name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (15) எல்லே ! இளங்கிளியே !

 எல்லே (HELLO) ! இளங்கிளியே ! நப்பின்னை ! 


எல்லே !  இளங்கிளியே !  இன்னம்  உறங்குதியோ !
.........சில்லென்று  அழையேன்மின்  நங்கையீர்  போதருகின்றேன் !
வல்லை உன்  கட்டுரைகள்  பண்டே உன்  வாய் அறிதும்,
.........வல்லீர்கள்  நீங்களே  நானேதான்  ஆயிடுக !
ஒல்லைநீ  போதாய் !  உனக்கென்ன வேறுடையை
.........எல்லாரும் போந்தாரோ  போந்தார் போந்து எண்ணிக்கொள் !
வல்லானை, கொன்றானை  மாற்றாரை  மாற்றழிக்க
.........வல்லானை, மாயனைப்  பாடு ஏல் ஓர்  எம்பாவாய் !

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
-----------------
அடி பெண்ணே ! எல்லே ! இளங்கிளியே ! இன்னுமா உறங்குகிறாய் ! “ என்று வெளியில் இருந்து பெண்கள் கேட்கிறார்கள்.

 அடி ! சில் வண்டு மாதிரி சத்தம் போடாதீர்கள் ! இதோ, வந்து விட்டேன் ! “ என்கிறாள் உள்ளே இருக்கிறவள்.

தெரியுமடி உன்னை ! நீ பெரிய வாய்த் துடுக்குக்காரி ! “ என்கிறார்கள் வெளியே நிற்பவர்கள்.

நல்லதடி அம்மா ! அது நானாகவே இருக்கட்டும் ! இப்போது என்ன செய்ய வேண்டும் என்கிறாய்?”.

ஒன்றுமில்லை ! நீ உடனடியாக எழுந்து வா ! அதுதான் வேண்டும் !”

நல்லது ! எல்லோரும் வந்து விட்டீர்களா ?”

“ வந்துவிட்டோம். வந்து எண்ணிப் பார் ! வலிமை பொருந்திய யானையைக் கொன்றவனை, எதிரிகளை அழித்த வல்லவனை, மாயவனை எல்லோரும் பாடுவோம் ! வாருங்கள்

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:
---------------------------

எல்லே ! = அடியேய் ! (ஆங்கிலத்தில்  ஹலோ” (HELLOW): தமிழில் எல்லே ! “ ; இன்னும் உறங்குதியோ = இன்னுமா உறங்குகிறாய் ?; சில்லென்று = சில் வண்டு போல சப்தம் போட்டு; அழையேன்மின் = என்னை அழைக்காதீர்கள்;  நங்கைமீர் = பெண்களே !; போதருகின்றேன் = வருகிறேன்; வல்லை உன் கட்டுரைகள் = உறுதியில்லாத  உன் பேச்சினைக் கேட்க நாங்கள் வரவில்லை; பண்டே உன் வாயறிதும் = உன்னைப் பற்றி எங்களுக்கு அந்த நாளிலிருந்தே தெரியும் ; வல்லீர்கள் நீங்களே = சரி நீங்களே வாருங்களடி ! ; நானேதான் ஆயிடுக = நான் பேச்சு மாறினவளாகவே இருக்கட்டும்; ஒல்லை நீ போதாய் = விரைவாக நீ எங்களுடன் வா !; உனக்கென்ன வேறுடையை = உங்களுக்கென்ன நான் கருத்து மாறுபாடு உடையவளாகவே இருந்து விட்டுப் போகிறேன்; எல்லாரும் போந்தாரோ = சரி சரி எல்லோரும் வந்துவிட்டார்களா?; போந்தார் = வந்துவிட்டார்கள்; போந்து = நீயே வந்து ; எண்ணிக்கொள் = எண்ணிக் கொள்ளடி !; வல்லானை = வலிமை உடையவனை; மாயனை = மாயச் செயல்கள் புரியும் கண்ணனை; பாடு ஏல்  ஓர் = போற்றிப் பாடி வணங்குவோம் ; எம்பாவாய் = பதுமை போன்ற அழகிய பெண்ணே !

-------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,14.]
{29-12-2018}
-------------------------------------------------------------------------------------------------------------
         “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !
-------------------------------------------------------------------------------------------------------------