name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

வியாழன், செப்டம்பர் 05, 2019

சிந்தனை செய் மனமே (05) ஆகமம் ! ஐதீகம் ! அத்துணையும் ஏமாற்று வேலை !

சூத்திர மக்களை பிராமணர்கள் இன்னும் அடிமைப்படுத்தி வைத்துள்ளனர் !


நமது நாட்டில் மக்களைப் பிறப்பால் நான்கு வகையாகப் பாகுபடுத்தி வைக்கும் வழக்கம் வடக்கிலிருந்து வந்தவர்களால் ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்டது. பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்  எனவும் அவற்றுக்குப் பெயர் சூட்டப்பட்டது !

பிராமணர் என்போர், அரசகுருவாகவும், கோயில் பூசகராகவும், சடங்குகள் செய்விப்பராகவும், எளியவழியில் பொருளீட்டி உண்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொண்டனர்.  இறைவன் ஒருவனே என்னும் மெய்ப்பொருள் வழி வாழ்க்கை நடத்தி வந்த மக்களிடம், பல கதைகளைப் புராணங்கள், இதிகாசங்கள் என்னும் பெயரில் புகுத்தினர். ஒரே கடவுள் என்னும் கோட்பாடு சிதைக்கப்பட்டு, பற்பல கடவுள்களை உருவாக்கி, அவர்கட்குக் கோவில்களையும் கட்டுவிக்கச் செய்தனர் !

கோவில்களும், அங்கு பூசை செய்யும் பிராமணரும் மன்பதையில் வலிமையுடன் நிலைபெற்று நீடிப்பதற்கு வசதியாக ஆகமங்கள் என்ற பெயரில் நூல்களை எழுதி வைத்தனர்.  ஆகமங்களில் இடம்பெறாத சில சடங்குகளை ஐதீகம் என்ற பெயரில் மக்களிடையே எழுதப்படாத சட்டமாக்கிக் கொண்டனர் !

பலநூறு ஆண்டுகள் சென்ற பின்பும் ஆகமங்கள், ஐதீகங்கள் என்று சொல்லியே சத்திரிய, வைஸ்ய, சூத்திர மக்களை பிராமணர்கள் இன்னும் அடிமைப்படுத்தி வைத்துள்ளனர் !

இறைவன் ஒருவனே என்னும் போது, அவனுக்கு எதற்கு பல்வேறு வடிவங்கள், பல்வேறு பெயர்கள், பல்வேறு பிறப்புக் கதைகள், பல்வேறு வழிபாட்டு முறைகள் ? எல்லா மக்களும் இறைவனின் குழந்தைகள் என்கையில் அவர்களுக்கு எதற்கு நால்வகை வகைப்பாடுகள் ? இதைப்பற்றி எந்த மனிதனையும் சிந்திக்க விடாதபடி அச்சம் தரும் கதைகளைப் புனைந்து  கதைகளாக்கி வைத்திருப்பதும் பய உணர்விலேயே மக்களை ஆழ்த்தி வைத்திருப்பதும் என்ன வகை ஆன்மிகமோ தெரியவில்லை !

ஒரு கோவிலில் பெண்கள் நுழைய உரிமை இல்லை. இன்னொரு கோயிலில் ஆண்கள் சட்டை அணிந்து செல்ல உரிமை இல்லை. இறைவனா இந்தப் பாகுபாட்டை ஏற்படுத்தியது ? யாராவது இதைபற்றி ஐயம் எழுப்பினால் ஆகமம், ஐதீகம் என்று சொல்லி வாயடைத்து விடுகின்றனர் !

ஒரு கோயிலில் 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட பெண்கள் சென்று இறைவனை வழிபட ஐதீகம் என்ற பெயரில் தடை. இச்சிக்கல் நீதிமன்ற வழக்காகி உச்சி நீதிமன்றம் வரை சென்றது. ஐந்து நீதிபதிகள் குழு வழக்கை ஆய்வு செய்துஇறைவன் முன்பு ஆண், பெண் என்ற பாகுபாடு கூடாது; அனைத்துப் பெண்களும் ஆலயத்திற்குள் சென்று ஆண்டவனை வழிபடலாம்என்று தீர்ப்புக் கூறியது !

உச்ச நீதி மன்றத் தீர்ப்பை ஏற்கமாட்டோம் என்கிறது இப்போது இந்தியாவை ஆள்கின்ற கட்சி. நாங்களும் ஏற்க மாட்டோம் என்கிறது ஆண்ட கட்சி !

நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்படமாட்டோம்; பெண்களை ஆலயத்துக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம்என்று இப்போது இந்திய அரசாட்சியை ஏற்றிருக்கும் கட்சி, வெளிப்படையாக அறிவித்து, போராட்டமும் நடத்துகிறது. நீதிமன்றத் தீர்ப்புக்குக் களங்கம் விளைவிக்கும் கட்சியை யார் தண்டிப்பது ? எளிய நிலை மக்கள் நீதிமன்றத் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும்; ஆனால் ஆட்சியில் இருப்போர் கட்டுப்படமாட்டார்கள் ! என்ன ஞாயமிது ?

உச்ச நீதி மன்றத் தீர்ப்பை மதிக்க மாட்டோம் என்று சொல்பவர்கள் யார் ? இந்த நாட்டில் ஆகமம், ஐதீகம் என்ற பெயர்களில் எழுதப்படாத சட்டங்களை உருவாக்கி வைத்துக் கொண்டு சத்திரியர், வைசியர், சூத்திரர் அனைவரையும் அடிமைப்படுத்தி வைத்திருந்த அதே வகுப்பினர்தான் இன்றும் தாங்கள் ஆட்டத்தைக் காண்பிக்கிறார்கள் . இந்த மாய வலையிலிருந்து சத்திரிய, வைசிய, சூத்திர மக்கள் விடுபடுவது எப்போது ?

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம்,28.]
{11-02-2019}

-----------------------------------------------------------------------------------------------------------
       “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------