name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

செவ்வாய், செப்டம்பர் 03, 2019

திருப்பாவை - (03) ஓங்கி உலகளந்த !

உலகத்தை,  தன் ஒரே காலடியால் அளந்தவன் !

பச்சைமா மலை போல் மேனி ! பவளவாய் கமலச் செங்கண் ! அந்த மாலவனைப் பாடிப் பராவினால், மாதம் மும்மாரி பொழியும்; கோகுலம் குடங் குடமாய்ப் பால் கறக்கும் என்கிறார் ஆண்டாள் ! பாடலைப் பார்ப்போமா !

-----------------------------------------------------------------------------------------------------------
பாடல் (03)
-----------------------------------------------------------------------------------------------------------

ஓங்கி  உலகளந்த உத்தமன் பேர்பாடி
........நாங்கள்நம்  பாவைக்குச் சாற்றிநீ  ராடினால்
தீங்கின்றி  நாடெல்லாம்  திங்கள்மும் மாரிபெய்து
.........ஓங்குபெருஞ்  செந்நெல்  ஊடு கயலுகள
பூங்குவளைப்  போதில்  பொறிவண்டு  கண்படுப்பத்
.........தேங்காதே  புக்கிருந்து  சீர்த்த  முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளற் பெரும்பசுக்கள் 
.........நீங்காத செல்வம்  நிறைந்தேலோ ரெம்பாவாய் !

-------------------------------------------------------------------------------------------------------------
பொருள்:-
---------------

உலகம் முழுவதையும் தன் ஒரே காலடியால் அளந்த உத்தமன் அவன் ! அவன் பெயரைப் பாடி நோன்பிருந்து நீராடினால் , நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்யும் ! செந்நெல் வயலில் மீன்கள் விளையாடும் !  குவளை மலரில் வண்டுகள் நிம்மதியாகத் தூங்கும் ! ஆவினங்கள் வள்ளல்கள் போல் குடம் குடமாய்ப் பால் கொடுக்கும் ! குறையாத செல்வம் குவிந்து கிடக்கும் ! வாருங்கள் ! கண்ணனைப் பாடுவோம் !
--------------------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள் :-
---------------------------

உலகளந்த உத்தமன் = கண்ணன்; பாவைக்குச் சாற்றி = பாவை நோன்பிருந்து கண்ணனைப் பாடி ; மும்மாரி = திங்கள் தோறும் மூன்று முறையாவது மழை பெய்யும் ; ஓங்கு பெருஞ் செந்நெல் = உயர்ந்து வளர்ந்து விளைந்திருக்கும் செந்நெல்; ஊடு = வயல்களின் ஊடே ; கயல் உகளும் = மீன்கள் துள்ளி விளையாடும்; குவளைப் போதில் = செங்கழுநீர் மலரில்; கண் படுப்ப = கண்ணுறங்கும்; தேங்காதே =  நிறைவாகவே; புக்கிருந்து = புகுந்திருந்து (மடியில் புகுந்து நிறைந்து); சீர்த்த முலை பற்றி = மடியைப் பற்றிக் கறக்கும் போது; வாங்கம் = கடல் (போல) ; குடம் நிறைக்கும் = குடங் குடமாய்ப் பால் பொழிந்து நிறைக்கின்ற; செல்வம் நிறைந்து = செல்வம் பெருகிட ; ஏலோர் = ஏத்திப் பாடி வணங்குவோம்; பாவாய் = பதுமை போன்ற பெண்களே !

-----------------------------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணி மன்றம்.
[தி.: 2049, சிலை,02.]
{17-12-2018}

-----------------------------------------------------------------------------------------------------------
      
  ”தமிழ்ப் பணி மன்றம்” முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற
 கட்டுரை !

-----------------------------------------------------------------------------------------------------------