தமிழா ! திரையுலக மின்மினிகளின் பின் அணி வகுப்பது ஏன் ?
தமிழனென்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா ! என்று நமக்கு உணர்ச்சியூட்டப் பார்த்தார் ஒரு தமிழ்க் கவிஞர். இந்த அறைகூவலால் நாம் விழித்துக் கொள்வோமா என்ன !
விலங்குகளுக்குச் சிந்தனைத் திறன் கிடையாது. மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான தனிச் சிறப்பு அது. ஆனால் இன்று எத்துணைத் தமிழர்களிடம் சிந்திக்கும் பண்பு இருக்கிறது ? சற்று ஆய்வு செய்வோமா !
ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒரு முன்னணி நடிகருக்கு ஏறத்தாழ மூன்று மாதங்கள் ஆகின்றன. அதற்கு அவர் பெறும் ஊதியம் 60 கோடி உருபா. இதைப் பகுத்துப் பார்த்தால் அவரது ஒரு நாள் ஊதியம் 66 இலட்சத்து, 66 ஆயிரத்து, 666 உருபா ஆகிறது. அவரது ஒரு நாள் வருமானம் முழுமையாகப் பார்த்தால் 67 இலட்சம் உருபா. அவரது படத்தைத் திரையரங்கிற்குச் சென்று பார்ப்பதால் தனக்குக் கிடைக்கும் வருமானம் என்ன என்று எந்தத் தமிழனாவது சிந்திக்கிறானா ? கைக்காசைப் போட்டல்லவா நுழைவுச் சீட்டு வாங்கித் திரைப்படம் பார்க்கிறான் ! யாரோ ஒரு நடிகர் கோடிகளைக் குவிக்க, தான் ஏதோவொரு வேலைக்குச் சென்று ஒரு நாள் வருமானமாகக் ஈட்டும் சொற்பத் தொகையையும் இழந்து, சேமிப்பாக வைத்திருந்த கைக்காசையும் இழந்து நான் ஏன் அவரது திரைப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று எந்தத் தமிழனாவது சிந்திக்கிறானா ? இல்லையே !
அரசியலில் பெரிய கட்சி, சிறிய கட்சி, பெயரளவுக் கட்சி, என்று தமிழக அரசியல் களத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. திரைப்பட நடிகர்களும் புதிய கட்சி தொடங்கி, அல்லது தொடங்கப் போவதாகச் சொல்லி திடீர்த் தலைவர்களாகி வருகிறார்கள். இந்தக் கட்சிகளின் தலைவர்களாக உள்ளவர்களின் நோக்கம் தான் என்ன ? தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும், வந்தபின் பதவியினால் கிடைக்கும் ஆதாயங்களை அனுபவிக்க வேண்டும் என்பதன்றி வேறென்ன ? யாரோ ஒருவர் முதலமைச்சராக வந்து கோடிகளைக் குவிப்பதற்கு நாம் ஏன் அந்தக் கட்சிகளுக்காக உழைக்க வேண்டும் என்று எந்தத் தமிழனாவது சிந்திக்கிறானா ? இல்லையே !
சிந்திக்கத் தெரியாத தமிழனைப் பார்த்து தமிழனென்று சொல்லடா ! தலைநிமிர்ந்து நில்லடா ! என்று சொல்வது தவறல்லவா ? அதனால்தான் சொல்கிறேன், தமிழனென்று சொல்லாதே ! தலைநிமிர்ந்து நில்லாதே !
-------------------------------------------------------------------------------------------------------
ஆக்கம்
+ இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{02-12-2018}
--------------------------------------------------------------------------------------------------------
”தமிழ்ப் பணி மன்றத்தில் வெளியிடப் பெற்ற கட்டுரை
!
---------------------------------------------------------------------------------------------------------