name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (14) உங்கள் புழைக்கடை !

புழைக்கடையில் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்து விட்டன !


உங்கள்  புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
.........செங்கழுநீர்  வாய்நெகிழ்ந்து  ஆம்பல்வாய்  கூம்பினகாண் !
செங்கல்  பொடிக்கூறை  வெண்பல்  தவத்தவர்
.........தங்கள் திருக்கோயில்  சங்கிடுவான்  போகின்றார்
எங்களை  முன்னம்  எழுப்புவான்  வாய்பேசும்
.........நங்காய் எழுந்திராய் ! நாணாதாய்  நாவுடையாய் !
சங்கொடு சக்கரம்  ஏந்தும்  தடக்கையன்
.........பங்கயக் கண்ணானைப்  பாடு ஏல் ஓர்  எம்பாவாய் !

------------------------------------------------------------------------------------------------------------

பொருள்:-
---------------

அடி அம்மா ! உங்கள் புழைக்கடைத் தோட்டத்துக் குளத்தில் காலையில் மலரும் செங்கழுநீர்ப் பூக்கள் மலர்ந்து விட்டன.  இரவில் மலரும் அல்லிப்பூக்கள் மீண்டும் மொட்டாகி விட்டன.  பொழுது புலர்ந்துவிட்டது.  காவி அணிந்தவர், வெள்ளைப் பற்கள் கொண்ட தவ முனிவோர்கள் கண்ணன் திருக்கோயிலுக்கு  வணங்குவதற்குப் போய்க் கொண்டிருக்கிறார்கள். ஏடி ! எப்போதும் எங்களை நீயே எழுப்புவதாக வாய் வீச்சு வீசுவாயே, இப்பொழுது நாங்களல்லவா உன்னை எழுப்ப வேண்டியிருக்கிறது.  எழுந்திரு ! எழுந்திரு ! அந்தச் சங்கு சக்கரம் ஏந்திய  கார்மேக வண்ணனைப் பாடிப் பணிந்து புகழ்ந்திட எழுந்து வா ! கோபிப் பெண்ணே ! எழுந்து வா !

-------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-
--------------------------

புழைக்கடை = வீட்டின் பின் பக்கம்; வாவி = குளம் (பொய்கை); செங்கழுநீர் = செங்குவளைப் பூ; வாய் நெகிழ்ந்து = இதழ் விரித்து மலர்ந்துவிட்டது; ஆம்பல் = அல்லிப் பூ; வாய் கூம்பின காண் = இதழ் குவித்துக் கூம்பிவிட்டன; செங்கல் பொடி = செங்கல் நிறம் போன்ற காவி வண்ணமுடைய ; கூறை = ஆடையை அணிந்து; வெண்பல் தவத்தவர் = முனிவர்கள் ; திருக்கோயில் சங்கிடுவான் = திருக்கோயிலில் கூடுவதற்கு; போகின்றார் =  செல்கின்றனர்; எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்= நான் வந்து உங்களையெல்லாம் எழுப்பி அழைத்து வருவேன் என்று வாய் வீச்சுக் காட்டினாயே; நங்காய் எழுந்திராய்= உன் பேச்சுக்கு மாறாக இன்னும் உறங்கிக் கொண்டு இருக்கிறாயே ! பெண்ணே ! எழுந்திரு !; நாணாதாய்  நாவுடையாய் = உனக்கு வெட்கமாக இல்லையா; இப்போதாவது  எழுந்திரு ! சங்கொடு சக்கரம் = சங்கும் சக்கரமும் ; ஏந்தும் தடக்கையன் = தன் கைகளில் ஏந்தியுள்ள கண்ணபிரான் ; பங்கயக் கண்ணானை = தாமரை போன்ற கண்களை உடைய கண்ணனை; பாடு ஏல் ஓர் = போற்றிப் பாடி வணங்குவோம் !!; எம்பாவாய் = பதுமை போன்ற பெண்ணே ! எழுந்து  வாராய் !

------------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,13.]
{28-12-2018}

-----------------------------------------------------------------------------------------------------------
         “தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற 
கட்டுரை !
-----------------------------------------------------------------------------------------------------------