name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

சனி, செப்டம்பர் 07, 2019

சிந்தனை செய் மனமே (08) தொலைகாட்சிகளில் பண்பாட்டுச் சிதைவு !

தொலைக் காட்சி நிகழ்ச்சிகளைக் கண்டுப் பொங்கியெழ வேண்டாவா ? 
  

ஒரு நாளில், இருபத்து நான்கு மணி நேரத்தில் நமது  மக்கள் ஏறத் தாழ எட்டு மணி நேரத்தை உறக்கத்தில் கழிக்கின்றனர். எஞ்சியுள்ள பதினாறு மணி நேரத்தில் தொலைக்காட்சி எதிரில் அமர்ந்து நிகழ்ச்சிகளைப் கண்டு கண்ணீர் வடிப்பதிலும், காதைக் கிழிக்கும் இசைகளைக் கேட்டு உள்ளம் களிப்படைவதிலும்,  அன்றாடம் நான்கு மணி நேரமாவது அவர்களுக்குக் கரைந்து போகிறது.

தேசியப் புவியியல் வலையம் [NATIONAL GEOGRAPHIC CHANNEL], புதியன போற்றும் வலையம் [DISCOVERY CHANNEL], விலங்கியல் உலக வலையம் [ANIMAL PLANET]  போன்ற வலையங்கள்  ஒளிபரப்பும்  அறிவியல் சார்ந்த நிகழ்ச்சிகளைப் போல,  தமிழ்நாட்டு வலையங்கள் [CHANNELS] எந்த நிகழ்ச்சியையாவது நடத்துகின்றனவா?

தமிழ் மக்களது சிந்தனையைத்  தூண்டி, அறிவூட்டும் நிகழ்ச்சிகளைக் காண்பித்து, அவர்களது வாழ்க்கை வளம் பெற வழி காட்டுவதற்கு வக்கில்லாத தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி நிறுவனங்கள், கண்ணீர் வடிக்கும் காட்சிகளைத்  தொடர் நாடகங்களாக்கி, மக்களை உணர்ச்சிப் பிழம்பாக்கிக் கட்டிப் போட்டு, தங்களது T.R.P உயர்வைக் காண்பித்து விளம்பர வருவாயைப் பலமடங்கு உயர்த்திக் கொள்கின்றனர்.   

பழி வாங்கும் நாடகங்களைத் தொடர்ந்து  காண்பித்து, மக்கள் மனதில் விலங்கியல் உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றனர். செவிப்பறையைக் கிழிக்குமளவு உரத்த ஒலியெழுப்பும் இசைக்கருவிகளைச் சுண்டிவிட்டு மெல்லிசை நிகழ்ச்சிகளை எல்லாம் வல்லிசை வலிப்பாக மாற்றி மகிழ்கின்றனர்.

ஐந்து வயதுக் குழந்தையை அரங்கத்தில் ஏற்றிநேற்று ராத்திரி யம்மா !” என்று பாட வைக்கும் அவலம் இங்குதான் நடைபெறுகிறது. ஏழு வயதுப் பெண் குழந்தையையும், எட்டு வயது ஆண் குழந்தையையும் மேடையில் ஏற்றிக் காதலர்களாக்கி அருவருக்கத் தக்க அங்க அசைவுகளுடன் ஆடிப் பாட வைக்கும் பண்பாடற்ற செயல்  நமது தொலைக் காட்சி நிறுவனங்களுக்கு நித்தமும்  வாடிக்கை ஆகிப்போய்விட்டது.

குழந்தைகளைப் பிஞ்சு வயதிலேயே பழுக்கச் செய்யும் வகையில் நிகழ்ச்சிகளை அமைத்து , அவர்களது எதிர்கால வாழ்க்கையைச் சீரழித்து  தங்களது பணப்பெட்டிகளை நிரப்பிக் கொள்ளும் தொலைக் காட்சி முதலாளிகளுக்கு இருக்கும் பண வெறியை நமது மக்கள் இன்னும் புரிந்து கொள்ள வில்லை.

இன்றைய தமிழ் மக்கள் தொலைகாட்சிப் பெட்டிகளின் முன் தவமாய்த் தவமிருக்கிறார்கள் ! மழலை மாறாக் குழந்தைகளின் காதல் பாட்டுகளைக் கேட்டுக் கைகொட்டிச்  சிரிக்கிறார்கள் ! இதையெல்லாம் காணும் போது தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! என்று தோளுயர்த்திச் சொல்ல முடியுமா ?

அதனால்தான் சொல்கிறேன், தமிழகத்து மானிடனே ! நீ தமிழனென்று சொல்லாதே ! இனி தலை நிமிர்ந்து நில்லாதே !

---------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{05-12-2018}

----------------------------------------------------------------------------------------------------------
     ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
---------------------------------------------------------------------------------------------------------