புதிய சொற்களைப் படைப்போம்; புழக்கத்திலும் விடுவோம் !
[அரசு, கதிர் இருவரும் தெரு முனையில் சந்தித்து உரையாடுகிறார்கள் !]
அரசு :கதிர் ! கடைத் தெருவுக்கு நீ செல்லும் போது எனக்குச் சில பொருள்களை வாங்கி வந்து தருவாயா ? எனது பேடுருளியை (MOPED) வேண்டுமானால் எடுத்து செல் !
கதிர் :சரி அரசு ! எனக்கும் சிலபொருள்கள் வாங்க வேண்டும். உருளியில் (CYCLE) சென்று வரலாம் என்று எண்ணினேன். நீயோ பேடுருளி (MOPED) தருகிறேன் என்கிறாய். நல்லது ! என்ன வாங்கிவர வேண்டும் ?
அரசு :சிந்தால் வழலை (CINTHOL SOAP) இரண்டு, காதி சவர்க்காரம் (WASHING SOAP) ஒரு சட்டம் (BAR), குறுங்குழல் விளக்கு (CFL – Compact
Fluorescent Lamp ) 15 வாட்சு ஒன்று ஆகியவை வேண்டும் !
கதிர் :சரி அரசு வாங்கி வருகிறேன். பேடுருளியுடன் (MOPED) தலைச் சீராவையும் (HELMET) கொடு. கன்னெய் (PETROL) போதுமான அளவு இருக்கிறதா ?
அரசு :நேற்று தான் உருபா 100 –க்கு கன்னெய் (PETROL) நிரப்பினேன். கவலையில்லாமல் நீ போகலாம். சரி உனது உடைப் பெட்டி (SUIT CASE) இரண்டு நாள்களுக்குத் தேவைப்படுகிறது. தரமுடியுமா ?
கதிர் :நிச்சயம் தருகிறேன். உடைப் பெட்டி (SUIT CASE) வேண்டுமா ? அல்லது கைப் பேழை (BRIEF CASE) போதுமா ?
அரசு :சென்னக்குச் செல்கிறேன். ஆடைகள் சில எடுத்துச் செல்ல வேண்டும். ஆகையால் உடைப் பெட்டி (SUIT CASE) தான் தே\வை !
கதிர் :அப்படியா ? சென்னை செல்கிறாயா ? இருப்பூர்தியிலா (TRAIN)
? பேருந்திலா (BUS)?
அரசு :இருப்பூர்தியில் தான் செல்கிறேன். முந்துறு முன்பதிவு (TATKAL RESERVATION) செய்திருக்கிறேன். எஸ்.2. பெட்டியில் 17-ஆம் பாயல் (BERTH) கிடைத்திருக்கிறது !
கதிர் :உனது பயணம் இனிதாகட்டும் ! வாழ்த்துகள் ! ஆமாம் ! தமிழில் அறிமுகப்படுத்தப்படும் புதுச்சொற்களை (அடைப்புக் குறிக்குள் ஆங்கிலச் சொல்லுடன்) அவ்வப்போது நாமும் புழக்கத்தில் விடுவோம் என்று உனது கல்லூரி நண்பர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாயே, உனது திட்ட முன்னேற்றம் எந்த அளவில் இருக்கிறது ?
அரசு :தொடங்கி இருக்கிறோம் ! விரைவில் அனைத்து நண்பர்களும் உதவிக்கு வருவார்கள் என்று எதிர் பார்க்கிறேன். முன்னேற்றம் காண்பிப்போம் !
கதிர் : சரி அரசு ! வீட்டிற்குச் சென்று உடைப் பெட்டியை (SUIT CASE)க் கொண்டு வருகிறேன் !
அரசு : சரி ! சென்று வா கதிர் !!
---------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.அ:2049,சிலை,27.]
{11-01-2019}
----------------------------------------------------------------------------------------------------------
“தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
கட்டுரை !
----------------------------------------------------------------------------------------------------------