name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, செப்டம்பர் 07, 2019

சிந்தனை செய் மனமே (14) ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் அரசியல் !

அரசியல் கட்சிகளின் பின்னால் அணிவகுத்து நின்று, தமிழர்களிடையே ஒற்றுமைக் குலைவுக்கு உதவி செய்யாதீர் !


புதுடில்லியில்  [மத்தியில்]  அமைகின்ற  அரசுகளால் தமிழ்நாடும்,  தமிழக    மக்களும் தொடர்ந்து புறக்கணிக்கப்பெற்று வருவதை   நீங்கள் அறிவீர்கள்.


துபோல் தமிழ் மொழியும்  பல நெருக்குதல்களுக்கு உள்ளாகி வருவதும் அனைவரும் அறிந்த செய்தியே ! இவற்றிற்கு  எல்லாம் காரணம் என்ன என்பது பற்றிச் சற்று ஆய்வு செய்வோம் !

தமிழக அரசு 2014-ல் வெளியிட்ட ஒரு செய்தியின்படி  தமிழ்நாட்டில் மட்டும் 194 பதிவு பெற்ற அரசியல் கட்சிகள் இயங்கி வருகின்றன. சாதியைப் பின்புலமாக வைத்து இயங்கும் அரசியல் இயக்கங்களும் இவற்றுள் அடக்கம். 

இந்த 194 அரசியல் கட்சிகளும் தமிழ்நாட்டில் இயங்கி வருவற்கான காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவற்றைப் பற்றி நாம் ஆய்வு செய்ய வேண்டாம்.

ஆனால் அவை இங்கு இயங்கி வருவதால் தமிழ் நாட்டுக்கும், தமிழக மக்களுக்கும் விளைந்த நற்பயன்கள் அல்லது தீயபயன்கள்  யாவை என்பதைப் பற்றி மட்டும் பார்ப்போம்.

2015-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கின்படி  தமிழக மக்கள் தொகை 7.67 கோடி ஆகும். இந்த 7.67 கோடியில் சற்றேறக் குறைய 5 கோடி பேரை இந்த அரசியல் இயக்கங்கள் ஆளுக்குக் கொஞ்சமாகப் பங்கு போட்டுத் தம் பக்கம் ஈர்த்து வைத்திருக்கின்றன. இவர்களை மூளைச் சலவை  செய்து  தங்களை விட்டுப் பிரியாத வண்ணம் பிணித்து வைத்திருக்கின்றன. ஒருவருடன் ஒருவர் சேராதபடி விலகி நிற்கவும் வைத்திருக்கின்றன.

இன்னும் சில இயக்கங்கள் இவர்களிடையே பகைமை எண்ணத்தை விதைத்து ஒருவர் முகத்தில் மற்றவர் விழிக்கலாகாது என்ற உணர்வையும், தப்பித் தவறி விழித்தால் பதவி பறிக்கப்படும் என்ற  நிலையையும்  உருவாக்கி  வைத்திருக்கின்றன.

ஐந்து கோடித் தமிழக  மக்களை ஒருவரோடு ஒருவர் ஒன்றவிடாமல் இந்த அரசியல் கட்சிகளின்  தலைவர்கள்  பிரித்து வைத்திருக்கிறார்கள். யாருக்காக இந்த மக்கள் இப்படி அணி பிரிந்து நிற்கிறார்கள் ?

தங்களுக்காகவா ? அல்லது  ஏழை  எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவா ? இல்லை ! தலைவர்களின் தனிப்பட்ட விருப்பத்திற்காக - அவர்களது தனிப்பட்ட முன்னேற்றத்திற்காக -  மக்கள் பிரித்து வைக்கப் பட்டிருக்கிறார்கள். பிரித்தாளும் கலையை இந்தத் தன்னலத் தலைவர்கள் மிகத் திறமையாக  அரங்கேற்றி வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள 7.67 கோடி மக்களில்   அரசியல் கட்சிவாரியாகக் கட்டுண்டு கிடக்கும் 5 கோடி பேர் போக மீதமுள்ள 2.67 கோடியில் ஏறத்தாழ 2 கோடி பேர் சமுக அக்கறை அற்றவர்கள். இவர்கள், இராமன் ஆண்டாலென்ன, இராவணன் ஆண்டாலென்ன என்று தத்துவம் பேசுபவர்கள். வாக்களிக்கும் தருணத்தில், அவ்வுரிமையை விற்பனை செய்பவர்கள்.

எஞ்சிய 0.67 கோடி பேர்தான், சமுக அக்கறையோடு செயல்படுபவர்கள். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வதன்றி வேறெதுவும் செய்ய இயலாதபடி கையறு நிலையில் கலங்கிக் கொண்டிருப்பவர்கள் !

அரசியல் கட்சிவாரியாக அணி பிரிந்து நிற்கும் தமிழ் நாட்டு மக்கள், எந்தவொரு பிரச்சினையானாலும் ஒன்றுபடுவதும் இல்லை. ஒருமித்துக் குரல் கொடுப்பதும் இல்லை. தமிழ்நாட்டு அரசியல் இயக்கங்கள்  நமக்கு அள்ளித் தந்திருக்கும் பரிசு இந்தத் தீய பயனே அன்றி வேறெதுவுமில்லை.    

காவிரிப் பிரச்சினை, கண்ணகிக் கோயில் பிரச்சினை  முல்லைப் பெரியாறு பிரச்சினை, தனி ஈழம், ஏறு தழுவல், வழக்காடு மொழி, வழிபடும் மொழி, மீனவர் வாழ்வாதாரம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, ஆற்று மணல் கொள்ளை, கூடங்குளம் அணு உலை, இந்தித் திணிப்பு, மது ஒழிப்பு, கல்வி வணிக மயமாதல் ஆகிய எந்தப் பிரச்சினையானாலும் மக்கள் ஒன்று திரளாதபடி அணி பிரித்து வைக்கப்பட்டிருப்பது யாரால் ? அரசியல் கட்சிகள்  அல்லவா   இந்த   அவல   நிலைக்குக் காரணம் !

நண்பர்களே ! உங்களது அரசியல் சார்பு நிலையைச் சற்று எண்ணிப் பாருங்கள். மக்களைப் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகளில் கூட நம்மை ஒன்று கூட விடாமல் பிரித்து வைத்திருக்கும் அரசியல் கட்சிகளுக்கு நாம் இன்னும் துணை போக வேண்டுமா ?

எந்தப் பிரச்சினையானாலும் நாம் ஒன்று திரண்டுப் போராட மாட்டோம் என்பதை மையத்தில் ஆட்சிக்கு வரும் அரசுகள் எளிதில் தெரிந்து கொள்கின்றன. இதனால் தான் அவர்கள் நம்மை மதிப்பதில்லை. தமிழக மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப் படுவதில்லை.

தமிழ்நாடு தாழ்நிலைக்குப் போனதற்கும், தமிழ் மொழி நசுக்கப் படுவதற்கும் நாம் தான் காரணம். நம்மிடையே நிலவும் ஒற்றுமை இன்மைதான் காரணம். நம்மிடையே ஒற்றுமை இன்மை நிலவுவதற்கு  தமிழ்நாட்டிலுள்ள 194 அரசியல் இயக்கங்கள் தான் காரணம்.  

எனவே உண்மை   நிலையை   இப்போதாவது   உணர்வோம் ! அரசியல் கட்சிகளின் சார்பு நிலையை நாம் வாக்களிப்பதற்கு மட்டும் வைத்துக் கொள்வோம் ! ஏனைய நிலைகளில் அரசியல் சார்பு நிலையைக் கை விடுவோம் ! நாம் எல்லோரும் தமிழர்கள் என்ற ஒற்றைத் தளத்தின் மீதாவது இனி  ஒன்று கூடுவோம்.

தமிழ்நாட்டில் வசிப்பவர் அனைவருமே தமிழர்கள் என்ற நிலைப்பாடு தான் இப்போதைய தேவை. நமக்குள் வேற்றுமை பாராட்டுவதைக் கைவிடுவோம். மதமோ, சாதிகளோ நம்மைப் பிரித்து வைக்க அனுமதிக்க வேண்டாம்.

மூதாதையர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற  ஆராய்ச்சி எல்லாம் இப்போது வேண்டாம். வீராவேசப் பேச்சுகளால் பயனில்லை. சிறு குழுக்களின் பின்னால் நம்மை இணைத்துக் கொண்டு அவர்களுக்குப் பரப்புரை செய்வதால் பயன் விளையப் போவதில்லை.

இப்போது விழிக்காவிட்டால், நமக்கு எப்போதும் விடிவே இல்லை என்பதை உணர்வோம் ! அரசியல்  கட்சி அடையாளங்களைத் துறந்து விட்டு, தமிழர்கள் என்ற தளத்தில் ஒன்று கூட  முன்வாருங்கள் ! இதற்குத் தமிழ்ப் பணி மன்றம் ஒரு கருவியாக அமையட்டும்!

இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு, அரசியல் கட்சிகளின் பின்னால் அணிவகுத்து நின்று, தமிழர்களின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கத் துணிந்தால், ஏ ! தமிழா ! இனி உன்னைத் தமிழனென்று  சொல்லாதே ! வீணே தலை நிமிர்ந்தும் நில்லாதே !

-----------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி..2049, சிலை, 21]
(05-01-2019)

---------------------------------------------------------------------------------------------------------
       ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப்பட்ட 
கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------