name='description'/> தமிழ்ப் பணி மன்றம்

ஞாயிறு, செப்டம்பர் 01, 2019

திருப்புகழ் - முத்தைத்தரு பத்தித் திருநகை !

முத்துப்  போன்ற பல்வரிசையுடைய  தேவயானையின் தலைவனே !

முத்தைத்தரு பத்தித் திருநகை

.....அத்திக்கிறை சத்திச் சரவண

..........முத்திக்கொரு வித்துக் குருபர..........எனவோதும்,


முக்கட்பர மற்குச் சுருதியின்
.
....முற்பட்டது கற்பித் திருவரும்

..........முப்பத்துமு வர்க்கத் தமரரும்..........அடிபேண,


பத்துத்தலை தத்தக் கணைதொடு

.....ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு

..........பட்டப்பகல் வட்டத் திகிரியில்..........இரவாகப்


பத்தற்கிர தத்தைக் கடவிய

.....பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்

..........பட்சத்தொடு ரட்சித் தருள்வதும்..........ஒருநாளே !


தித்திதெய ஒத்தப் பரிபுர

.....நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
.
.........திக்கொட்கந டிக்கக் கழுகொடு..........கழுதாடக்


திக்குப்பரி அட்டப் பயிரவர்

.....தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு

..........சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக.................எனவோதக்


கொத்துப்பறை கொட்டக் களமிசை

.....குக்குக்குகு குக்குக் குகுகுகு

..........குத்திப்புதை புக்குப் பிடியென..........முதுகூகை


கொட்புற்றெழ நட்பற் றவுணரை

.....வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி

..........குத்துப்பட ஒத்துப் பொரவல............பெருமாளே !

----------------------------------------------------------------------------------------------------

சொற்பொருள் விளக்கம்
---------------------------------------------------------------------------------------------------
     முத்தைத்தரு பத்தித் திருநகை = முத்துப் போன்ற அழகான
   
   பல்வரிசையும் புன்னகையும் அமைந்த

அத்திக்கு இறை = தேவயானை எனப் பெயர் விளங்கும் தேவியின் 

தலைவனே !

சத்திச் சரவண  = சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் 

கடவுளே !

முத்திக்கொரு வித்துக்குருபர = மோட்சம் எனும் வீடுபேறு அடைய 

விதையாக விளங்கும் ஞான குருவே !

எனவோதும், முக்கட்பரமற்கு = என்று துதிக்கும் முக்கண்ணனாகிய 

பரமாசிவனார்க்கு,

சுருதியின் முற்பட்டது கற்பித்து = வேதங்களுக்கு முதன்மையான 

ஓம் எனும் முளை மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் = (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய 

இருவரும்

முப்பத்துமு வர்க்கத்து அமரரும் அடிபேண = முப்பத்து முக்கோடி 

தேவர்களும் அடிபணிய நின்றவனே !

பத்துத்தலை தத்தக் கணைதொடு = இராவணனது பத்துத் தலைகளும் 

சிதறி விழுமாறு அம்பை விட்டு

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது = ஒப்பற்ற மந்த்ர மலையை 

மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக = ஒரு பகற் பொழுதை 

வட்டமான சுதர்சனச் சக்கராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய = நண்பனாகிய அர்ச்சுனனுக்குத் 

தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் = பசுமையான நீலமேக 

வண்ணனான திருமால் பாராட்டும் பரம்பொருளே !

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே = பரிவோடு என்னைக் 

காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ ?

- - - - - - - -- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
       (இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த         போரினை விரிவாக வண்ணிக்கிறது)
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - 

தித்தித்தெய ஒத்தப் பரிபுர = தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து 

சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி  = நாட்டியப் பாதங்களை வைத்து

காளிதேவி

திக்கொட்க நடிக்க = எண்திசையும் சுழன்று தாண்டவம் செய்யவும்,

கழுகொடு கழுதாட = கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்

திக்குப்பரி அட்டப் பயிரவர் = எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத் 

தாங்குகின்ற எட்டுப் பைரவர்கள்

சித்ரப் பவுரிக்கு = இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக எனவோத

தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடகஎன்ற தாள 

ஓசையைக் கூறவும்

கொத்துப்பறை கொட்ட = கூட்டமாய்ப் பற்பல பறை வாத்தியங்களை

அதே தாளத்தில் முழங்கவும்

களமிசை முதுகூகை = போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென 

கொட்புற்றெழ = ”குக்குக்குகு குக்குக் குகுகுகுஎன்ற ஓசையோடு 

குத்திப் புதை, புகுந்து பிடிஎன்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று 

மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை = நட்பு உணர்வு தவிர்த்து பகைமை 

மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப் பலியிட்டுக் குலகிரி குத்துப்பட = கொன்று பலி கொடுத்து

அசுரர் குல மலையான கிரவுஞ்ச மலை தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே ! = அறவழி தவறாமல் போர் செய்ய 

வல்ல பெருமாளே !

-------------------------------------------------------------------------------------------------------
 பொழிப்புரை:
--------------------------

தித்தித்தெயஎன்ற தாளத்துக்கு ஒத்து, சிலம்புகள் அணிந்த நாட்டியப் 

பாதங்களை வைத்து காளிதேவி எண்டிசையும் சுழன்று தாண்டவம் 

செய்யவும், கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும், எட்டுத் 

திக்குகளிலும் உலகங்களைத் தாங்குகின்ற பைரவர்கள் இந்த அழகிய 

கூத்துக்கு ஏற்பதொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடகஎன்ற 

தாள ஓசையைக் கூறவும், கூட்டமாகப் பற்பல பறை வாத்தியங்களை 

அதே தாளத்தில் முழக்கவும், போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்” 

குக்குக்குகு குக்குக் குகுகுகுஎன்ற ஓசையோடு, “குத்திப் புதை, புகுந்து 

பிடி  என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும், நட்பு 

உணர்வு தவிர்த்து பகைமை மனப்பான்மையே கொண்ட அசுரர்களைக் 

கொன்று, பலிகொடுத்து, அசுரர் குல மலையான கிரவுஞ்ச மலை தூளாக

அறவழி தவறாமல் போர் செய்ய வல்ல பெருமாளே ! என் முருகப் 

பெருமானே !


முத்துப் போன்ற அழகான பல் வரிசையும், புன்னகையும் அமைந்த  

தேவயானை எனப் பெயர் விளங்கப்பெறும் தேவியின் தலைவனே

சக்திவேல் என்னும் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே

மோட்சம் எனும் வீடு பேறு அடைய விதையாக விளங்கும் ஞானகுருவே 

!” என்று துதிக்கும் முக்கண்ணன் ஆகிய பரமசிவனார்க்கு வேதங்களுக்கு 

முதன்மையான   ஓம்  என்னும்  முளை  மந்திரத்தை  உபதேசித்து,    

மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள ) பிரம்மா, திருமால் ஆகிய இருவரும்

முப்பத்து முக்கோடித் தேவர்களும் அடிபணிய நின்றவனே !


இராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு

ஒப்பற்ற மந்த்ர மலையை மத்தாகக் கொண்டு பாற்கடலைக் கடைந்து

ஓரு பகற்பொழுதை வட்டமான சுதர்சனச் சக்கராயுதத்தால் இரவு ஆக்கி

பக்தனாகிய அர்ச்சுனனுக்கு தேர்ப்பாகனாக வந்து, தேரினைச் செலுத்திய

பசுமையான நீலமேக வண்ணனான  திருமால் பாராட்டும் பரம்பொருளே

என் முருகப் பெருமானே ! பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் 

ஒன்றும் உண்டோ  ? அஃது எந்நாளோ ?

---------------------------------------------------------------------------------------------------
          ”தமிழ்ப் பணி மன்றம் முகநூற் குழுவில் வெளியிடப் பெற்ற கட்டுரை.
---------------------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
ஆட்சியர்,
தமிழ்ப் பணிமன்றம்.
[தி.:2050,மீனம்,13]
{27-03-2019}
------------------------------------------------------------------------------------------------------