name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், செப்டம்பர் 04, 2019

ஐந்திறம் (03) நாண்மீன்களின் தமிழ்ப் பெயரும் வடிவமும் !

ஒவ்வொரு விண்மீன் கூட்டமும் எந்த வடிவில் இருக்கிறது ?


 அசுவதி.....................= புரவி (அசுவதி நாள்)
 பரணி.......................= அடுப்பு (பரணி நாள்) 
  கார்த்திகை............= ஆரல் (கார்த்திகை நாள்)
  ரோகிணி................= சகடு  (ரோகிணி நாள்)
  மிருகசீரிடபம்.......= மான்றலை (மிருகசீரிடப நாள்)
  திருவாதிரை.........= மூதிரை (திருவாதிரை நாள்)
  புனர்பூசம்..............= கழை (புனர்பூச நாள்)
  பூசம்.........................= காற்குளம் (பூச நாள்)
  ஆயில்யம்..............= கட்செவி (ஆயில்ய நாள்)
  மகம்..........................= கொடுநுகம் (மகநாள்)
  பூரம்..........................= கணை (பூரம் நாள்))
  உத்தரம்...................= உத்தரம் (உத்தர நாள்)
  அஸ்தம்....................= கை (அத்த நாள்)
  சித்திரை..................= அறுவை (சித்திரை நாள்)
  சுவாதி......................= விளக்கு (சுவாதி நாள்)
  விசாகம்...................= முறம் (விசாக நாள்)
  அனுஷம்..................= பனை (அனுட நாள்)
  கேட்டை...................= துளங்கொளி (கேட்டை நாள்)
  மூலம்........................= குருகு (மூலநாள்)
  பூராடம்....................= உடைகுளம் (பூராட நாள்)
  உத்தராடம்.............= கடைக்குளம் (உத்தராடம் நாள்)
  திருவோணம்.........= முக்கோல் (திருவோண நாள்)
  அவிட்டம்.................= காக்கை (அவிட்ட நாள்)
  சதயம்.......................= செக்கு (சதயநாள்)
  பூரட்டாதி.................= நாழி (பூரட்டாதி நாள்)
  உத்தரட்டாதி..........= முரசு (உத்தரட்டாதி நாள்)
  ரேவதி........................= தோணி (இரேவதி நாள்

-------------------------------------------------------------

விண்ணில் இருக்கும் மீன்களை நாம் எப்படி அடையாளம் காண்பது ?  

அசுவதி. பரணி எனப் பெயரிடப் பட்டுள்ள மீன்களுள்,  ஒருசில மட்டுமே ஒற்றை மீன்கள்; ஏனையவை ஒன்றுக்கு மேற்பட்ட மீன்கள் அடங்கிய கூட்டங்கள். எடுத்துக் காட்டாக அசுவதி என்பது 6 மீன்கள் கொண்ட கூட்டத்தின் பெயர். இவை ஆறும்  சேர்ந்த உருவம், குதிரைத் தலை வடிவத்தில் இருக்கும். வடிவத்தை வைத்து இதற்கு வடமொழியில் “அஸ்வம்” என்று பெயரிட்டனர். நாம் “அசுவதி” ”அசுவினி”, “அசுபதி” என்றெல்லாம் நம் விருப்பம் போல்  சொல்கிறோம். தமிழில் “புரவி” என்று பெயர் !  “புரவி” என்றால் “குதிரை” என்று பொருள் !

பரணி என்பது மூன்று மீன்கள் கொண்ட கூட்டம். இம்மூன்றும் அடுப்புக் கொண்டை வடிவத்தில்  அருகருகே அமைந்துள்ளன. வடமொழியில் இதை “பரணி” என்கின்றனர். தமிழில் “அடுப்பு” என்று பெயர். பூமியிலிருந்து இரவு நேரத்தில் வானத்தைப் பார்த்தால். தமிழில் உள்ள “ஃ” எழுத்தைப் போல, விறகு அடுப்பின் கொண்டை போலக் காணப்படும் மூன்று மீன்களுக்கு நம் முன்னோர் “அடுப்பு” எனப் பெயரிட்டுள்ளனர்.

கார்த்திகை என்பது பல மீன்கள் கொண்ட கூட்டம். நெருப்பு கொட்டிக் கிடப்பது போன்ற வடிவத்தில் இவை விண்ணில் அமைந்துள்ளதால், இக்கூட்டத்திற்கு நம் முன்னோர் “ஆரல்” என்று பெயரிட்டுள்ளனர். ஆரல் என்றால் “நெருப்பு” என்று பொருள்.

ஒவ்வொரு விண்மீனுக்கும் இவ்வாறே அவற்றின் உருவத்தை வைத்துப் பெயர் இடப்பட்டுள்ளன.  தமிழ்ப் பெயர்களை மறந்து விட்டு, வடமொழிப் பெயர்களை மட்டும் நினைவிற் கொண்டிருக்கிறோம் !

இரவு நேர வானத்தின் வெவ்வேறு பகுதிகளை எவ்வாறு அடையாளம் காண்பது  என்பதைச் சிந்தித்த நம் முன்னோர்,  விண்மீன்கள் இடம் பெயராமல் நிலையாக ஒரே இடத்தில் இருக்கின்றன  என்பதை  முதலில் அறிந்தனர்.  அடுத்து ஒருசில மீன்களைக் கற்பனையாக இணைத்துப் பார்க்கையில் அதில் ஒரு உருவம் அடங்கி இருப்பதைக் கண்டனர் !

இவ்வாறு 27 விண்மீன்களுக்கும் வெவ்வேறு உருவங்களைக் கண்டறிந்து  அவற்றுக்கு  ஏற்றாற்போல் பெயர்களையும்  இட்டனர் !
 
இரவு நேரத்தில் வானத்தில் காணப்படும் மீன்கள் மெல்ல மெல்ல மேற்கு நோக்கி  இடம்பெயர்வது போல நமக்குத் தோன்றும். உண்மையில் மீன்கள் இடம்பெயர்வதில்லை.  பூமி மேற்கிலிருந்து கிழக்காகச் சுழல்கிறது என்பதை பள்ளிப்பாடங்களில் படித்திருக்கிறோம். இந்தச் சுழற்சியின் காரணமாகத்தான், மீன்கள்  மெல்ல மெல்ல மேற்கு நோக்கி இடம்பெயர்வது போல்  நமக்குத் தோன்றுகிறது !


தமிழர்கள் தமிழ்ப் பெயர்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவோம். வடமொழிப் பெயர்களை மறப்போம் !


----------------------------------------------------------------------------------------------------------

ஐயமிருப்போர், கழகத் தமிழ்தமிழ் அகராதி, சூடாமணி நிகண்டு ஆகியவற்றை ஆய்வு செய்து தெளிவு பெறுக !

----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2050, சுறவம், 3.]
(17-01-2019)

----------------------------------------------------------------------------------------------------------
     
 “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------