’வாலம்’ என்றால் என்ன ? தெரியவில்லையா ?
பாலையன் என்ற பெயரை பால + ஐயன் என்று பிரிக்கலாம். பால என்ற சொல் வால என்ற சொல்லின் திரிபு. தமிழில் வால் - வாலம் என்றால் இளமை, என்று பொருள்.
இளமைக் கருத்தைக் குறிக்கும் வால் என்னும் சொல்லின் அடிப்படையில் வாலை [இளம்பெண்], வாலிசை [இளம்பெண்], வாலாம்பாள் [இளம்பெண்], வாலவயது [இளவயது], வாலலீலை [இளமை விளையாட்டு], வாலாதித்தன் [இளஞ்சூரியன்], வாலகன் [ இளைஞன் ], வாலச்சந்திரன் [இளம்பிறை], வாலன் [இளைஞன்] மற்றும் இதுபோன்ற பல சொற்கள் தோன்றியுள்ளன.
தமிழ்ச்
சொற்களில் இடம்பெறும் ”வ”கரம்
( வ ) வடமொழியில் பகரமாகத் திரியும். எடுத்துக்காட்டு:-
வாலாம்பாள் = பாலாம்பாள்; வாலன் = பாலன்; வாலகிருஷ்ணன்
= பாலகிருஷ்ணன்; வாலசுந்தரம் = பாலசுந்தரம்; வாலசந்தர் = பாலசந்தர்;
வாலரமணி = பாலரமணி; வாலபருவம் = பாலபருவம்; வாலிவன் = வாலிபன்;
கவடம் = கபடம்; கவடி
= கபடி (சடுகுடு ஆட்டம்).
வால் + ஐயன் = வாலையன் என்ற பெயர் வடமொழித் தாக்கத்தால் திரிந்து பாலையன் என்று வழங்கப்படுகிறது. வால் என்பதற்கு இளமை; தூய்மை; தோகை; மிகுதி; வெண்மை; நன்மை; பெருமை; நீண்மை (நீளம்) என்று பொருள். ஐயன் என்பதற்கு அரசன்; அரிகரபுத்திரன்; அருகன்; அழகன்; ஆசிரியன், உயர்ந்தோன்; இறைவன்; சிவன்; தமையன்; தலைவன்; மூத்தவன் எனப் பல பொருள்கள் உள்ளன.
பாலையன் = வாலையன் = வால் + ஐயன் = இளமை + அரசன் = இளவரசன் என்று பொருள். பாலையன் அல்லது பாலையா என்றால் இளவரசு என்று பொருளாகும். வாலம் = பாலம் = இளமை என்ற பொருள் அடிப்படையில் தோன்றும் சில பெயர்களைப் பார்ப்போமா !
---------------------------------------------------------------------------------------------------
· பாலையன்..................................= இளவரசன்
· பாலையா....................................= இளவரசு
· பாலசந்திரன்..............................= இளம்பிறை
· பாலசந்தர்....................................= இளமதி
· பாலன்..........................................=
இளவழகன்
· பாலசுப்பிரமணியன்...............= இளமுருகு
· பாலாம்பாள்................................= இளவழகி
· பாலமுருகன்.................................= இளமுருகு
· பாலகிருஷ்ணன்.........................= இளங்கண்ணன்
· பாலகோபால்...............................= இளமாலன்
· பாலதண்டாயுதம்.......................= இளமுருகு
·
பாலசரசுவதி................................= பூவழகி
·
பாலரமணி.(ரமணி=அழகு)....= இளவழகன்
·
பாலசுந்தரி...................................= இளவழகி
·
பாலாமணி (மணி.=.சூரியன்)..= இளங்கதிர்
· பாலசுந்தரம்.................................=
இளவழகன்
----------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை,
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{20-08-2018}
----------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------
.