name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, செப்டம்பர் 07, 2019

சிந்தனை செய் மனமே (15) எண்ணெய்க் கிணறுகளும் காவிரிக் கழிமுகமும் !

சோழ வளநாடு  சோற்றுக்குத்  திண்டாடப் போகிறதா ?


தமிழகத்தின் மொத்த உணவுத் தேவையில் 52 விழுக்காடு பங்களிப்புச் செய்வது, காவிரியின் கழிமுகப் பகுதி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருச்சி, மற்றும் புதுக்கோட்டை. ஆனால் அது இப்போது 42 விழுக்காடாகக் குறைந்து விட்டது.  இதற்குக் காரணம் பருவமழை பொய்ப்பு, காவிரி நீர் உரிய படி கிடைக்காமை, சாகுபடி நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப் பட்டமை ஆகியவையே !

இப்படி நிலவரம் கலவரமாக இருக்கையில், , நெல் விளையும் பூமியைப் பாழாக்கி பாறை எண்ணெயும் (PETROLEUM) எரிவளியும் (FUEL GAS) எடுத்து அந்நியச் செலாவணியை மிச்சப்படுத்தப் பார்க்கிறது மைய அரசு. ஆம் ! இப்பகுதியில் நிலத்துக்கு அடியில் ஏராளமாக எண்ணெய் வளமும் நிலக்கரியும் இருப்பதாகக் கண்டறிந்து அவற்றை எடுக்க மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது இந்திய அரசு !

பருவ காலத்தில் பெய்யும் மழைநீர் நிலத்திற்குள் இறங்கி, பாறை இடுக்குகளிலும், பருமணல் திட்டுகளுக்கு ஊடேயும் மணற் படுகைகளிலும் ஊடுருவி ஏரி போலத் தேங்கி நிற்கும். பெரும்பாலும் இத்தகைய நிலத்தடி நீர்த் தேக்கம், பூமியின் மேற்பரப்பிலிருந்து 10 அடி முதல் 100 அடி வரை ஆழம் வரை அமைந்திருக்கும் !

பருவ காலத்தில் பெய்யும் மழைநீர் அல்லாமல், இந்த  நிலத்தடி நீரையும் சார்ந்தே இப்பகுதியில் உள்ள நீர்நிலைகளான குட்டைகள், குளங்கள், ஏரிகள் ஆகியவை இருக்கின்றன. இந்த நிலத்தடி நீர்த் தேக்கத்திலிருந்து ஊற்றுகள் (UNDER – GROUND WATER FLOW) மூலம் வேளாண் கிணறுகளுக்கும், குடிநீர்க் கிணறுகளுக்கும் நீர் போய்ச் சேருகிறது. மனிதர்கள் குளிப்பதற்கும், கால்நடைகளின் குடிநீர்த் தேவைக்கும், அருகில் இருக்கும் வேளாண் நிலங்களில் பயிர்ச் சாகுபடிக்கும் இவை பெருமளவுக்கு உதவுகின்றன !

சிற்றூர், பேரூர் மற்றும் நகர்ப்புற மக்களுக்கான குடிநீர்த் தேவையை, இந்த நிலத்தடி நீர்த் தேக்கங்கள் தான் நிறைவு செய்கின்றன. திறந்தவளி ஊற்றுகள் (BRICK-LESS OPEN WELLS), திறந்தவெளிக் கிணறுகள் (OPEN TYPE BRICK-BUILT WELLS),  கையியக்க நீரேற்றம் (HAND PUMP), ஆழ்குழாய்க் கிணறுகள் (BORE WELLS) ஆகியவை மூலம் மக்களின் குடிநீர்த் தேவை நிறைவு செய்யப்படுகிறது.  காவிரி நீர் வரத்தில் நிச்சயமற்ற நிலை பல்லாண்டுகளாகத் தொடர்வதால், வேளாண் பணிகளுக்கும் நிலத்தடி நீரையே இப்பகுதி வேளாண் பெருமக்கள் பெரும்பகுதி சார்ந்திருக்கிறார்கள் !

இவ்வாறு இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் நிச்சயமற்ற காவிரி நீரை நம்பி ஓரளவுக்கும்,  நிலத்தடி  நீரைப்  பெருமளவுக்கும்  சார்ந்து இருக்கிறது. ஏறத்தாழ 30 இலட்சம் மக்கள் வாழும் இப்பகுதியில் நீரகக் கரிமப் பொருள்கள் எடுக்கும் திட்டத்தால் (HYDRO - CARBON EXTRACTION PROJECT) முதலில் பாதிக்கப்படப் போவது நிலத்தடி நீர் தான். அஃது எப்படிப் பாழாகும் என்று நீங்கள் கேட்பது புரிகிறது !

நீரகக் கரிமப் பொருள்கள் என்றால் என்ன என்பதை முதலில் பார்ப்போம். வளிம (GAS) நிலையில் இருக்கும் மீத்தேன், ஈத்தேன், புரோப்பேன், பியூட்டேன் ஆகியவையும், நீர்ம (LIQUID) நிலையில் இருக்கும் கன்னெய் (PETROL) டீசல் (DIESEL) பெண்டேன், பென்சீன், ஹெக்சேன் ஆகியவையும் மெழுகு (WAX)  நிலையில் இருக்கும் பாரபின், நாப்தலின் ஆகியவையும் நீரகக் கரிமப் (HYDRO CARBONS) பொருள்களே ! இவையன்றி, பாலி எத்திலீன், பாலி புரோபைலீன், பாலி ஸ்டைரீன், எப்டேன், ஆக்டேன், நோனேன், டெக்கேன் ஆகியவையும் நீரகக் கரிமப் பொருள்களே. பாறை எண்ணெய் (SHALE OIL / PETROLEUM OIL), இயற்கை எரிவளி (NATURAL GAS) ஆகியவையும் நீரகக் கரிமப் பொருள்களே !

நீரகக் கரிமப் பொருள் எடுக்கும் திட்டத்தில் ஈடுபடும் நிறுவனங்கள், கடினமான ஆய்வுகளுக்குப் பிறகே, தாங்கள் ஏலம் எடுத்துள்ள பகுதிகளில் இருப்பது மென்கற்பாறை எண்ணெயா (SHALE OIL), அல்லது வன்கற்பாறை எண்ணெயா (PETROLEUM OIL) என்பதை அறியப் போகின்றன. இப்போதைக்கு இத் திட்டத்திற்குப் பெயர் நீரகக் கரிமப் பொருள் எடுப்புத் திட்டம் (HYDRO CARBON PROJECT) !

மென்கற்பாறை எண்ணெய் (SHALE OIL) எடுக்கும் திட்டமானாலும் சரி, வன்கற் பாறை எண்ணெய் (PETROLEUM OIL) எடுக்கும் திட்டமானாலும் சரி, இரண்டுமே நீரகக் கரிமப் பொருள் (HYDRO CARBON PROJECT) எடுக்கும் திட்டமே. இத்திட்டம் பற்றி, அத்துறையில் கடந்த எட்டு ஆண்டுகளாகப் பணியாற்றும்  பாலமுருகன் தங்கவேலு என்பவர் தெரிவித்துள்ள கருத்தைப் பார்ப்போம் !

---------------------------------------------------------------------------------------------------------
பாலமுருகன் தங்கவேலு என்னும் எண்ணெய் வளத் திட்ட வல்லுநர், காவிரிப் படுகையில் எண்ணெய் எடுப்புத் திட்டம் பற்றி 2017 மார்ச் மாதம் தெரிவித்துள்ள கருத்து வரிமாறு;-
----------------------------------------------------------------------------------------------------------

மென்கற்பாறை எண்ணெய் எடுக்கும் திட்டத்தினால் ஏற்படும் நன்மை தீமைகள் :-

நன்மைகள்:-
(
   நிலத்தடியில் புதைந்து கிடக்கும் மென்கற்பாறை எண்ணெயை (SHALE OIL) எடுக்கலாம். அதைத் தூய்மைப்படுத்தும் முறைகள் மூலம் கன்னெய் (PETROL) டீசல் (DIESEL) ஆகியவை கிடைக்கும். மென்கற்பாறை எண்ணெய் (SHALE OIL) வன்கற்பாறை எண்ணெய் (PETROLEUM OIL) இரண்டுக்கும் உள்ள வேறுபாடு பழுப்பு நிலக்கரிக்கும் கருப்பு நிலக்கரிக்கும் உள்ள வேறுபாடு போன்றது. அவ்வளவு தான் !

  இத்திட்டத்தைச் சரியான முறையில் செயல் படுத்தினால், மீத்தேன் எரி வளியும் (METHANE GAS) எடுக்கலாம்.

தீமைகள்:-
(
  மீத்தேன் எரிவளி எளிதில் தீப்பிடிக்கக் கூடியது. திட்டத்தைச் செயல் படுத்துகையில், மீத்தேன் ஒரே இடத்தில் அடர்த்தியாகக் குவிவதால் சிறிது கவனக் குறைவு ஏற்பட்டாலும் பெரிய வெடிப்புடன் கூடிய தீ விபத்து ஏற்பட்டு, சுற்றுப் பகுதியில் உள்ள அனைத்தையும் அழித்து விடும். மக்கள் உயிருக்குப் பாதுகாப்பு இருக்காது.

இப்பகுதியைச் சுற்றிலும் உள்ள நிலத்தடி நீர்முழுவதும் நஞ்சாகிவிடும். இதன்மூலம் இப்பகுதியில் வேளாண்மை அழிந்து விடும்.

 இருபது ஆண்டுகளுக்குப் பின்பு இப்பகுதி நிலம் எதற்குமே பயன்படாமல் மலட்டுத் தன்மை அடைந்து விடும்.

 இத்திட்டத்தைச்  செயற் படுத்துகையில் மிகப் பெரிய அளவுக்கு வெப்பம் வெளிப்படும். இதனால் மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் மடிந்து போய், நிலம் முழுவதும் பாலை நிலமாக மாறிவிடும்

மென்கற்பாறை எண்ணெய் (SHALE OIL) எடுக்கும் திட்டமானது  அனைத்து நாடுகளின் நடைமுறை விதிகளின் படி, உலகம் முழுதும், மேற்கொள்ளப்படுகிறது. இவ்விதிகள், மக்கள் நெருக்கமாக வசிக்கும் இடங்களில் இத்திட்டத்தைச் செயற்படுத்தக் கூடாது எனவும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிகக் குறைந்த எண்ணிக்கையில் மக்கள் வசிக்கும் இடங்களிலேயே செயற்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கிறது. எடுத்துக் காட்டாக, அமெரிக்கா இத்திட்டத்தை மக்கள் அரிதாகக் காணப்படும் அலாஸ்கா மாநிலத்திலும், உருசிய நாடு, ஆர்டிக் பெருங்கடல் பகுதியிலுமே செயல்படுத்துகிறது.

--------------------------------------------------------------------------------------------------------

இத்திட்டத்தின் விளைவாக நிலத்தடி நீர் நஞ்சாகிப் போவதால் மக்களுக்குக் குடிநீர் கிடைக்காது; குளிப்பதற்கு நீர் கிடைக்காது; வேளாண்மைக்கு நீர் கிடைக்காது; கால்நடைகளுக்குக் குடிப்பதற்குக் கூட நீர் கிடைக்காது. மொத்தத்தில், புல் பூண்டுகளுக்குக் கூட நீர் கிடைக்காமல், பசுமைச் சூழல் மாறி பாலவனம் ஆகப்போகிறது, தமிழ் நாட்டுக்கே சோறு போடும் தஞ்சையும், அதன் பக்கத்து மாவட்டங்களும்.

முப்பது இலட்சம் மக்களின் வாழ்வாதாரத்தைப் பலிகொடுத்துவிட்டு, அந்நியச் செலாவணியில் மிச்சம் பிடிக்கப் பார்க்கிறது மைய அரசு ! கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் என்பது இது தானோ ?

விளையப்போகும் பேரிடர் நம் கண்களுக்கு முன்னால் கனவுக் காட்சிகளாக விரிந்து நிற்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய தமிழக அரசும், அரசியல் இயக்கங்களும் தம் விழிகளை மூடிக்கொண்டு அறிக்கை விட்டுக் கொண்டு அமைதியாகி விடுகின்றன. தமிழன் தன்னிலை மறந்து கூனிக் குறுகிக் கிடக்கிறான் !

ஒற்றுமை இல்லாத தமிழா !  இனிமேல் நீ  தமிழனென்று சொல்லாதே ! வீணாக, தலை நிமிர்ந்தும் நில்லாதே !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 29.]
{12-02-2019}

-------------------------------------------------------------------------------------------------------------
     ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------