அவற்றை நீங்கள் எப்போது சொல்லிக் கொடுத்தீர்கள் ?
நீங்கள் சொல்லிக் கொடுக்காத சொற்களை எல்லாம் அக்குழந்தையால் எப்படிப் பேச முடிகிறது ? அது தான் தாய் மொழியின் மேன்மை ! தாய் மொழியில் புரிந்து கொள்ளும் ஆற்றல் அதனுடைய அரத்தத்தில் ஊறிப்போய் இருக்கிறது. தாய் மொழியில் பேசுகின்ற ஆற்றல் அதற்கு இயல்பாகவே வருகிறது !
நமது தாய் மொழி தமிழ். தமிழில் சொல்லிக் கொடுத்தால் நமக்கு நன்கு புரிகிறது. தமிழில் எழுதி இருப்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடிகிறது. தமிழ் நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் இயல்பாகவே தமிழில் சொல்லி கொடுப்பதைப் புரிந்து கொள்ளும் ஆற்றலுடன் தனது கல்விப் பயணத்தைத் தொடங்குகிறது !
ஆனால் ஆங்கில வழிக் கல்வியில் பயின்றால் தான், தனது குழந்தை திறமைசாலியாக வளர முடியும் என்ற தவறான எண்ணம் கொண்ட பெற்றோர் ஆங்கிலப் பயிற்று மொழிப் பள்ளியில் தனது குழந்தையைச் சேர்த்து அதை ஆங்கிலப் புலமை பெறச் செய்யப் பணத்தை அள்ளிக் கொட்டுகின்றனர் !
ஆங்கிலத்தில் புலமை பெறுவதைத் தடுப்பது நமது நோக்கமல்ல. ஆனால் தாய் மொழியான தமிழில் அந்தக் குழந்தைகளை புலமை பெறச் செய்து அந்தக் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றலை மேம்படுத்த ஆங்கில வழிப் பயிற்று மொழிப் பள்ளிகள் எந்த முயற்சியும் செய்வதில்லையே !
ஆங்கில வழிப் பயிற்று மொழிப் பள்ளியில் குழந்தைகளைச் சேர்க்கும் பெற்றோர் தங்கள் குழந்தைகள் தமிழில் பேசத் தடுமாறுவதையும், தமிழில் எழுதவோ, படிக்கவோ தெரியாத நிலையில் வளர்வதையும் நினைத்துப் பாருங்கள். படித்துவிட்டு அமெரிக்காவிலா குடியமரப் போகிறது ? தமிழ் நாட்டில் தானே வாழ்ந்தாக வேண்டும் .தமிழில் எழுதவோ படிக்கவோ தெரியாமல் அந்தப் பிள்ளை எதிர்காலத்தில் எத்தனை அல்லல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள் !
தாய் தந்தையர் செய்யும் நன்மை தீமைகளின் பலன் பிள்ளைகளைச் சாரும் என்பார்கள். பயிற்று மொழி தொடர்பாகப் பெற்றோர் செய்யும் தவறு பிற்காலத்தில் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும் !
தமிழ்ப் பயிற்று மொழிப் பள்ளியில் படித்த அப்துல் கலாம் ஏவு கணை அறிவியல் அறிஞர் ஆகவில்லையா ? தமிழ்ப் பயிற்று மொழிப் பள்ளியில் படித்த மயில்சாமி அண்ணாதுரை செவ்வாய்க் கோளுக்கு விண்கலம் அனுப்பும் அறிவியல் அறிஞராகப் பணிபுரிய வில்லையா ?
அரியலூரில் பிறந்து, வளர்ந்து, தமிழ் வழிப் பள்ளியில் படித்து, இஸ்ரோவில் செயற்கைக் கோள் அனுப்புகைப் பிரிவில் அறிவியல் அறிஞராகப் பணியாற்றும் திருமதி. வளர்மதி ஆங்கில வழிக் கல்வியாலா தனது வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்துள்ளார் !
இந்த மூன்று அறிஞர்களுமே தமிழ் வழிப் பள்ளியில் படித்ததனால் தான் தங்களால் அறிவியலில் ஆழமாகச் சிந்திக்க முடிந்தது என்று சொல்லியதைப் படிக்க வில்லையா ?
அறிவியல் கண்டுபிடிப்புக்களின் உச்சத்தில் இருக்கும் செர்மன் (Germany) நாட்டில் செர்மானிய மொழியில் தான் கல்வி கற்பிக்கப்படுகிறது. சப்பான் (Japan) நாட்டில் சப்பானிய மொழியில்தான் கல்வி கற்பிக்கப் படுகிறது. உருசியநாட்டில் (Russia) உருசிய மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது !
சீன நாட்டில் சீன மொழியில் தான் கல்வி கற்பிக்கப் படுகிறது. தாய் மொழி வழியில் கற்பிக்கப்படும் கல்வியால் தான் ஒரு மாணவரின் சிந்தனை ஆற்றலைத் தூண்ட முடியும் என்று அந்த நாடுகள் உறுதியாக நம்புகின்றன !
ஆனால் தமிழ் நாட்டில் தான் தமிழ் வழிக் கல்வி பயன் தராது என்றும் ஆங்கில வழிக் கல்வி தான் சிறந்த மாணவனை உருவாக்க முடியும் என்றும் பெற்றோர்கள் தவறாக எண்ணுகிறார்கள். ஆங்கில வழிக் கல்விப் பள்ளிகளை நடத்தும் கல்வி வணிகர்கள் ஏற்படுத்தியுள்ள மாயையால் பெற்றோர்கள் மனதில் தவறான எண்ணம் ஆழப் பதிவாகிப் போய் விட்டது !
ஆங்கில வழியில் கல்வி கற்ற பிள்ளைகளுக்குத் தமிழில் எழுதப் படிக்கத் தெரிவதில்லை. அந்தப் பிள்ளைகளுக்கு வைத்திருக்கும் பெயரிலும் தமிழ் இல்லை. ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பெற்றோரினாலும் பேச முடியவில்லை. தாய் மொழி என்பது பெற்ற தாய்க்குச் சமம். தாய் மொழியைப் புறக்கணிப்பது தாயைப் புறக்கணிப்பதற்குச் சமம். தாய் மொழி என்பதன் உட்பொருளைப் புரிந்து கொள்ளாமையால் ஏற்பட்ட விளைவு தான் இது !
ஆங்கிலம் தமிழ் இரண்டிலுமே புலமை பெறட்டும் - நம் பிள்ளைகள். வேண்டுமானால் இன்னும் இரண்டு மொழிகளையும் சேர்த்துக் கற்றுக் கொடுத்து அதிலும் புலமை பெறச் செய்யலாம். ஆனால் அதற்கு விலையாக தாய் மொழியைப் பலி கொடுப்பதென்பது கொடுமையிலும் கொடுமை. மடமையிலும் மடமை !
தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தில் ஈர்ப்பு கொள்ளச் செய்யும் ஆங்கில வழி பள்ளிகள் அழைத்துச் செல்கின்ற தவறான பாதையில் நடை பயிலும் பெற்றோர்கள் இப்போதாவது விழித்துக் கொள்ளவேண்டும்.! கண் கெட்ட பிறகு சூரிய வணக்கம் செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் அதனால் பயனில்லை. பெற்றோர்களின் ஆங்கில வழிக் கல்வி ஈர்ப்பினால் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையைப் பாழடித்து விடாதீர்கள் !
----------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி
மன்றம்.
{20-07-2019}
-----------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பெற்ற
கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------