name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், செப்டம்பர் 05, 2019

சிந்தனை செய் மனமே (07) புதிய கல்விக் கொள்கை - ஓர் அலசல் !

வஞ்சக நோக்குடைய சூழ்ச்சி வலை !


இந்தி  மொழி பேசாத மாநிலங்களில் 6 -  ஆம் வகுப்பிலிருந்து இந்தி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக நடுவணரசு அறிவித்துள்ளது.  இதன்படி 6 -  ஆம் வகுப்பிலிருந்து இந்தியைக் கட்டாயமாகப் படிக்க வேண்டியதில்லை; எனினும் மூன்றாவதாக ஒரு மொழியைப் படிப்பது  கட்டாயம் என்னும் அம்சம் நீக்கப்படவில்லை.

கல்வி தொடர்பான கொள்கைகளை வறையறுத்தல் கல்வியாளர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப் பட்டிருக்க வேண்டும். விண்வெளி அறிவியலாளரான கத்தூரிரங்கனிடம் இந்தப்பணியை ஒப்படைத்ததே தவறு. அப்பணியை அவர் ஏற்றுக் கொண்டதும் தவறு. அவரது குழுவினரின் அறிக்கை தவறுகளை மட்டுமே உள்ளடக்கிய தவறான அறிக்கை !

கத்தூரிரங்கன் குழுவினர் எத்தனை பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தினர் ? பள்ளிகளில் நிலவும் சூழ்நிலை பற்றி அவர்கள் ஆய்வு செய்தனரா ? எழுதுவதற்குக் கரும்பலகை இல்லாத பள்ளிகளும், அமர்வதற்கு இருக்கைகள் இல்லாத பள்ளிகளும், ஒதுங்குவதற்குக் கழிப்பறை இல்லாத பள்ளிகளும், கூட்டிப் பெருக்கத் துப்புரவுப் பணியாளர் இல்லாத பள்ளிகளும், சொல்லித் தருவதற்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளும் பல்லாயிரக் கணக்கில் மலிந்து கிடக்கும் இந்நாட்டில் இந்தி மொழியை மாணவர்களின் புத்திக்குள் புகுத்த நினைக்கும் இந்த அறிவாளிகளின் கல்விக் கொள்கை முட்டாள்தனத்தின் முகடாக அல்லவா இருக்கிறது !

படித்து விட்டுப் பணி தேடி அலைந்து களைத்து சோர்ந்து விழுந்து கிடக்கும்   கோடிக் கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருதல் பற்றிச் சிந்திக்க வேண்டிய  நடுவணரசு அதைக் கிடப்பில் போட்டு விட்டு இந்திக்கு மகுடம் சூட்ட முனைந்திருப்பது முட்டாள்தனமான முயற்சியன்றி வேறென்ன  ?

தமிழக மாணவர்கள் இந்தி படித்து விட்டால், அவர்களுக்கு உத்தரப் பிரதேசம், பீகார், இமாச்சலப் பிரதேசம், இராசத்தான், மத்தியப் பிரதேச மாநிலங்களில் வேலை கிடைக்கிறதா என்ன ? ஆம் என்றால், தமிழ்நாட்டிற்கு இம் மாநிலத்தவர்கள் ஏன் வந்து குவிகின்றனர் ?

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமல்ல என்றால், அப்புறம் ஏன் மூன்றாவது மொழியொன்றைப் படிக்கச் சொல்கிறார்கள் ? கட்டாயமல்ல என்று சொல்லிவிட்டு, இந்தியைக் கட்டாயமாகத் திணிக்கும் ஏமாற்று வேலையல்லவா இது ?

சரி ! 6 - ஆம் வகுப்பில் இந்தி கட்டாயமல்ல ! ஆனால் மூன்றாவது மொழியொன்றைப்  படிக்க வேண்டும் ! இந்தியை எதிர்ப்போரை அமைதிப்படுத்தும்  நயப்பா இந்த அறிவிப்பு ? இல்லை ! வஞ்சக நோக்குடைய சூழ்ச்சி வலை !  ஒரு பள்ளியில் 6 ஆம் வகுப்பில் 50 மாணவர்கள் இருக்கின்றனர். இவர்களில் 10 பேர் வங்காள மொழி  கற்க விரும்புகின்றனர். இன்னொரு 10 பேர் ஒரிய மொழி கற்க விரும்புகின்றனர். அடுத்து ஒரு 10 பேர் மலையாளம் கற்க விரும்புகின்றனார்.

இன்னொரு 10 பேர் கன்னடம் கற்க விரும்புகின்றனர். எஞ்சிய 10 பேர் தெலுங்கு கற்க விரும்புகின்றனர். இந்த 50 பேருக்காக வங்காளம், ஒரியா, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழி ஆசிரியர்களைத் தமிழக அரசு அமர்வு செய்யப் போகிறதா ? ஒரு பள்ளியில் மட்டும் 5 வெவ்வேறு மொழியாசிரியர்களை அமர்வு செய்தால் ஆயிரக் கணக்கான பள்ளிகளில் எத்தனை பிறமொழி ஆசிரியர்களைத் தமிழக அரசு அமர்த்தப் போகிறது. இதற்கு தமிழக அரசின் நிதி நிலைமை இடம் தருமா ?

இறுதியில் என்னவாகும் ? ஒரு பள்ளியில் ஒரு இந்தி ஆசிரியரை மட்டும் அமர்வு செய்துவிட்டு, 6 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் இந்தியைத் தேர்வு செய்து படியுங்கள் என்று அன்பாகக் கட்டாயப்படுத்தப் படுவார்கள். இந்தி கட்டாயமல்லாத மாநிலங்களில் மறைமுகமாக இந்தி கட்டாயமாகத் திணிக்கப்படும்.

இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமல்ல, ஆனால் விரும்புகிற வேறொரு மொழியைப் படிக்க வேண்டும் என்னும் அறிவிப்பு இந்திக்கு வழக்குரைஞர்  ஆகி வால் பிடிக்கும் சுரணை கெட்டதளைவர்கள்  நீங்கலாக ஏனைய தமிழர்களை முட்டாளாக்கும் செயலல்லவா ?

முதுகெலும்பு ஒடிந்து கிடக்கும் ஆட்சியாளர்கள் இப்போதாவது நெஞ்சை நிமிர்த்தி இந்தியை எமது பள்ளிகளில் நுழையவிடமாட்டோம் என்று அறிவித்துச் சொல்லிலும் செயலிலும் மெய்ப்பித்துக் காட்டவேண்டும்; இல்லையேல் தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு “1965” நிகழ்வதைத் தடுக்க முடியாது !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.:2050,விடை,21]
{04-06-2019}

------------------------------------------------------------------------------------------------------------

         ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
------------------------------------------------------------------------------------------------------------