name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

புதன், செப்டம்பர் 04, 2019

பெயர் விளக்கம் (03) கலியமூர்த்தி - பெயரின் பொருள் என்ன ?

உங்கள் பெயர் “கலியமூர்த்தி”யா ?  இந்தப் பெயருக்குப்  பொருள் தெரியுமா ?

   

தமிழில் கலி என்பதற்கு அம்பு, ஒலி, கடல், கேடுசனிசிறுமை, போர், வஞ்சகம், வலி, வறுமை, செருக்கு, எனப் பல பொருள்கள் உள்ளன. ஆர்கலி என்றால் ஆர்ப்பரிக்கும் கடல் என்று பொருள் !


திருப்பாற்கடலில் திருமால் பாம்புப் படுக்கை மீது  துயில்  கொள்ளும் நிகழ்வு பற்றி அறிந்திருப்பீர்கள். கடலில் உறைபவன் என்னும் பொருளில்தான் திருமாலுக்கு கடல்வாணன் என்றொரு பெயருமுண்டு. இதே காரணம் பற்றித்தான் கலியில் ( கடலில் ) உறைபவன் என்ற அடிப்படையில் திருமாலைக் கலியன் என்று அழைக்கலாயினர் !

கலியன் அல்லது கலியமூர்த்தி என்று பெயர் சூட்டப் பெற்று இருப்பவர்களில் எத்துணை பேருக்குத் தங்கள் பெயருக்குப் பொருள் புரிந்திருக்கும் என்று சொல்ல இயலாது. ஒவ்வொரு மனிதனும் தங்களது பெயரின் பொருள் என்ன என்பதைப் புரிந்து வைத்திருப்பது நலம் !

கலி - கலியன் என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றி வழக்கில் இருந்துவரும் பெயர்களையும், அப்பெயர்களை புதுமைப் படுத்திக் கொண்டால் எத்தகைய பெயராக அமையலாம் என்பதற்கான பரிந்துரையும் தரப்படுகிறது !


--------------------------------------------------------------------------

               கலியன்..................  =  கடல்வாணன்
               கலியமூர்த்தி.......  =  அலைவாணன்
               கலியபெருமாள்.  =  ஆழியமுதன்
               கலியராஜ் .............. =  கடலரசு

-------------------------------------------------------------------------


கலி எனப்படும் கடலில்  இருவகை அலைகளைக் காணலாம்.  ஆழ்கடலில் அலை மென்மையாக எழுந்து பரவும். கரையோரமாக வரும் அலை சீறலுடன் உயர்ந்து சுருண்டு விழும். தமிழில் “திரை” என்னும் சொல், பிற பொருள்களுடன் அலையையும் குறிக்கும். மென்மையாக எழுந்து பரவும் அலையை “இளந்திரை” என்று சொல்லலாம். திருமால்  கடலில் அரவணை மீது துயில்கொள்ளும் இடமும் “இளந்திரை” உள்ள இடம் தானே ! “இளந்திரை” உள்ள கடலில் அரவணை மீது துயில் கொள்ளும் திருமால் “இளந்திரையன்” அல்லவோ ?  “இளந்திரையன்” என்னும் பெயரின் காரணம் இப்போது உங்களுக்குப் புரிகிறதா ?

---------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
{12-11-2018}
---------------------------------------------------------------------------
     ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை !
---------------------------------------------------------------------------